அழகான புல்வெளி, பூச்செடிகள் இவற்றுக்காகத்தான் பூங்காக்களுக்குப் போகிறோம். அந்த மாதிரியான புல்வெளியில் போய் அமரும்போது இயற்கையின் அன்னையின் மடியில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். இதே போன்று அழகு அழகான செடிகளை வீட்டு மாடியிலேயே தொட்டிவைத்து வளர்த்துவிடமுடியும். ஆனால் புல்வெளியை எப்படி உண்டாக்க முடியும்?
அதுவும் சாத்தியமே என்கிறது புதிய தொழில்நுட்பம். இதற்கு வழிகாட்டுவதற்காக வேளாண் பல்கலைக்கழகம் பயிற்சியும் தருகிறது.
புல் தரை அமைக்க வேண்டிய பகுதியில் முதலில் தண்ணீர் உறிஞ்சாத வகையில் மெழுகித் தரையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். பின்னர் மண் கலவையை இட வேண்டும். தண்ணீர் வடிவதற்கு ஏதுவாக ஒரு பக்கம் சற்றுச் சரிவாக இருக்க வேண்டும். புல் தரை அமைப்பதற்கு சுமார் 10 முதல் 12 செ.மீ உயரத்திற்கு மண் கலவையை இட வேண்டும். நல்ல வெளிச்சத்தையும் வெப்பத்தையும் தாங்கக்கூடிய அறுகம்புல், ஜப்பான் புல், மணிலா புல், கொரியன் புல், ஹைதிராபாத் புல், குட்டை பெர்முடா ஆகிய புல் வகைகள் மாடியில் நடுவதற்கு ஏற்றவை.
மாடியில் இருக்கும் புல்தரைக்குத் தவறாமல் உரமிடுதல் வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 50 மூரியேட் ஆப் பொட்டாஷ் மற்றும் 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றைப் புல் நடுவதற்கு முன்பாக மண் கலவையோடு கலந்துவிட வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை சூப்பர் பாஸ்பேட் உரத்தையும் மூரியேட் ஆப் பொட்டாஷ் உரத்தையும் இதில் பாதி அளவுக்குக் கொடுக்க வேண்டும். இந்தத் தகவலை வேளாண்மைப் பல்கலைக்கழகம் அளிக்கிறது.
இந்தப் புல் தரையுடன் சுற்றிலும் அழகான பூச்செடிகளையும் தொட்டிகளில் வளர்க்கலாம். வீட்டுக்குத் தேவையான காய்கறிச் செடிகள், கீரை வகைகளையும் வளர்க்கலாம். புல் தரை, மலர்கள் என எல்லாவற்றுடன் உங்கள் மாடி ஒரு பூங்காவைப் போல் மனதுக்கு இனிமையளிக்கும் இடமாக மாறிவிடும்.