டாப் டென்னில் கோயம்புத்தூர்
குர்கானை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் ப்ரோ-க்யூட்டி ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் இந்திய அளவில் இரண்டாம் நிலைகளில் ரியல் எஸ்டேட் குறித்த ஆய்வை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் முதல் பத்து நகரங்களுக்குள் கோயம்புத்தூரும் இருக்கிறது. கோவைக்கு அதில் பத்தாவது இடம். தமிழகத்தில் இருந்து இடம் பிடித்துள்ள ஒரே நகரம் கோவைதான். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரு நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இதில் கொச்சி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நாசிக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இவை அல்லாது விசாகப்பட்டினம், வதேதாரா, ஜெய்ப்பூர், மங்களூர், இந்தூர், கோவா ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நகரங்களாகும். விலை, சேவை, விற்பனை, இருப்பில் உள்ள வீடுகள், புதிய வீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரக கட்டிடத்தை வாங்கிய இந்தியர்
கடந்த வாரம் இந்தியாவின் மிக விலை மதிப்பான சொத்துப் பரிமாற்றத்தை பிர்லா குழுமத்தைச் சேர்ந்த குமார்மங்கலம் பிர்லா செய்தார். மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள ஒரு வீட்டை அவர் ரூ.425 கோடிக்கு வாங்கினார். இதுதான் அதுவரை நடந்த சொத்துப் பரிமாற்றத்தில் விலை மதிப்பானதாக இருந்தது. ஆனால் பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் சிரஸ் பூணாவாலா அதை முறியடித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான லிங்கன் ஹவுஸை ரூ.750 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இது அமெரிக்காவின் தூதரகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடம். பூணாவாலா, செரும் இன்ஸ்ட்டியூட்டின் தலைவர் ஆவார். பாம்பு கடிக்கான மருந்துகளை இந்த நிறுவனம் உருவாக்கிவருகிறது.
தரகர்களுக்கு புதிய ஆப்
வீடு தேடுவதற்குப் பலவிதமான ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. இதனால் தரகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது எனச் சொல்லப் படுவதுண்டு. இப்போது தரகர்களுக்காகவே ஒரு அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. ‘Plabro' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் முதல் கட்டமாக நொய்டா, குர்கான் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதில் ஃபிலிப்கார்ட் துணை நிறுவனர்களான சச்சின் பான்சால், பின்னி பான்சால் ஆகிய முதலீடுசெய்துள்ளனர் என்கிறார் ‘எPlabro' நிறுவனத்தின் துணை நிறுவனர் பங்கஜ் கார்க்.
நோபுரோக்கர் அலுவலகத்தில் புரோக்கர்கள் முற்றுகை
வீடு தேடுவதற்காகப் பல இணையதளங்கள் வந்துவிட்டன. இதனால் வீடு தேடுவதும் எளிமையாகி இருக்கிறது. மேலும் இந்த இணையதளங்கள் பண்டிகைக் காலங்களை ஒட்டி சில தள்ளுபடி, சிறப்புத் திட்டங்களையும் வாடிக்கையாளார்களுக்கு வழங்குகின்றன. இதனால் தரகர்களின் தொழில் வாழ்க்கை கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் பரவலான கருத்து உள்ளது. இதை மெய்ப்பிக்கும் விதமாக பெங்களூருவில் கடந்த 15-ம் தேதி ஒரு சம்பவம் நடந்ததுள்ளது.
அன்று காலையில் வீட்டுத் தரகர்கள் ஒரு ஐம்பது பேர் கூடிச் சென்று நோபுரோக்கர் இணைய தள அலுவலகத்தை முற்றுகை யிட்டுள்ளனர். ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறகு அலுவலகத்தினருக்கும் தரகர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த இணைய தளம் மூலம் தரகர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நோபுரோக்கர் இணையதளம் மூலம் மாதத்துக்கு சுமார் ரூ.15 கோடி தரகுப் பணம் வாடிக்கையாளர்களால் மிச்சம்பிடிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
பெயிண்டர்களுக்குப் பயிற்சி
பெர்ஜர் பெயிண்ட் நிறுவனத்தினர் வீடுகளுக்கு வண்ணம் அடிப்பதில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்யும் 3 ஆயிரம் முகவர்கள் மூலம் 10 ஆயிரம் பெயிண்டர்களைத் தேர்வுசெய்ய விருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் பெயிண்டர்களுக்கு வண்ணம் அடிப்பதன் புதிய உத்திகளைப் பயிற்சி அளிக்கவுள்ளனர். இவ்வாறு பயிற்சி பெற்ற பெயிண்டர்களைக் கொண்டு உரிய சாதனங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளை வண்ணமயமாக்கவுள்ளனர். இந்த வண்ணப் பூச்சுக்குத் தனிக் கட்டணம் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரியல் எஸ்டேட்டின் பாய்ச்சல்
சென்னையின் ரியல் எஸ்டேட்டின் சொத்துப் பரிமாற்றம் முடிவடைந்த முதலாம் காலாண்டில் பெரும் பாய்ச்சலாக வெளிப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போதும் இந்த வளர்ச்சி ஐந்து மடங்கானது. இந்த முதலாம் காலாண்டின் சென்னை ரியல் எஸ்டேட் பரிமாற்றம் ரூ. 2,762 கோடியாக உள்ளது. கனடா பென்சன் ப்ளான் இன்வெஸ்ட்மென்ட் போர்டும் ஷபூர்ஜி பல்லோஞி குழுமமும் இணைந்து எஸ்.பி. இன்ஃபோ சிட்டி ஐடி பார்க்கை ரூ.1460 கோடிக்குப் பெற்றுள்ளது. இதுதான் சென்னையின் மிக விலை மதிப்பு மிக்க சொத்திப் பரிமாற்றம் ஆகும்.
- தொகுப்பு: ஜெய்