வாஞ்சையுடன் வரவேற்கும், இன்முகத்தோடு வழியனுப்பும் இடமான வரவேற்பறை ஒரு வீட்டின் மிக முக்கியப் பகுதி.
வரவேற்பவரும், வரவேற்கப்படு வருக்குமான உறவின் தன்மையைப் புலப்படுத்தும் இடமாக வரவேற்பறை இருக்கிறது. வரவேற்பறையைத் தாண்டி வீட்டின் மையப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படும் உறவும் நட்பும் பலப்படுகிறது. ஆக உறவையும் நட்பையும் தீர்மானிக்கிற இடமாக வரவேற்பறை இருக்கிறது.
இந்த வகையில் எங்கள் வீட்டின் வரவேற்பறை எனக்குப் பிடித்தமானது. உறவுகளை யும் நட்புகளையும் வரவேற்கிற இடம் என்பதால் மட்டுமல்ல; மேலும் பல தனித் தன்மைகள் இருப்பதால் எங்கள் வீட்டில் எனக்குப் பிடித்த இடம் வரவேற்பறை.
கோடைக்காலத்தின் சொர்க்கம்
இரண்டு பக்கமும் ஜன்னலும், ஒருபுறம் வாசல்கதவு, மறுபுறம் மைய அறைக்குச் செல்லும் கதவு என வெளிச்சமும் காற்றோட்டமான இடம். ஜன்னல் அருகே ஒரு அழகான நீளமான பெஞ்ச் . இந்தப் பெஞ்சில் அமர்ந்தபடியே இடி, மின்னலுடன் மிரட்டும் கோடை மழையையும், பூத்தூவுவது போலத் தொடங்கி வேகமெடுக்கும் பருவகால மழையையும் ரசிக்கலாம். குளிர்காலத்தில் தேநீர் அருந்தியபடியே அதிகாலையின் பனிப் பொழிவை அனுபவிக்கலாம்.கோடைக்காலத்தில் எங்கள் வீட்டின் வரவேற்பறையைச் சொர்க்கம் என்றே சொல்லலாம். வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள் வரவேற்பரையை எப்போதும் குளுமையாக வைத்திருக்கும்.
அணில் குஞ்சுகளின் சேட்டை
மர மேஜையின் அருகேயுள்ள ஜன்னலிலிருந்து பார்த்தால் என் அம்மா உருவாக்கிய சிறிய, அடர்ந்த காடு தெரியம்.
குறு மரங்கள், பூச்செடிகள்,கொடிகள், காய்கறி தரும் செடிகள் எனப் பெரும்பாலான வீட்டுத் தாவரங்களால் நிறைந்தது எங்கள் தோட்டம். நார்த்தங்காய் மரம், சப்போட்டா மரம், சீத்தாப்பழம் மரம்,கொய்யாமரம், எலுமிச்சை மரம், நெல்லிக்காய் மரம் இத்துடன் சேர்த்து இரண்டு பெரிய ரெட் பயர் ட்ரீ மரங்கள். பெயர் சரிதானா எனத் தெரியவில்லை. அடர்ந்து வளர்ந்து சிகப்பு நிறத்தில் பூக்கும் மரம். பூக்களில் மல்லிகை, பிச்சிப்பூ, கனகாம்பரம், செம்பருத்தி, ரோஜா,சங்குப்பூ,நந்திவட்டை பூ. காய்கறிச் செடிகளில் பாகற்காய், பூசணி, சுரைக்காய், ஆவரை,வெண்டிக்காய்.
ஆடி 18 அன்று விதைத்து தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருமழையால் செழித்து காய்கள் காய்க்கத் தொடங்கியிருக்கிறது.
இவ்வளவு அடந்த காட்டில் பறவைகள், விலங்குகள் இல்லாமல் இருக்குமா? விலங்குகள் என்றால் பூனைக்குட்டியும், அணில்குஞ்சுகளும்தான். பூனைக்குட்டி, குட்டி போடுவது, அவற்றுடன் அங்குமிங்குமாக ஒடுவதோடு சரி. ஆனால் இந்த அணில் குஞ்சு, படு சேட்டை. கொய்யாமரத்தில் காய்கள் காய்க்கத் தொடங்கிவிட்டால் போதும் நாங்கள் பறிக்கும் முன்பே பறித்துக் கொஞ்சம்கூடப் பயமில்லாமல் எங்கள் முன்பே கொறித்துக்கொண்டிருப்பான்.
புதிய சிம்பொனி தொகுப்பு
எங்கள் தோட்டத்து வழியாகப் பறந்து சொல்லும் பட்டாம் பூச்சிகள் பூக்களில் அமர்ந்து இளைப்பாறிய பின் செல்லும் அழகே தனி. பட்டாம் பூச்சிகளுக்குப் போட்டியாகக் கிளிகளும், மினுகிட்டான் குருவி, இரட்டைவால் குருவி, சிட்டுக்குருவி, மைனா, காக்கைகள், கொக்குகள், தேனிசிட்டு, கருங்குயில்கள், இன்னும் சில பெயர் தெரியாத பறவைகளின் வேடந்தாங்கல் எங்கள் வீட்டுத் தோட்டம்.
பறவைகள் குடிக்க, குளிக்க தோட்டத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருக்கிறோம். மரத்தில் அமர்ந்து அங்குமிங்குமாகப் பார்த்து ஒவ்வொரு கிளையாக இறங்கித் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தபடியே , இறக்கைகளை வேகமாக அசைத்துப் பறவைகள் குளிக்கும் காட்சியை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இத்தனை பறவைகளும் எழுப்புகிற ஒசைகள் புதிய சிம்பொனி தொகுப்பு.
வசந்தத்தை அழைத்துவரும் வரவேற்பறை
இவற்றையெல்லாம் ரசித்தபடியே வரவேற்பறையின் ஜன்னல் அருகே அமர்ந்து காலை தேநீர் அருந்த, புத்தகம் படிக்க, காலை நாளிதழ்களைப் புரட்ட, உணவு உண்ண யாருக்குதான் பிடிக்காது? இந்த இடத்தில் உட்காருவதற்கு எனக்கும் என் அம்மாவுக்கும் மனைவுக்கும் இடையே போட்டியே நடக்கும்.
கோபம் மனம் சோர்ந்திருக்கிற நேரங்களில் அந்த பெஞ்சில் அமர்ந்து எழுந்தால் புத்துணர்ச்சி யோடு முகம் மலர்வதைப் பார்த்திருக்கிறேன்.
காலைத் தேநீர் அருந்த, பகல் தூக்கம்போட, தோட்டத்தில் வளரும் செடிகளின் வளர்ச்சியைக் கண்காணிக்க என என் அம்மாவின் பெரும்பாலான பொழுதுகள் வரவேற்பறை சோபாவில்தான்.
இவர்கள் இருவரும் விடும் இடைவெளி நேரம் எனக்கானது. காலை நாளிதழ்கள், வார மாத இதழ்கள் படிக்க, நாவல்கள், கவிதை, கட்டுரை தொகுதிகளைப் படிக்கத் தொடங்கினால் வரவேற்பறையிலிருந்து எனக்கான உலகம் விரியத் தொடங்கும்.
இப்போது “அப்பா, இங்க உக்காந்து படிச்சா பரீட்சையில நல்ல மார்க் கிடைக்குதுப்பா” என்ற படியே என் மகளும் எங்கள் மூவருக்கும் இடையே போட்டிக்கு வந்துவிட்டாள்.
இந்தப் பகுதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி. உங்கள் வீட்டின் பிடித்த பகுதி பற்றிய புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி: எனக்குப் பிடித்த வீடு, சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in