வீட்டை மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் கட்டுகிறோம். வீடு கட்டுவதில் உள்ள அத்தனை சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு அதில் குடியேறும் நாளுக்கான கனவுகளை மனதில் தேக்கி அந்தப் பணியைக் கடக்கிறோம். வீடு என்பது முழுமை பெற அதைச் சுற்றிச் சுற்றுச்சுவர் அமைய வேண்டும். சுற்றுச் சுவரால் மட்டுமே வீடு தனி அழகு பெறும் என்பதை மறந்துவிடலாகாது. வீட்டை அக்கறையுடன் அமைப்பது போல் சுற்றுச் சுவரையும் அமைக்க வேண்டும். அப்போதுதான் அது வீட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும்.
சுற்றுச் சுவர் வீட்டின் பெருமையையும் தன்மையையும் மவுனமாக எடுத்துரைக்கும். வீட்டுக்குள் நுழையாமல் வீட்டைக் கடந்துசெல்பவர்களையும் சுற்றுச் சுவர்கள் ஈர்த்துவிடும். வசித்தால் இப்படி ஒரு வீட்டில் வசிக்க வேண்டும் என்னும் ஆவலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் தன்மை வீட்டின் புற அமைப்புக்கும் சுற்றுச்சுவருக்கும் மட்டுமே உண்டு.
வீட்டின் சுற்றுச்சுவரை விதவிதமாக அமைக்கலாம். அவற்றைப் பொறுத்தவரை, அவை வீட்டின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். கண்கவர் காட்சியையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு தன்மையும் ஒன்றிணையும்போது நாம் அமைக்கும் வீடு உயர்தரமான அழகுணர்ச்சியை மனதில் உருவாக்க வல்லதாக அமையும். வீட்டு சுற்றுச் சுவரைக் கருங்கற்கள் கொண்டோ கான்கிரீட்டாலோ அழகான மரத்தின் உதவியோடோ அமைக்கலாம். நீங்கள் எந்த நிலத்தில் வீடு கட்டுகிறீர்களோ அதன் தன்மைக்கேற்ப வீட்டின் அழகு, பாதுகாப்பு போன்ற விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு சுற்றுக்சுருக்கான கட்டுமானப் பொருளைத் தேர்வுசெய்யலாம்.
கைதேர்ந்த வீடு வடிவமைப்பாளரின் துணையுடன் உங்கள் ரசனையையும் ஒன்றுசேர்த்து முடிவெடுத்தல் நலம். வீட்டின் சுற்றுச் சுவருக்கு வண்ணம் பூசுவதில் வீட்டைச் சுற்றிக் காணப்படும் வீடுகளின் வண்ணங்களையும் அருகிலுள்ள மரங்கள் போன்ற பிற விஷயங்களின் வண்ணத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடர் வண்ணங்களைக் கொண்ட சுவர்களில் இடையிடையே சிறிது காற்றோட்டத்துக்கு இடைவெளிவிட்டுக் கட்டும்போது காற்று உள்ளே வர வசதியாக இருக்கும். இதற்கான சிறு கிராதிகளைச் சுற்றுச் சுவரில் பொருத்தும்போது அவை அழகாகவும் இருக்கும். வீட்டின் வெப்பத்தைப் பராமரிக்கவும் உதவும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள்.
கட்டிட நுட்பத்துடன் மட்டும் வீட்டுப் பணியை அணுகாமல் அதில் அழகுணர்ச்சியையும் ரசனையையும் கலக்கும்போது வாழும் இல்லம் மனதுக்கு நிறைவானதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வீடு என்பது அழகிய, பாதுகாப்பான சுற்றுச் சுவரோடுதான் முழுமைபெறும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்