சீதாராமன்
வீட்டுக் கடனைப் பொறுத்தவரை நாம் கட்டப் போகும், வாங்கப் போகும் வீட்டின் மதிப்பில் சுமார் 80 சதவிகிதத் தொகையைக் கடனாகத் தருவார்கள். மீதித் தொகைக்கு நம் சேமிப்பு பயன்படும். இந்தத் தொகை உறுதியாக உங்கள் சேமிப்பாக இருந்தால் நலம். இதற்கும் கடன் வாங்க நேரிட்டால் கடும் சிரமத்துக்கு உள்ளாகிவிட நேரிடலாம். அவர்கள் தரும் தொகை எவ்வளவு இருக்கும் என்பது நமது திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டது.
நாம் திட்டமிட்ட தொகை கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பார்ப்போம். வீட்டுக் கடன் வாங்கத் திட்டமிடும் முன் சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அதாவது அதற்கு முன்பு வங்கிக் கடன் வாங்குவதற்கு உண்டான வழிமுறைகளைத் தெளிவுறக் கேட்டு அறிய வேண்டும்.
அதன் பிறகு வேறு எதாவது கடன் வாங்கி இருந்தால் அதை அடைத்துவிட வேண்டும். கார் லோன், தனிநபர் கடன் கட்டாமல் இருந்தால், அல்லது அந்த இ.எம்.ஐ. போய்க்கொண்டிருந்தால் அதை முழுமையாக அடைத்துவிட வேண்டும். தோராயமாக நம் சம்பளத்தில் 50 சதவிகிதத் தொகையை உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனாக வங்கிகள் கணக்கிடும். இதில் உங்களுக்கு ஏற்கனவே கடன்கள் இருக்கும்பட்சத்தில் அது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகையிலிருந்து கழிக்கப்படும். அதனால் இம்மாதிரியான கடன்களை நாம் கட்டிவிட வேண்டும்.
இன்னொரு வழிமுறையில் உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை அதிகரிக்கலாம். நீங்கள் எதிர்பார்த்த வீட்டுக் கடன் கிடைக்கவில்லையென்றால், திரும்பச் செலுத்தும் வீட்டுக் கடனின் கால அளவை அதிகரிக்கலாம். அதாவது உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை ரூ.10 ஆயிரம் எனில் உங்களுக்குக் குறைந்த அளவே கடன் கிடைக்கும். இதே ரூ.10 ஆயிரம் தொகையை நீங்கள் 20 ஆண்டுகளில் செலுத்தினால் உங்கள் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு ஏற்பக் கடன் தொகையும் கூடும். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கும்.
இப்படி வீட்டுக் கடனைக் கட்டும் ஆண்டுகளை அதிகரிக்கும்போது, வட்டிக்குச் செல்லும் தொகை அதிகரிக்கும். இந்த வட்டிச் செலவைக் குறைக்க, வரும் ஆண்டுகளில் இடையிடையே மாத தவணை போகக் கூடுதல் தொகையைக் கட்டி, கடன் பாக்கியைக் குறைத்துக் கொள்ளலாம். கடன் வாங்கும்போது நம் வருமானம் மட்டுமல்லாது மனைவி/கணவன் வருமானத்தையும் காட்டலாம். அம்மா, அப்பா ஆகியோரின் வருமானத்தையும் காட்டலாம். அப்படிக் காண்பிக்கும்போது நம் திருப்பிச் செலுத்தும் திறன் தொகை அதிகரிக்கும்