ஆஸ்கர் நிமாயார் நவீனக் கட்டிடக் கலையை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர். பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் 1907-ம் ஆண்டு டிசம்பரில் 15-ல் பிறந்தவர். அங்கு 1934-ம் ஆண்டு கட்டிடவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பாம்புல்கா வளாகத்தை 1941-ல் கட்டியதுதான் இவரது முதல் பணி.
மிகப் பெரிய செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த நிமாயார் சிறுவயதில் எவ்விதமான இலக்கின்றி வளர்ந்தார். ஆனால் இவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்துள்ளது. தன் பிஞ்சுக் கைகள் கொண்டு வானத்தையும் மலைகளையும் உருவாக்கியுள்ளார். இந்தப் பாதிப்புதான் அவர் பின்னாளில் மிகப் பெரிய கட்டிவியல் துறை ஆளுமையாக உருவாகக் காரணமாக இருந்தது.
1939-ம் ஆண்டிலிருந்தே நிமாயாரின் திறமை நாடு தாண்டிப் புகழ்பெற்றது. 1948-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தலைமையிடக் கட்டிடத்துக்கான பணியை நியூயார்க் நகரத்தில் தொடங்கினார். இந்தப் பணி 1952-ம் ஆண்டு நிறைவுற்றது.
பிரேசில் அதிபர் ஜூசிலினோ குபிசேக்கி, நிமாயாரின் நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். அதனடிப்படையில் பிரேசிலுக்கான புதிய தலைநகரை உருவாக்கித் தரும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பிரேசிலின் புதிய தலைநகரான பிரேலில்லாவின் பொதுக் கட்டிடங்களை நிமாயார் உருவாக்கினார்.
நிமாயார் கம்யூனிசச் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை யுள்ளவராக இருந்துள்ளார். அதனடிப்படையில் பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சியில் 1945-ல் உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்ற காரணத்துக்காக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் முதல்வராகப் பணியாற்ற அமெரிக்க அரசு விசா தர மறுத்துவிட்டது.
கட்டிடவியல் குறித்துக் கருத்துக் கூறும்போது, “கட்டிடக் கலைஞர் வெறும் கட்டிடவியலைக் குறித்து மட்டும் சிந்திக்கக் கூடாது. இந்தக் கட்டிடவியலால் உலகத்தின் பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் எனச் சிந்திக்க வேண்டும். கட்டிடங்கள் மூலம் சிறந்த உலகை உருவாக்க வேண்டும். சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் கட்டிடக் கலைஞர்கள் செயல்படக் கூடாது. எல்லாப் பிரிவினருக்குமான கட்டிடங்களை உருவாக்க வேண்டும்” என்கிறார் நிமாயார். அவரது இந்தப் பார்வை அவரது கம்யூனிசச் சித்தாந்த ஆதரவில் இருந்து உருவானதாக இருக்க வேண்டும்.
1964-ல் பிரேசிலை ராணுவ ஆட்சி கைப்பற்றியதும் கம்யூனிஸ்டான நிமாயார் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அலுவலகம் தொடங்கி வட ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பியாவிலும் பல கட்டிடங்களை உருவாக்கினார். 1988-ம் ஆண்டு கட்டிடவியல் துறையின் மிக உயரிய விருதான பிரிட்ஸ்கெர் விருது இவருக்கு வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
103 வயது வரை தினமும் தன் அலுவலகம் வந்து கட்டிடக்களுக்கான வரை படங்களைப் பார்க்கும் வழக்கத்தைக் கடைபிடித்து வந்தார் நிமாயார். இவர் 2012 டிசம்பர் 5-ல் தான் பிறந்த ரியோ டி ஜெனிரோவில் மரணமடைந்தார். இறுதிச் சடங்கு நிமாயார் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய பிரேசில் அதிபர் இல்லத்தில் நடந்தது.