வீட்டு அலங்காரத்தின் முக்கியமான அம்சங்களில் வெளிச்சமும் ஒன்று. வீட்டை அழகாக அலங்காரம் செய்துவிட்டு, அதை ரசிப்பதற்குப் போதுமான வெளிச்சம் இல்லாவிட்டால், எல்லாமே வீண்தான். வெளிச்சத்தால் ஓர் இடத்துக்கேற்ற சரியான மனநிலையையும், சூழலையும் உருவாக்க முடியும். அதனால், வீட்டு அலங்காரத்துக்குத் திட்டமிடும்போது, எந்தெந்த இடத்தில் எந்த மாதிரி விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்பதையும் சேர்த்துத் திட்டமிட வேண்டும். வீடு கட்டும்போதே, எங்கெல்லாம் மின்னிணைப்பு தேவைப்படும் என்பதைக் கட்டிட ஒப்பந்தாரரிடம் தெரிவித்துவிடுங்கள். வீட்டின் விளக்குகளை எப்படி அமைக்கலாம் என்பதற்கான சில வழிமுறைகள்...
சாப்பாட்டு அறை விளக்குகள்
சாப்பாட்டு அறையில், சாப்பாட்டு மேசை பொலிவுடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள். நீங்கள் விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது அது உங்கள் மேசையின் அளவுக்குப் பொருந்துமாறு தேர்ந்தெடுங்கள். ஒரே விளக்காகத் தேர்ந்தெடுக்க முடியவில்லையென்றால், வெவ்வேறு விளக்குகளை வாங்கியும் இணைத்துக்கொள்ளலாம். சாப்பாட்டு மேசைக்கும், விளக்குகளுக்கும் 30- 38 அங்குலம் வரை இடைவெளி இருக்க வேண்டும். பளிச் வெளிச்சம் தரும் விளக்குகளைவிட மங்கலான வெளிச்சம் தரும் விளக்குகள் சாப்பாட்டு மேசைக்குப் பொருத்தமாக இருக்கும்.
கேபினெட் விளக்குள்
சமையலறையில் இருக்கும் கேபினெட்களின் ஓரத்தில் விளக்குகளைப் பொருத்த விரும்பினால், அதற்கேற்றபடி கேபினெட்டை வடிவமைக்கச் சொல்லுங்கள். இந்த விளக்குகளை கேபினெட்டின் மேற்புறத்தில் நடுவில் இருக்கும்படி அமைத்தால், வெளிச்சம் சீராகக் கிடைக்கும். அப்படியில்லாவிட்டால், ‘எல்இடி ஸ்டிரிப்’ விளக்குகளை அமைக்கலாம்.
டிராக் விளக்குகள்
டிராக் விளக்குகளில் நன்மை என்னவென்றால், ஒரே மின்னிணைப்பில் பல்வேறு இடங்களில் விளக்குகளைப் பொருத்திக் கொள்ளலாம். இந்த டிராக் விளக்குகள் பல புதுமையான வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. இவற்றைக் கூரையிலும் அமைக்கமுடியும். இது வீட்டின் கட்டிடக்கலைக்கு மெருகூட்டுவதாய் இருக்கும்.
டோ-கிக் விளக்குகள்
சமையலறை கேபினெட்களின் கீழே பொருத்தவதற்கு டோ-கிக் (Toe-Kick) விளக்குகள் ஏற்றவை. தரைதளத்தில் இருந்து வெளிச்சத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த விளக்குகள் உதவும். சமையலறையை இரவில் அழகாக மிளிரவைப்பதற்கு இந்த விளக்குகள் உதவும்.
ஸ்கான்ஸ் விளக்குகள்
குளியலறையில் பயன்படுத்துவதற்கு இந்த ஸ்கான்ஸ் விளக்குகள் (Sconce lighting) ஏற்றவை. கண்ணாடிக்கு அருகில் இவற்றைப் பொருத்துவது ஏற்றதாக இருக்கும். உங்கள் முகத்தின் உயரத்துக்குப் பொருந்தும்படி குளியலறைக் கண்ணாடிக்கு அருகில் இவற்றில் அமைக்கலாம்.
சுவரில் உங்களுக்குப் பிடித்த எஃபக்கட்டை உருவாக்குவதற்கு இந்த விளக்குகள் உதவும். இந்த விளக்குகள் இயல்பாகவே சுவரில் எஃபக்கெட்டை ஏற்படுத்தும்படி வடிவமைக்கப்படுகின்றன.
‘பாட்’ விளக்குகள்
அதிகமான வெளிச்சம் தேவைப்படும் அறைகளுக்கு ‘பாட்’ விளக்குகள் (Pot Lighting) ஏற்றவை. இவை நேரடியான வெளிச்சத்தைக் கொடுப்பதால் சில இடங்களுக்குத்தான் பொருந்தும். ஒன்றிரண்டு விளக்குகளைப் படுக்கையறை, வரவேற்பறை, சாப்பாட்டறையிலும் பயன்படுத்தலாம்.
படுக்கையறை விளக்குகள்
படுக்கையறை விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றை அலங்காரத்துக்குப் பயன்படுத்தப்போகிறீர்களா, இல்லை வெளிச்சத்துக்குப் பயன்படுத்தப்போகிறீர்களா என்பதைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். படுக்கையில் புத்தம் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதற்கேற்ற வகையில் படுக்கைக்குப் பக்கத்தில் விளக்குகளை அமைக்கலாம்.
படிக்கட்டு விளக்குகள்
படிக்கட்டுகளில் விளக்குகளை அமைப்பது இப்போது பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த விளக்குகளை அலங்காரத்துக்கு மட்டுமல்லாமல் பயன்பாட்டுக்கும் உதவும்படி அமைக்கமுடியும்.