சொந்த வீடு

எனக்குப் பிடித்த வீடு: நீர்த் தேக்கத் தொட்டி எனும் நண்பன்

நாகை சக்ரபாணி

நான் சென்னையில் இணைப்புப் பெட்டி தொழிற் சாலையில் 38 வருடம் பணிபுரிந்து தற்சமயம் ஒய்வு பெற்று திருச்சியில் வசித்துவருகிறேன். எனக்கு 76 வயது ஆகிறது. எனது பிள்ளைகள் மணம் முடித்து பேரப் பிள்ளைகள் எல்லாம் எடுத்தாயிற்று. என் வாழ்க்கையின் கடமைகள் எல்லாம் நிறைவேறிவிட்டன. நான் நிம்மதியாக என் ஓய்வுக் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறேன்.

மாலை வேளைகளில் எனது வீட்டில் எல்லோரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனக்கு அதில் அதிக விருப்பமில்லை. அதனால் மாலை ஐந்து மணி ஆனதும் மாடியில் நீர்தேக்கத் தொட்டியின் அருகில் நாற்காலி போட்டு அமர்ந்துவிடுவேன்.

பகல் முழுவதும் வெப்பமாதலால் மாலையில் இங்கு நீர்தேக்கத் தொட்டியின் அருகில் அமர்ந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருப்பேன். மாலை வேளைகளில்தான் இனிய தென்றல் காற்று வீசும். எங்களது நீர் தேக்கத் தொட்டியைக் கடந்து வருவதால்தான் இந்த மாலைக் காற்று இவ்வளவு குளுமையாக இருக்கிறது என நான் நினைத்துக்கொள்வேன்.

நீர்த் தேக்கத் தொட்டியின் அருகில் வாழைத் தோட்டமும் தென்னை மரங்களும் தேக்கு மரங்களும் பப்பாளி மரங்களும் இருப்பதால் அணில், குருவி ஆகிய சின்னஞ்சிறு பிராணிகளுக்கு வாழ்வாதாரமாகவும் என் வீட்டுத் தோட்டம் இருக்கிறது. அணில்கள் ஒன்றுடன் ஒன்று துரத்தி விளையாடுவதை ரசித்துக்கொண்டிருப்பேன். குருவிகள் தங்கள் சின்னஞ்சிறு அலகால் இரை தேடிக் கொறிப்பது கொள்ளை அழகு.

இது மிகவும் அமைதியான பகுதி என்பதால் எனக்கு மிகுந்த ஒய்வு கிடைக்கிறது. நான் ஒரு எழுத்தாளர். எனது ஓய்வு நேரத்தை வீணாக்காமல் என் மனதில் தோன்றும் கருத்துக்கேற்ப கதை, கட்டுரைகள் எழுதுவேன். அவ்விதம் எழுதிய கருத்துகளை இணைத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். குஞ்சம்மாள் பதிப்பகம் என எனது தாயாரின் பெயரில் ஆரம்பித்துள்ளேன். என் புத்தகங்கள் நாகையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள நூலகங்களில் இருக்கின்றன. எனது இத்தனை சாதனைகளுக்கும் காரணம் அந்த நீர் தேக்கத் தொட்டிதான் என நான் நினைக்கிறேன். உயிரற்ற ஒரு தொட்டிதான் என்றாலும் அதனுடன் எனக்கு மானசீகமான உறவு இருக்கிறது. அந்தத் தொட்டியை என் நண்பன் எனலாம்.

எனக்குப் பிடித்த வீடு

இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.

உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

சொந்த வீடு, தி இந்து

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

SCROLL FOR NEXT