சொந்த வீடு

அடுக்குமாடி குடியிருப்புகள்: நன்மைகள் என்னென்ன?

முருகேஸ்வரி ரவி

தான் வாழும் வீட்டை ஒருவர் எத்தனை தூரம் நேசிக்கிறார் என்பது அவர்தம் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம். சொந்த வீடோ வாடகை வீடோ தன் வீட்டைப் பற்றி பேசும்போது அவர்தம் பேச்சில் பெருமை கொப்பளிக்கும்.

இன்றைய காலகட்டத்தில் நகர்ப்பறங்களில் வீடு என்பது அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவே உள்ளன. மக்கள் தொகை மிகுந்த பெரு நகரங்களில் தனி வீடு என்பது எட்டாத கனவு என்பதை உறுதிபடக் கூறலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளே மக்களின் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மழைக்காலக் காளான்கள் போல நகரங்களெங்கும் தோன்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளே இதற்குச் சான்று.

நகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் வீட்டைக் கட்டமைப்பது என்பது இயலாத காரியம். அனைத்து விதமான சமூகக் கட்டமைப்புகள் கொண்ட பகுதியில் வீட்டு மனைகள் காண்பது அரிதாகிவிட்டது. அதனால் சொந்த வீட்டுக் கனவில் மிதக்கும் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர். மாத வருமானத்தில் வாழ்பவர்களும், தொழில் முனைவோரும் இதனை சிறந்த முதலீடுகளாகப் பார்கின்றனர்.

அடுக்குமாடிக் குடியிருப்பு தரும் பாதுகாப்பு

நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கையை விரும்பாதவர்கள் பலர் இருப்பினும் அது தரும் சவுகர்யங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வீட்டுப் பராமரிப்பு என்பது மிகப் பெரிய பணி. கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்குச் செல்லும் இந்தக் கால கட்டத்தில் சிறு, சிறு ரிப்பேர் வேலைகள் ஏற்ப்பட்டால் தனி வீடு என்றால் திண்டாட்டாம்தான். அடுக்குமாடிக் குடியிருப்பு எனில் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பணியாளர்கள் அதை நிவர்த்தி செய்து விடுகின்றனர். திடக்கழிவு, கழிவு நீர்அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவாய் கிடைக்கின்றன.

உலகில் எவரும் சமரசம் செய்து கொள்ள விரும்பாதது பாதுகாப்பு. அது அடுக்குமாடிக் குடியிருப்பில் செக்யுரிட்டி மூலம் வழங்கப்படுகிறது. காவலாளிகள் பலர் நியமிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். உள்ளே வரும் எவரும் பரிசோதிக்கப்பட்டே அனுப்பப்படுகின்றனர். அதனால் திருட்டு பயம் கிடையாது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுவாக தரைத்தளம் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சீரான படிக்கட்டுகளும் மற்றும் மின்தூக்கிகளும் அமைக்கப்படுகின்றன.

மின்தடை ஏற்படும் நேரங்களில் அவற்றை இயக்குவதற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்கெனப் பூங்காவும், வயதில் மூத்தோர் நடை பயில நடைமேடையும் பொதுவாக அனைத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் உள்ளன. இதர வசதிகளாக உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், மருந்தகம், குழந்தைகள் காப்பகம், பல்பொருள் அங்காடி போன்ற வசதிகளும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் செய்து தரப்படுகின்றன. இப்படி மக்களுக்குத் தேவையான அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிச் சிறந்த தொழில்நுட்பத்தின் சின்னமாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் திகழ்கின்றன.

வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள். ஒரே இடத்துக்குள் அனைத்துப் பொருட்களையும் இடம்பெறச் செய்தாலும் அறையை அலங்காரத்தால் அழகுபடுத்தி விடுகிறார்கள். அது போன்று திட்டமிட்டுச் செயல்பட்டால் சிறிய இடத்திலும் கனவு இல்லத்தைக் கச்சிதமாய்க் கட்டமைத்து விடலாம். இலட்சக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கிய பின் அதன் உள்ளமைப்பில் கவனம் செலுத்தினால் வீடு சிறப்பாக அமையும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

அடுக்குமாடி வீடுகளின் உள்ளமைப்பில் சின்னச் சின்ன சங்கதிகளைச் சரிபார்த்தால் மிகச் சிறந்ததாக உங்கள் வீட்டை மாற்றிவிட முடியும். வரவேற்பறைக்கு அதிக இடத்தை ஒதுக்கினால் வீடு சிறியதாகத் தோன்றும். சாப்பிடும் அறை, சமையலறை போன்றவற்றை வரவேற்பறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கலாம். குளியலறை, கழிவறை போன்றவற்றைத் தனித்தனியே அமைத்தால் அதுவே அதிக இடத்தை ஆக்ரமித்து விடும். அதன் ஒரு அங்கமாக வாஷ்பேசின் அமைத்தால் இடம் மீதியாகும். இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறிய வீடுகூட சிறிது விசாலமாய்த் தெரியும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவோர் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அங்கீகாரச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், சட்ட வல்லுநர் ஒப்புதல் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவற்றைச் சரிபார்க்க வேண்டும். கட்டப்பட்ட இடத்துக்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ் உள்ளனவா என்று ஆராய வேண்டும். அடுக்குமாடிக் குயிருப்பின் மாடித் தளங்கள் அமைக்க அனுமதிபெறப்பட்டுள்ளனவா என்பதை விசாரித்து அறிய வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என்பது மட்டும் முயக்கியமல்ல. அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதும் முக்கியம்.

இவ்வாறு அவசர உலகில் நகரத்து சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வாழ்வியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவை கான்கிரீட் தோட்டம் என்றாலும் நம் மனமென்னும் வண்ணத்துப்ப்பூச்சி விரும்பி வாழும் உறைவிடம். வாழ்க்கையையே சங்கீதமாக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அனைவரும் விரும்பும் பூலோக சொர்க்கம் என்றால் மிகையல்ல.கவிப்பேர ரசு வைரமுத்துவின் வைர வரிகளில் கூறுவதென்றால்..

“இது மாடி வீடு…/ அட கோயில் கொஞ்சம் போரடித்தால்/தெய்வம் வந்து வாழும் வீடு...”

வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாகக் கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.

SCROLL FOR NEXT