இயற்கையை விரும்பும் காலகட்டம் இது. கட்டுமானப் பொருள்களிலிருந்து வீட்டு உபயோகப் பொருள்கள் வரை இயற்கையான பொருள்களுக்கு இப்போது வரவேற்பு கூடியிருக்கிறது. அந்த வகையில் இப்போது மூங்கில் வீட்டு அலங்காரத்திற்கு அதிகமாகப் பயன்படத் தொடங்கியிருக்கிறது. மூங்கிலை அறைக்கலன்களுக்காக வெகு காலமாக நாம் பயன்படுத்திவருகிறோம். ஆனால் அவற்றை அலங்காரப் பொருள்களாகப் பயன்படுத்துவது இப்போதுதான் பரவலாகிவருகிறது. மூங்கில்களைக் கொண்டு எவ்வாறெல்லாம் வீட்டை அலங்கரிக்கலாம் எனப் பார்க்கலாம்.
மூங்கில்களைக் கொண்டு அலங்கரிக்கத் தீர்மானித்தால் முன்பே முடிவுசெய்துகொள்ளுங்கள். வீட்டுக்கான அறைக்கலன்களும் மூங்கிலிலேயே தேர்வுசெய்தால் சிறப்பானதாக இருக்கும். சின்னச் சின்னதாக மூங்கில்களைப் பயன்படுத்தி வீட்டை மிக அழகாக மாற்ற முடியும். உதாரணமாக காய்ந்த மூங்கில் கம்புகளை வாங்கி அதை உங்கள் வீட்டுச் சுவரின் வடிவமைப்பிற்கு ஏற்ற மாதிரி அளவில் வெட்டிக்கொள்ளுங்கள். பிறகு அந்த மூங்கில் கம்புகளில் உங்கள் கலைநயத்தையும் கைவண்ணத்தையும் காட்டி வண்ணம் தீட்டுங்கள். இந்த வண்ண மூங்கில் கம்புகளால் வரவேற்பறையை அலங்கரிக்கலாம்.
மூங்கில் பானைகளால் வீட்டை அலங்கரிப்பது இப்போதைய முக்கியமான டிரெண்டாக இருக்கிறது. பானைகளில் குறைவான மூங்கில்களை வைத்து அலங்கரிப்பது அழகாக இருக்கும். அத்துடன் அழகிற்காக வைத்திற்கும் செடிகளுடைய தொட்டிகளிலும் மூங்கில்களை வைக்கலாம்.
மூங்கில் பிரம்புகளை வைத்து அலங்கரிக்கும்போது அவற்றைப் பெரிய தொட்டியில் வரிசையாக அடுக்கலாம். இந்த மூங்கில் பிரம்புகளை வண்ணமடித்தும் வைக்கலாம். வீட்டின் சுவருக்கும், தொட்டியின் வண்ணத்திற்கும் ஏற்றமாதிரி மூங்கில் பிரம்புகளை வண்ணமடிக்கலாம்.
அறைகளைப் பிரிப்பதற்கு இந்த மூங்கில் கம்புகளைப் பயன்படுத்தலாம். அது அறைக்கு இயல்பான, அழகான தோற்றத்தைக் கொடுக்கும். உணவறைக்கும், சமையலறைக்கும் இந்த மூங்கில் கம்புகளை வைத்து அழகான தடுப்பை ஏற்படுத்தலாம்.
மூங்கில் கம்புகளை வைத்து உங்கள் தோட்டத்திற்கோ பால்கனிக்கோ எளிமையான முறையில் கூரை அமைக்கலாம். இந்தக் கூரை உங்கள் வீட்டிற்கு ‘ரிசார்ட் லுக்’கைக் கொடுக்கும்.
வீட்டின் தரையில் டைல்ஸ்க்குப் பதிலாக மூங்கிலையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மூங்கில் தரைத்தளம் நடப்பதற்கு ஏற்றதாகவும், பரமரிக்க எளிதானதாகவும் இருக்கும்.