சொந்த வீடு

கண்ணாடிகளில் கலை வண்ணம்

நீரை மகேந்திரன்

பார்த்துப் பார்த்துக் கட்டும் வீட்டை மேலும் அழகாக்குவது வீட்டுக்குள் நாம் அமைக்கும் உள் அலங்கார வேலைகள்தான். வீடு தயாராகும் வரை பொறுமையாகக் காத்திருந்த நாம் உள் அலங்கார வேலைகளுக்கு மட்டும் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. வீடு கட்டியதும் உடனடியாகக் குடிவந்துவிட வேண்டும் என யோசிக்கிறோம். அப்படி இல்லாமல் வீடு தயாராகும்போதே இதற்கு என்ன மாதிரியான அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என யோசிக்க வேண்டும். இது அலங்காரமாக இருக்கும் அதே வேளையில் தேவைக்கு ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டும்.

பொதுவாக வீட்டின் உள் அலங்கார வேலைகளில் கண்ணாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் சின்ன வீடும் ரிச் வீடுபோல காட்சி தரும். இதைச் சொன்னவுடன் உடனடியாக பெயிண்டிங் கிளாஸ்கள்தான் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையிலேயே நவீனமாக வந்துள்ளதுதான் கிராப்ட் டிசைன் கிளாஸ்கள்.

விதவிதாமான டிசைன்களில் நமது விருப்பத்துக்கு ஏற்ப வீட்டை அலங்காரிக்க முடியும். இது நவீன முறைகளில் தயாராவதால், பெயிண்டிங் கிளாஸ்களைவிட பலமடங்கு அழகான தோற்றத்தையும், ரிச் தன்மையையும் கொண்டு வந்துவிடுகிறது.

இந்தக் கண்ணாடிகளை சென்னையில் தயாரித்து வருகிறது கிரியேட்டிவ் கிளாஸ் ஸ்டூடியோ என்கிற நிறுவனம். இதன் உரிமையாளரான சி. மஞ்சுளா, “கதவு ஜன்னல்களில் வெறும் கண்ணாடிகளாக இல்லாமல் அழகழகான ரசனை சார்ந்த வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தங்களது சொந்த வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டுபவர்களுக்கு இந்த வகையிலான கண்ணாடிகள் மேலும் திருப்தியைக் கொடுக்கும்” என்றார்.

இதற்காக வெளிநாட்டில் சிறப்பு கிராப்ட் பயிற்சி எடுத்து வந்துள்ள இவர், வீட்டை அலங்கரிப்பதில் கண்ணாடிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்து மேலும் சொல்லும்போது, “மக்களின் ரசனையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஏற்ப வழக்கமான கண்ணாடி பெயிண்டிங் கிளாஸ்களை விட நாங்கள் தயாரிக்கும் கிராப்ட் வொர்க் கிளாஸ்கள் அதிக வேலைகள் கொண்டது. மக்கள் பழைய மாதிரி பூ, செடி, கடவுள் படங்கள் தவிர நவீன ஓவியங்கள் மற்றும் நவீன பெயிண்டிங்குகளையும் விரும்புகின்றனர்.

கடவுள் உருவங்களையே நவீன வடிவங்களில் தேடுகின்றனர். நாங்கள் தயாரிக்கும் 3டி வகையில் கண்ணாடியில் தயாரிக்கும் நவீன கண்ணாடி பிள்ளையார் உருவங்கள் பூஜையறையை மிக அழகானதாகவும் மாற்றும். சமையல் அறை, வரவேற்பறை, பெட்ரூம் என எல்லா இடத்திலும் கண்ணாடிகளால் அலங்கரிக்க முடியும். ஜன்னல்களில் வழக்கமான ப்ளைன் கண்ணாடிகள் வைப்பதைவிட இந்த நவீன கிராப்ட் கிளாஸ்களை முயற்சித்தால் வீடு வித்தியாசமாகவும் தோற்றமளிக்கும்” என்றார்.

இது போன்ற ரசனை சார்ந்த விஷயங்களைக் கைகளால் மட்டுமே வரைந்து விட முடியும்தான். ஆனால் கண்ணாடிகள் கையள்வதற்கு இதர பொருட்களைப் போல எளிமையானவை அல்ல. ஒரு சின்ன தவறு நிகழ்ந்தாலும் மொத்த உழைப்பும் வீணாகப் போய்விடும் என்பதால் இவர்கள் இவற்றைச் செய்ய தனியாக பிராசஸிங் யூனிட் வைத்திருக்கிறார்கள்.

முதலில் கைகளால் வரைந்து அதைக் கண்ணாடியில் கிராப்ட் வேலையாகச் செய்து கொள்கிறார்கள். அல்லது கம்ப்யூட்டரில் டிசைன் செய்த பிறகு கிராப்ட் வேலைகளைத் தொடங்குகிறார்கள்.

ரூ.300 விலையிலிருந்து இரண்டு மூன்று லட்சம் வரை விலையில் கண்ணாடி பெயிண்டிங்குகளை இவர்கள் தயார் செய்கின்றனர். தேடி வந்து வாங்கிச் செல்வதற்கு ஏற்ப சென்னை தி.நகரில் ஷோரூம் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் கையாளுவது கவனம் எடுத்த வேலை என்பதால், இவர்களே வாடிக்கையாளர்களின் இடத்துக்கே நவீன பேக்கிங் மூலம் கொண்டு சேர்த்து விடுகிறார்கள்.

SCROLL FOR NEXT