சென்னையில் வீடு வாங்க யோசனை வைத்திருப்பவர்களுக்கு உடனடியாகப் பலரும் புறநகர்களைத்தான் கை காட்டுகின்றனர். அண்ணா சாலையில் உள்ள அலுவலகம் செல்பவருக்கு ஊரப்பாக்கத்தில் வீடு வாங்க யோசனை சொல்வார்கள். அந்தந்தப் பகுதிகளுக்கு அருகிலேயே வீடு வாங்குவதுதான் புத்திசாலித்தனம். அல்லது கொஞ்சம் உள்ளடங்கிய பகுதிகளில் வீடு வாங்கிவிட முடிகிறது. அப்படித்தான் இருக்கிறது பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகள்.
கொஞ்சம் கவனத்துடன் இறங்கினால் நமது பட்ஜெட்டுக்குள் பொருந்தி வருகிற வீடுகள் வாங்கி விட முடிகிறது என்கின்றனர் அனுபவசாலிகள். பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து செல்லக் கூடிய ஜமீன் பல்லாவரம் பகுதிகள், கீழ்கட்டளை, மேடவாக்கம் புறவழிச்சாலை போன்ற பகுதிகளில் எளிதாக வீடுகள் கிடைக்கின்றன.
இந்தப் பகுதிகளுக்குப் போக்குவரத்து வசதி குறைவாக இருக்கிறது என்று பயப்படத் தேவையில்லை. குரோம்பேட்டையோ அல்லது தாம்பரமோ சென்று சுற்றிவரவும் தேவையில்லை. பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்தே சாலை வசதிகள் உள்ளன.
குறிப்பாகப் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து சுரங்கப்பாதை வழியாக தர்ஹா சாலை வழியாக ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சென்றடைந்துவிடலாம். அங்கிருந்து மேடவாக்கம் முதன்மைச் சாலையை அடைந்து விடுவதும் எளிது. ஜமீன் பல்லாவரத்திலிருந்து கம்பர் சாலை, துரைக்கண்ணு சாலை வழியாக மேடவாக்கம் சாலையைத் தொட்டுவிடலாம். இந்தப் பகுதிகளை ஒட்டிய கீழ்கட்டளை, கோவிலம் பாக்கம் பகுதிகள் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்துவருகின்றன.
ஜமீன் பல்லாவரம், துரைக்கண்ணு சாலைப் பகுதிகளில் வேகமான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக வேல்ஸ் கல்வி நிறுவனங்களை ஒட்டிய பகுதிகள் வளர்ந்து வருகின்றன.
விமான நிலையத்துக்குச் செல்வதற்குச் சுலபமான சாலை வசதி உள்ளதும் இந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். தவிர பழைய மாகாபலிபுரம் சாலை, கிழக்கு தாம்பரம் வழியாக ஜிஎஸ்டி சாலைக்கு இணைப்புச் சாலை வசதியும் உள்ளது.
பல நிறுவனங்கள் இங்கு போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வீட்டு திட்டங்களைத் தொடங்கியுள்ளன. இதற்குக் காரணம் மக்கள் இந்தப் பகுதிகளை விரும்புவதுதான். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் வீடு வாங்குவதற்கு ஏற்ப விலையிலான அடுக்குமாடித் திட்டங்களும் உள்ளன.
இந்தப் பகுதிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வண்டலூர் - வேளச்சேரி இடையில் மோனோ ரயில் திட்ட அறிவிப்பும் உள்ளது. எனவே எதிர்காலத்தில் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து இன்னும் எளிதான ஒன்றாக மாறும் வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் கட்டிடத் துறை சார்ந்த நிபுணர்கள்.
ஆனால், இந்தப் பகுதிகளில் தனி வீடு வாங்க விரும்புபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும் வேண்டும். குறிப்பாக ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் சில இடங்களை வாங்குவதற்குத் தடை விதித்து, தொல்பொருள் ஆய்வுத் துறையினர் அறிவுறுத்தியிருக்கின்றனர். அது போன்ற இடங்களில் கவனம் தேவை. இது தனி மனையாக வாங்குவதற்குத்தான். அடுக்குமாடித் திட்ட வீடுகள் என்றாலும் இந்த விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால், போக்குவரத்து வசதிகள் அடிப்படையில் இந்தப் பகுதிகளில் வீடு வாங்குவது புத்திசாலித்தனமே.