சொந்த வீடு

ரியல் எஸ்டேட் சென்ற வாரம்: 99 நாளில் 33 மாடி

விதின்

பாசின் குழுமம் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் 33 மாடிக் கட்டிடத்தைக் கட்டவுள்ளது. இதில் பிரமிக்கதக்க செய்தி எதுவுமில்லைதான். ஆனால் இந்தப் பிரம்மாண்டமான திட்டத்தை 99 நாளுக்குள் முடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். உலகமெங்கும் தொழில் நுட்பங்கள் வளார்ந்த பிறகு கட்டிடங்கள் மிக விரைவாகக் கட்டி முடிக்கப்பட்டன. சீனாதான் இதற்கு முன்னோடியாக உள்ளது. சீனாவின் ஹுனன் மாகாணத்தில் டோங்டிங் ஏரிக்கு அருகில் முப்பது மாடிக் கட்டிடம் 15 நாளில் கட்டி முடிக்கப்பட்டது. இதே தொழில் நுட்பத்தில் 25 ஏக்கர் நிலப் பரப்பில் இந்தத் திட்டம் அமையவுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு 150 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளாது.

திட்டங்கள் தேக்கம்

சமீபத்தில் வெளியாகியுள்ள அசோசேம் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை 2014-2015 ஆண்டுக் காலகட்டத்தில் 75 சதவீதக் கட்டுமானத் திட்டங்கள் அறிவித்துப் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கின்றன எனக் கூறுகிறது. அதாவது 3,540 திட்டங்களில் 2,300 திட்டங்கள் தொடங்கப்படாத நிலையில் இருக்கின்றன என அந்த அறிக்கை சொல்கிறது. இதன் மதிப்பு 14 லட்சம் கோடி.

மேலும் ஆயிரம் திட்டங்கள் பல்வேறு காரணங்களால் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளன எனவும் ஆதாரங்களைச் சுட்டி மேற்கோள் கட்டுகிறது அறிக்கை. கால தாமதமாவதில் ஆந்திரப் பிரதேசம்தான் முன்னிலை வகிக்கிறது. அங்குள்ள திட்டங்கள் 45 மாத கால தாமதத்துடன் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மத்தியப்பிரதேசம் 41 மாத கால தாமதத்துடனும் தெலுங்கானா 40 மாத கால தாமதத்துடனும் பஞ்சாப் மாநிலம் 38 மாத கால தாமதத்துடனும் உள்ளன.

கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம்

தானே வாடிக்கையாளார் மன்றம் குறித்த காலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது. தானேயைச் சேர்ந்த வாடிக்கையாளார் 2010-ம் ஆண்டு ஓர் அடுக்குமாடி வீட்டை முன்பதிவுசெய்துள்ளார். 2011-ம் ஆண்டு வீட்டை ஒப்படைக்கப்படும் என்பதாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி 2011-ம் ஆண்டுக்குள் வீட்டை ஒப்படைக்கவில்லை. இந்தப் பிரச்சினையை விசாரித்த வாடிக்கையாளர் மன்றம் தாமதமான கால கட்டத்துக்கான வட்டியையும் வாடிக்கையாளாருக்கு மன உளைச்சலை உண்டாக்கியதற்காக 10 ஆயிரமும் அளிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது.

விரைவில் ரியல் எஸ்டேட் சட்டம்

சமூக சேவகரும் இந்தியாவின் முன்னணி வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன் ரியல் எஸ்டேட் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கட்டுநர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT