சொந்த வீடு

வாசகர் பக்கம்: வீடு உண்டு; ஜன்னல் இல்லை

ஜி.பிருந்தா

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க விரும்பிய என் அனுபவத்தைச் சொல்கிறேன். இந்த அனுபவத்தின் மூலம் அடுக்குமாடி வீடு கட்டுமான நிறுவனங்களின், அதுவும் பெயர் வாங்கினவர்கள்/முன்னணியில் இருப்பவர்கள் என்பவர்களின் தற்போதைய போக்கைப் பற்றிச் சொல்கிறேன். அவ்வப்போது செய்திகளில் ரியல் எஸ்டேட் மந்தமாக உள்ளது என்று கூறப்படுகிறது. மழை கொட்டியுள்ளது . தாழ்வான இடங்களின் அடுக்குமாடி வீடுகளின் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்கிறார்கள். ஆனால் மாறாக ரத்த அழுத்தத்தைப் போல் ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. கேரளாவைப் போல் படகில்கூடச் செல்லலாம் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது!

இது இப்படியிருக்க கட்டுநர்கள் ஒரு புது உத்தியைக் கையாள்கிறார்கள். வீட்டில் வெறும் சுவர்கள் மட்டும்தான் (wall to wall) கொடுப்பார்களாம். அலமாரி கிடையாது. பரண் கிடையாது. கிரில் எங்குமே கிடையாது (பால்கனி, ஜன்னல் உட்பட ) இதற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன தெரியுமா? பால்கனியில் கிரில் போடக் கூடாது என்று சி.எம்.டி.ஏ விதிமுறை சட்டம் போட்டிருக்கிறது. ஏனென்றால் தீப்பிடித்தால் எப்படி உள்ளே வருவார்கள் எனக் கேள்வி கேட்கிறார்களாம்.

பெரும் கட்டுமான நிறுவனங்கள்தான் பெரும்பாலும் இம்மாதிரியான உத்தியைக் கையாள்கிறார்கள். ஆனால் இது சி.எம்.டிஏ.வின் விதிமுறை என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில், வளர்ந்துகொண்டிருக்கும் இரண்டாவது, மூன்றாவது நிலையில் இருக்கும் கட்டுமான நிறுவனங்கள் இதையெல்லாம் வைத்து முழுமையாகத்தான் கொடுக்கிறார்கள். அதுவும் இவர்களைவிடக் குறைந்த விலையில். அவர்களுக்குத் தனிச் சட்டமா?

அவர்கள் சொல்லும் மற்றொரு காரணம் வேடிக்கையாக இருக்கிறது. வாங்குபவர்கள் வேண்டாம் என்று சொல்கிறார்களாம். எதை, பாதுகாப்பையா? மேலும் வருபவர்கள் குடித்தனம் செய்யத்தானே வருகிறார்கள்? சாமான் செட்டைத் தலை மீது வைத்துக்கொள்வார்களா, அல்லது தரை மீது இறைத்து விடுவார்களா?

அந்தப் பகுதியில் இருக்கும் விலையை விட ரூபாய் 1000-2000 வரை ஒரு சதுர அடிக்குக் கூடுதலாக வாங்குகிறார்கள். அதாவது அவர்கள் சொல்லும் விலை கிட்டத்தட்ட ஒரு கோடி அல்லது அதற்கு மேலும் ஆகுமாம். இதைத் தவிர கிரில், பரண், அலமாரிகளுக்கு வாங்குபவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டுமாம். அதற்குச் சட்டத்தையும் தங்களுக்குச் சாதகமாக இழுத்துக் கொள்கிறார்கள். கேட்பவன் கேனைப் பயல் என்றால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்பார்கள் என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இவர்களை என்ன சொல்வது?

SCROLL FOR NEXT