ஒரேமாதிரியான பணிச் சூழல்களில் சிக்கித் தவிப்பவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி விதவிதமான பொழுதுபோக்குகளை விரும்புகின்றனர். இவர்களுக்குச் செலவு ஒரு பொருட்டல்ல. இதற்கு எளிய உதாரணம்தான், வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் பூங்காக்கள், கடற்கரை, வனவிலங்கு காப்பகங்கள், பல விளையாட்டுகளை உள்ளடக்கிய தீம் பார்க்குகள் ஆகியவற்றில் குவியும் கூட்டம்.
இதுபோன்ற உப்பு சப்பில்லாத விளையாட்டெல்லாம் போரடிக்குதுப்பா என்பவர்களுக்கு, இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் திகில் விளையாட்டுகள் சென்னையின் சில ஷாப்பிங் மால்களில் இருக்கின்றன. இதெல்லாம் உள்ளூர் அமர்க்களங்கள்.
வித்தியாசமான புதிய அனுபவத்தைத் தரும் விடுதிகளுக்கும் ஹோட்டல்களுக்கும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரிய வரவேற்பு உள்ளது. அப்படிப்பட்ட உலகின் சிறந்த சில தீம் ஹோட்டல்களைப் பற்றிய சிறிய அறிமுகம்:
சிறையில் தங்க ஆசையா?
வித்தியாசமான எண்ணங்களின் கலவைதான் மனித மனம். இதில் நம் எல்லோருக்கும் நொடிப்பொழுது வந்து போகும் எண்ணம் சிறைச்சாலை எப்படி இருக்கும்? இந்த எண்ணத்தோடு வருபவர்களை, ‘கம்பி எண்ண’ வரவேற்கிறது, ஸ்லோவேனியாவிலிருக்கும் செலிகா விடுதி. அந்த நகரத்திலிருந்த பழமையான சிறைச்சாலை போன்றே அந்த விடுதியின் அறைகள் வடிவமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த விடுதியின் சிறப்பு.
கனவுக் கன்னி, கண்ணன்கள் நிறைந்த அறை
திருவல்லிக்கேணி மேன்ஷன் அறைகளிலும் மகளிர் விடுதிகளிலும் அவர்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் படங்கள் இருக்கும். இதேபோல மனம் கவர்ந்த ஹாலிவுட் ஸ்டார்கள் இடம்பெறும் சுவாரஸ்யமான படக் காட்சிகளோடு, உங்களின் மனம் கவர்ந்த பிரபலங்களோடு தங்கி இருக்கும் உணர்வைக் கொண்டுவருகிறது போர்ச்சுகலின் ரிவோலி சினிமா ஹாஸ்டல்.
விமானத்தில் தங்க ஆசையா?
ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம்ஸ் நகரிலிருக்கும் அர்லாண்டா விமான தளத்தில் ஒரு ஜம்போ ஜெட் விமானத்திலேயே இயங்கும் ஹோட்டல், ஜம்போ ஸ்டே ஹோட்டல். விமானத்தின் பைலட் இருக்கும் காக்பிட்தான், இந்த ஹோட்டலின் டீலக்ஸ் சூட். அதிலும் முன்பதிவு செய்து தங்கலாம்.
செல்லப் பிராணி வடிவில் ஹோட்டல்
உங்களுக்கு மிகவும் பிடித்த செல்லப் பிராணி நாய் என்றால், இடாகோ நாட்டிலிருக்கும் டாக்பர்க் பார்க் இன் ஹோட்டலை உங்களுக்கு மிகவும் பிடித்துவிடும். ஏனென்றால் இந்த ஹோட்டல் நாயின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஹோட்டலுக்கு உள்ளேயும் செல்லப்பிராணி நாயின் தோற்றத்தில் அலங்காரங்கள், பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.
காட்டு பங்களா
மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதி. அங்கு பிரம்மாண்டமாக ஒரு பங்களா. இருட்டை ஊடுருவிப் பார்க்கும் ஆந்தை. இந்தப் பின்னணியில் நீங்கள் கற்பனை செய்துவைத்திருக்கும் இடத்துக்குச் சற்றும் குறைவில்லாத திகிலை அளிக்கும் லண்டனின் ஜார்ஜியன் ஹவுஸ் ஹோட்டல். பணத்தைச் செலவு செய்து, பாதுகாப்பாக பயத்தை அனுபவிப்ப வர்களுக்கு ஏற்ற இடம் இது.
இயற்கைச் சூழலில் ஒரு விடுதி
மோன்டனா பிரதேசத்தின் இயற்கையின் மடியில் அமைக்கப்பட்டிருக்கும் விடுதி `தி ஹாபிட் ஹவுஸ்’. இந்த விடுதியிலிருந்து மலைகள், அருவிகள் இயற்கையின் திகட்டாத அம்சங்கள் அனைத்தும் உங்களுக்குக் காணக் கிடைக்கும். பால்ட்வின் போன்ற அரிதான கழுகு இனங்களையும் இங்கே காணலாம்.