சொந்த வீடு

ஏற்றம் பெறும் ரியல் எஸ்டேட்

விதின்

கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்பைக் கண்டுள்ளது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த பத்தாண்டுகளில் அசுரத்தனமான வளர்ச்சி கண்ட துறை இந்திய ரியல் எஸ்டேட் துறை. உலகமயமாக்கலுக்குப் பிறகு இது சிறிது சிறிதாக உயர்ந்து உச்சத்தைத் தொட்டது. உலகமயமாக்கல் விளைவால் மக்கள் பலரும் கிராமங்களிலிருந்து நகரத்துக்கு இடம்பெயர்ந்தனர்.

ஐ.டி, ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வருகையால் சென்னை, பெங்களூரூ, புனே போன்ற நகரங்களில் திடீரென புதிய வீட்டுத் தேவைகள் அதிகமாயின. இத்துறையில் பணியாற்றுவதற்காக நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்குப் படையெடுத்துவருபவர்களின் வீட்டுத் தேவையை நிறைவேற்றும் பொருட்டுப் புதிய புதிய வீட்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

ரியல் எஸ்டேட்டும் இத்துடன் இணைந்து வளம் பெற்றது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சென்னையில் மால்களின் எண்ணிக்கை கூடியுள்ளதைப் பார்க்க முடியும். ஸ்கைவாக், எக்ஸ்பிரஸ் அவென்யூ, ஃபீனீக்ஸ் மால் போன்ற பல மால்கள் இந்தக் காலகட்டத்தில் திறக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவை.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலை மாறியது. ரியல் எஸ்டேட் முதலீடு அதிகரிக்க, அதிகரிக்க தேக்க நிலை ஏற்பட்டது. ஓ.எம்.ஆர். பகுதிகளில் கட்டப்பட்டு விற்பனைக்குள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் இன்னும் விற்கப்படாமல் உள்ளன என்பதற்கு இதற்கு உதாரணம். இதற்குப் பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டன.

வீடுகளின் கட்டுக்கடங்காத விலையேற்றம். அந்தத் தரப்பில் எடுத்துக்கொண்டால் நிலையில்லாத சிமெண்ட் விலை உயர்வு, அரசின் வழிகாட்டி மதிப்பு உயர்வு, கட்டுமானப் பொருள்களான மணல், செங்கலுக்குத் திண்டாட்டம் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. எது எப்படியோ இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான பங்குவகிக்கும் ரியல் எஸ்டேட் துறை சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்த இந்த நிலவரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓரளவு மாறத் தொடங்கியது. இந்த மந்த நிலையைப் பயன்படுத்திப் பலரும் வீடுவாங்க முன்வந்தனர். அதனால் மீண்டும் இந்திய ரியல் எஸ்டேட் துறை ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதை ஊக்கும் விக்கும் வகையில் பலவிதமான தள்ளுபடித் திட்டங்களையும் பல முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் அளித்துவருகின்றன. சமீபத்தில் 99ஏக்கர் டாட் காம் நிறுவனம் இந்தியாவில் முதன் முறையாக ப்ளாஷ் விற்பனையை அறிமுகப்படுத்தியது. இது ஒரு வெற்றிகரமான திட்டமாக இருந்தது. டாடா ஹவுசிங் நிறுவனமும் சமீபத்தில் ஆன்லைனில் அதிரடித் தள்ளுபடிகளை அறிவித்திருந்தது.

இதன் விளைவாக இந்திய ரியல் எஸ்டேட் துறையின் நம்பிக்கை அளிக்கும் வகையில் புத்துணர்வு பெற்றுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தில் 6 சதவீதப் பங்களிப்பு செய்துவரும் ரியல் எஸ்டேட் துறை, இன்னும் பத்தாண்டுகளில் இரு மடங்காக தன் பங்களிப்பை உயர்த்தும் என நம்பப்படுகிறது. இதைச் சமீபத்தில் வெளியான ஜோன்ஸ் லாங் லசல்லே (ஜேஎல்எல்) நிறுவனத்தின் அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.

உலக அளவில் ரியல் எஸ்டேட் துறை குறித்து மதிப்பீடு செய்துவரும் ஜேஎல்எல் நிறுவனம் சமீபத்தில் உலக ரியல் எஸ்டேட் துறை குறித்த மதிப்பீடுகளை அளித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மதிப்பீட்டுப் பட்டியலை இந்நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய ரியல் எஸ்டேட் பத்து இடங்கள் முன்னேறியுள்ளது. 2008-ல் 50-வது இடத்தில் இருந்த இந்திய ரியல் எஸ்டேட் துறையின் மதிப்பு சட்டென உயர்ந்து 2014-ல் 40-வது இடத்துக்கு வந்துள்ளது. இந்த ஆய்வு 102 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

உலகம் முழுவதும் 300 நகரங்களை ரியல் எஸ்டேட் வாய்ப்பு உள்ள நகரங்களாக ஜேஎல்எல் பட்டியலிட்டுள்ளது. இதில் முதல் 100 நகரங்களுக்குள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரூ போன்ற இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. சென்னை தவிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த கோயம்புத்தூரும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பது தமிழக ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறது.

SCROLL FOR NEXT