செடிகள் வளர்ப்பது இப்போது அரிதாகிவிட்டது. ஆனால் நம் வாழ்க்கை செடி, கொடி, மரங்கள் என இயற்கையுடனானதாகத்தான் இருந்தது. ஆனால் நகரமயமாக்கல் பெருகப் பெருக மரம், செடிகள், கொடிகள் வளர்ப்பது குறைந்துவிட்டது. ஆனால் சமீப காலமாக மக்கள் செடிகள் வளர்ப்பில் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.
பொதுவாகச் செடிகள் அழகுக்காகத்தான் வளர்க்கப்படுகின்றன. அன்றாடப் பயன்பாட்டுக்காகக் காய்கறிச் செடிகளும் வளர்க்கப்படுகின்றன. ஆனால் வீட்டுக்கு அழகை மட்டுமல்ல வீட்டில் வசிப்பவர்களுக்கு நல் ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியவை செடிகள். நகர நெருக்கடிகளுக்குள் தோட்டம் அமைத்துச் செடி வளார்ப்பது சாத்தியமான காரியமல்ல. மேலும் செடி வளர்ப்பதற்குச் சிலர் தயங்குவதுண்டு.
காரணம் என்னவென்றால் செடி வளர்ப்பதால் சிறிய சிறிய பூச்சிகள், மரவட்டை, கொசுக்கள் வரக்கூடும் என நினைப்பார்கள். ஆனால் உண்மையிலேயே கொசுக்களை விரட்டும் இயற்கை வேதிப் பொருள்கள் நம் பாரம்பரியச் செடிகளில் நிறைந்துள்ளன.
சோற்றுக் கற்றாழை, நொச்சி போன்ற செடிகளில் கொசுக்களை விரட்டக்கூடிய வேதிப் பொருள் நிறைந்துள்ளன. இவை அல்லாது சாமந்திப்பூ, சிட்ரோனெல்லா புல், லெமன் பாம், துளசி செடி, லாவெண்டர் செடி இந்தப் பண்புகள் உள்ளன. ஆக இந்த மாதிரியான செடிகளை வளர்ப்பதால் நமக்கு இருவிதமான பயன்கள் கிடைக்கும். வீட்டுக்கு அழகும் கிடைக்கும். கொசுக்களை விரட்டவும் முடியும். கொசுக்களை விரட்ட நாம் பலவிதமான வேதிப் பொருள்களை நாடுவது பயனளிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.