சொந்த வீடு

கட்டுமானத் தொழிலுக்கு ஒரு புதிய நெருக்கடி

டி.செல்வகுமார்

ஏற்கனவே சரிவைச் சந்தித்து வரும் கட்டுமானத் தொழிலுக்கு, பிளம்பிங் மற்றும் மின்சாதனப் பொருட்களின் விலை உயர்வால் மேலும் ஒரு பலமான அடி விழுந்துள்ளது.

கட்டுமானத் தொழில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. அதனால் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள், வட்டியைக்கூடக் கட்ட முடியாத காரணத்தால், விலையைப் பெருமளவு குறைத்தாவது வீடுகளை விற்க முயல்கின்றன. அவ்வாறு விற்றவர்களில், தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் தொழிலையே விட்டுச் சென்றவர்களும் உண்டு.

கட்டுமானத் தொழில் நசிவுக்கு, அரசின் வழிகாட்டி மதிப்பு அதிகரித்ததே முக்கியக் காரணம் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். கிண்டியில் ஒரு சதுர அடி முன்பு விற்ற தொகையைக் காட்டிலும் கணிசமான அளவு குறைந்துள்ளது. அதனால் கிண்டியைத் தாண்டி போரூரில் வீடு கட்டிக் கொடுப்பவர்களின் நிலைமை மோசமாகி உள்ளது. கிண்டியிலே ஒரு சதுர அடி விலை குறைந்திருக்கும் நிலையில் போரூரில் அதைவிடக் குறைவான தொகைக்கே மக்கள் விலை பேசுகிறார்கள்.

இதன் காரணமாக சிறிய அளவில் கட்டுமானத் தொழில் செய்து வந்தவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. வீடு வாங்குவோருக்கு இப்போது நல்ல நேரம். ஆனால் வீடு கட்டி விற்பவர்களுக்கு மிகவும் கெட்டநேரம்.

இது குறித்து சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம், “கட்டுமானப் பொருட்களின் விலையுயர்வு என்றால் மணல், ஜல்லி, சிமெண்ட், இரும்புக்கம்பி உயர்வைத்தான் சொல்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பொருட்களின் விலை உயர்ந்தது. இதுமட்டுமல்லாமல், பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலையும் 20 சதவீதம் வரை உயர்ந்திருப்பது எங்களுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது.

ஏற்கனவே, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், வந்த விலைக்கு விற்றுவிட்டுப் போகிறார்கள். இந்த நிலையில், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை உயர்வு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சேவை வரியும் சேர்ந்துள்ளது. நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் என்றாகிவிட்டது” என்கிறார்.

மேலும் அரசின் வழிகாட்டி மதிப்பு ஒரு சதுர அடிக்கு ரூ.600-ல் இருந்து ரூ.1200 முதல் ரூ.1400 வரை உயர்த்தப்பட்டதுதான் இந்த நெருக்கடிகளின் தொடக்கம் என்கின்றனர் கட்டுநர்கள். இப்போது கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வோடு, பிளம்பிங், எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலையும் உயர்ந்திருப்பது கட்டுமானத் துறைக்கு இரண்டாவது அடி. சேவை வரி மூன்றாவது அடி. இப்படி அடிமேல் அடிவிழுந்து கொண்டே இருப்பாதல், இத்தொழிலை நம்பி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் தமிழகத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

“இத்தொழில் அதலபாதாளத்தில் விழுந்திருப்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை” என்கிறார் வெங்கடாசலம்.

பிளம்பிங் பொருட்களின் விலை உயர்வு குறித்து அபி வைரவன் பிளம்பிங் கம்பெனி பங்குதாரர் ரங்கநாயகி, “கடந்த இரண்டு ஆண்டுகளில் பிவிசி பைப்புகள், அதன் பிட்டிங்குகளின் விலை 20 சதவீதமும், தண்ணீர் குழாய், வாஷ்பேசின் விலை 15 சதவீதமும், தனி வீடுகள், அடுக்குமாடிகளில் பயன்படுத்தப்படும் ஒருமுனை மின் மோட்டார், மும்முனை மின் மோட்டார், நீர்மூழ்கி மின்மோட்டார் விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இதனால் விற்பனையில் சற்றுத் தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. கடனுக்குப் பொருட்கள் வாங்கிச் சென்ற கட்டுனர்கள், பணத்தைத் திருப்பித் தர தாமதம் செய்வதே இதற்குக் காரணம். ஆண்டு விற்பனையின் சராசரி வளர்ச்சியும் குறைந்துள்ளது” என்கிறார்.

மின்சாதனப் பொருள்கள் விற்பனையாளர்களும் கடந்த இரண்டாண்டுகளில் எலக்ட்ரிக்கல் பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், தங்கள் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். குறிப்பாக பிவிசி பைப்புகள், சாதாரண வயர், தடிமனான வயர், காப்பர் தயாரிப்புகள், சுவிட்சுகள், மின் விசிறி போன்றவற்றின் விலை உயர்ந்திருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக இருப்பதால், ஒரு சில பெரிய கம்பெனிகளைத் தவிர வேறு யாரும் புதிதாக வீட்டு வசதித் திட்டம் தொடங்குவதில்லை. அதனால் எலக்ட்ரிக்கல் பொருட்களுக்கான தேவை குறைந்து, விற்பனை பாதியாகிவிட்டது என்கின்றனர் அவர்கள்.

இந்த நிலை நீடித்தால், கட்டுமானத் தொழிலின் கதி அதோகதிதான். வருவாய், வணிக வரித் துறைக்கு அடுத்தபடியாக அரசுக்கு வருவாய் அள்ளித் தரும் கட்டுமானத் துறையைக் காப்பாற்றுவது அரசு கையில்தான் இருக்கிறது என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

அனுமதிகள் எளிமையாக வேண்டும்

புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்ற சலுகையைக் கட்டுமானத் தொழிலுக்கும் அளித்தால், அரசுக்கு மாதம் ரூ.600 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும் என்று ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் கூறுகின்றனர்.

தமிழகத்தில் புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் 30 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று சென்னையில் அண்மையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்தச் சலுகையை, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுனர்கள், கட்டுமானப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கினால் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும் என்கின்றனர் கட்டுனர்கள்.

கட்டுமானத் தொழிலைப் பொறுத்தவரை புதிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவோருக்கு அனுமதி வழங்க 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை ஆவதாகவும், அதனால், கட்டுமானத் தொழில் மட்டுமன்றி அது சார்ந்த தொழில்களும் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன என்றும் கட்டுனர்கள் ஆதங்கப்படுகின்றனர். இதன் காரணமாகக் கட்டுமானத் தொழிலுடன் தொடர்புடைய பொருட்கள் விற்பனையால் சேவை வரி மற்றும் விற்பனை வரி மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் கிடைப்பதில்லை.

கட்டுமானத் தொழிலுக்கு சிமெண்ட், மணல், ஜல்லி, இரும்புக் கம்பி, தண்ணீர் குழாய் உள்ளிட்ட பிளம்பிங் பொருட்கள், சுவிட்ச், வயர் உள்ளிட்ட எலக்ட்ரிக்கல் பொருட்கள், ஜன்னல், கதவு போன்ற தச்சு வேலை தொடர்பான பொருட்கள், டைல்ஸ், ஒட்டுப்பலகை (பிளைவுட்ஸ்), மைக்கா, பெயிண்ட், கண்ணாடி உள்பட 462 வகையான பொருட்கள் தேவைப்படுகின்றன.

கட்டுமானத் தொழிலுக்கு 30 நாட்களில் அனுமதி அளித்தால், மேற்கண்ட பொருட்களின் விற்பனை உடனே அதிகரிக்கும். சேவை வரி, விற்பனை வரி மூலம் அரசுக்கும் கணிசமாக வருவாய் கிடைக்கும் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

இத்தொழிலுக்காகத் தமிழகத்தில், தினமும் 60 ஆயிரம் மணல் லோடும், ஒரு கோடி சிமெண்ட் மூடைகளும் தேவைப்படுகின்றன. எங்களது கணக்குப்படி, புதிதாக வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவோருக்கு 30 நாட்களில் அனுமதி அளித்தால், பத்திரப் பதிவு மூலம் அரசுக்கு மாதம் ரூ.100 கோடி வரை வருவாய் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், கட்டுமானத் தொழில் சார்ந்த பொருட்கள் விற்பனையால் மாதம் வரி வருவாயாக ரூ.600 கோடிக்கு மேல் கிடைக்கும்.

முப்பது நாளில் அனுமதி அளிக்க முடியாததற்கு ஊழியர் பற்றாக்குறை முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சியில் ஊழியர் பற்றாக்குறையைப் போக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

அதுபோல, வழிகாட்டி மதிப்பைக் குறைத்தாலும் வருவாய் பலமடங்கு அதிகரிக்கும். வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தபோது 2007-ம் ஆண்டு மாதம் ரூ.10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இப்போது மாதம் ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே கிடைப்பதாகத் தெரிகிறது. கட்டுமானத் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயைப் பெருக்கிக் கொள்ள அரசு முன்வர வேண்டும் என்பது கட்டுநர்களின் விருப்பமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT