சொந்த வீடு

தாமரைக் கட்டிடம்

செய்திப்பிரிவு

தாமரைக் கட்டிடம் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தாமரைக் கோயில்தான். இது பஹாய் சமயத்தில் புனிதத் தலம். பஹாய் சமயத்தின் கருத்துகளைப் பிரதிபலிப்பதுபோல வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் 1986-ல் கட்டி முடிக்கப்பட்டது. ஈரானைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் ஃபாரிபோர்ஸ் சாபா என்பவர் இதை வடிவமைத்தார். இந்தக் கட்டிடம் நுட்பமான வடிவமைப்புக்காக உலக அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது.

உலக அளவில் அதிகமானோர் வருகை தந்த கட்டிடம் இது என்ற சிறப்பு அடையாளமும் இந்தத் தாமரைக் கோயிலுக்கு உண்டு. உலகெங்கிலும் உள்ள பஹாய் சமயத்தவர் மட்டுமல்லாமல் இந்தக் கட்டிடத்தைப் பார்ப்பதற்காகவும் மக்கள் தினந்தோறும் வருகிறார்கள்.

இதே போல சீனாவில் வுஜின் நகரத்தில் 2013-ல் ஒரு தாமரைக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் மூன்று அடுக்காக அமைக்கப்பட்டுள்ளது. மொட்டு அவிழாத தாமரைபோல் ஒரு கட்டிடம். அதற்கு அடுத்த நிலையில் ஒரு கட்டிடம். முழு மலர்ச்சியுடன் ஒரு கட்டிடம். கண்ணாடித் தாமரைபோல் வெளித் தோற்றம் இருக்கிறது. உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியில் நடுவில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தின் வெளிச்சம் ஏரியில் பிரபலிக்கும்போது ஒரு பிரம்மாண்டமான இரவு மலராக வசீகரிக்கிறது.

வுஜின் நகரத் திட்டமைப்புத் துறைக்காக இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டுடியோ 505 என்னும் அமைப்பு இந்தக் கட்டிடத்தை உருவாக்கியுள்ளது. இதன் உள்ளே கண்காட்சி வளாகம், அரங்கம், கலந்தாய்வு மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது வீடுகளும் உள்ளன. இந்தக் கட்டிடத்தின் வெளிப்பரப்பில் இதழ்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இதழ்களில் தாமரை நிறத்திலான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடம் சீனாவின் ஒரு சுற்றுலா மையமாகவும் இப்போது மாறியிருக்கிறது.

SCROLL FOR NEXT