சொந்த வீடு

துபாய் ரியல் எஸ்டேட்: தொடரும் இந்தியர்களின் ஆதிக்கம்

செய்திப்பிரிவு

சென்ற ஆண்டு லண்டன் ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் துபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்திய முதலீட்டாளர்களே ஆதிக்கம் செலுத்திவந்ததாக அறிக்கைகள் வெளியாகியிருந்தது. முடிவடைந்த இந்த 2015 அரையாண்டிலும் துபாயில் இந்திய முதலீட்டாளர்களின் ஆதிக்கமே தொடர்கிறது எனச் சமீபத்தில் வெளியாகியுள்ள துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) கூறுகிறது.

காலம் காலமாக ஐக்கிய அரபு நாடுகள், சவுதிஅரேபியா போன்ற அரபு நாடுகளில் நம்மவர்கள் தங்கள் உழைப்பைச் சிந்தி வருகிறார்கள். பல வளைகுடா நகரங்கள் இந்தியர் களின் வியர்வையில்தான் உருவாகின என்று சொல்லலாம். கட்டிடப் பணிகள் மட்டுமல்லாது பல தரப்பட்ட சேவைப் பணிகளை நம்மவர்களே செய்து வருகின்றனர். இந்த துபாய் நிலத் துறையின் அறிக்கை துபாய் நகரில் முதலீடு செய்வதிலும் இந்தியர்களின் பங்கு ஓங்கியிருப்பதைக் காட்டுகிறது.

இந்திய முதலீட்டாளர்கள் 2015 முதல் அரை யாண்டில் சுமார் 200 கோடி அமெரிக்க டாலர் பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் மூலம் மொத்தம் 3, 017 நிலப் பரிமாற்றத்தை இந்தியர்கள் நடத்தியுள்ளனர் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது.

பூர்ஜ் கலிபா, பிசினஸ் பே, பாம் ஜுமேரா, துபாய் மெரினா ஆகிய பகுதிகளில்தான் இந்தியர்கள் அதிகம் முதலீடு செய்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை ஆதாரங்களைச் சுட்டி மேற்கோள் காட்டுகிறது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் துபாயில் முதலீடு செய்பவர்கள் பட்டியலில் வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கிலாந்துதான் துபாயில் அதிகம் முதலீடு செய்யும் நாடாக இருந்தது. இந்த அறிக்கையின் மூலம் துபாயின் ரியல் எஸ்டேட் சிறப்பான வளர்ச்சி கண்டுவருவது நிரூபணமாகியுள்ளது என்றும் துபாய் நிலத் துறையின் இயக்குநர் சுல்தான் பட்டி பின் மெஜ்ரென் தெரிவித்துள்ளார்.

துபாயில் கட்டிடம் கட்டுவது தொடர்பான எல்லாவிதமான அனுமதியையும் அந்நகரத்தின் நிலத் துறையை (Dubai Land Department) நாடினால் போதுமானது. இந்த ஒற்றைச் சாளர முறையால் அங்கு ரியல் எஸ்டேட் நல்ல வளர்ச்சி கண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒரு கட்டிட அனுமதிக்குப் பல்வேறு விதமான துறைகளிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டியிருக்கும். துபாயைப் போல இங்கும் ஒரு துறையின் கீழ் அனுமதிகளைக் கொண்டுவர வேண்டும் என்னும் கருத்து ரியல் எஸ்டேட் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது கவனிக்கதக்கது.

SCROLL FOR NEXT