ஜி.எஸ்.எஸ்.
படுக்கையறையில் தரையில் விரிப்பதற்கு ஏற்றது எது என்று கேட்டால் கணிசமானவர்கள் கார்பெட் எனப்படும் கம்பளத்தைக் குறிப்பிடுவார்கள்.
கம்பளம் பல கோணங்களில் சிபாரிசு செய்யத்தக்கதுதான். படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கம்பளத்தில் கால் வைக்கும்போது உண்டாகும் சுகமே தனிதான்.
அதுவும் குளிர்காலத்தில் கம்பளம் ஒரு கதகதப்பான உணர்வை அளிக்கும். ‘சில்' என்ற தரையில் கால் வைக்கும்போது கம்பளத்தின் அருமையை அதிகமாகவே புரிந்துகொள்ள முடியும்.
கம்பளம் ஒரு விதத்தில் குஷன் போலச் செயல்படும். குழந்தைகளோ, வயதானவர்களோ தரையில் விழுவதைவிட கம்பளத்தின்மீது விழும்போது பாதிப்பு குறைவாகவே இருக்கும்.
தரையின் மீது பதிக்கக்கூடிய வேறு பல பொருள்களுடன் ஒப்பிடும்போது கம்பளத்தின் விலை அதிகமாக இருக்காது. தவிர கம்பளத்துக்கு சத்தத்தை இழுத்துக் கொள்ளும் சக்தி உண்டு. கீழ் ஃபிளாட்டிலும் வெளி அறைகளிலும் உண்டாகும் சத்தத்தை கம்பளம் வடிகட்டித்தான் வெளிப்படுத்தும்.
கம்பளங்கள் நிறைய வண்ணங்களிலும், பலவித டிசைன்களிலும் கிடைப்பதால் உங்களுக்கான வாய்ப்பு நிச்சயம் அதிகமாகிறது. உங்கள் பட்ஜெட்டுக்கேற்ற கம்பளத்தை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் கம்பளத்தால் உண்டாகக்கூடிய எதிர்வினைகளையும் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். தரையில் ஏதாவது திரவம் சிந்தி விட்டால் அதைத் துடைத்துவிட முடியும். ஆனால் கம்பளத்தில் சிந்தினால் அதை முழுவதுமாக துடைக்க முடியாது. தவிர இதனால் கம்பளத்தில் கறை (நிரந்தரமாகக்கூட) உண்டாக வாய்ப்பு உண்டு.
கம்பளத்தில் தூசி படிய வாய்ப்பு உண்டு. தவிர நுண்ணுயிர்கள் உயிர்வாழ கம்பளம் ஏற்றதாக இருக்கக்கூடும். அவற்றின் இனப்பெருக்கத்துக்கும் அவை வசதியாக இருக்கலாம். ஆக, படுக்கையறைக் காற்றின் சுத்தத்துக்குக் கம்பளம் எதிர்திசையில் செயல்படவும் வாய்ப்பு உண்டு.
சில கம்பளங்கள் ஃபார்மால்டிஹைடு போன்ற வாயுக்களை வெளிப்படுத்தக் கூடும். முக்கியமாக புதிய கம்பளங்களில் இது உண்டாகலாம். இது மாசை உண்டாக்கும். என்றாலும் நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் கம்பளங்களில் இந்தத் தொந்தரவு ஏற்படுவதில்லை.
காற்றில் உங்களுக்கு ஒவ்வாத பொருள்கள் இருந்தால் அவை காற்றோடு வெளியேறிவிட வாய்ப்பு உண்டு. ஆனால், கம்பளம் அந்தப் பொருளை ஈர்த்துக் கொள்ளக் கூடும். கம்பளங்களில் ஆழமாக இறங்கித் தங்கிவிடும் இதுபோன்ற மிகச் சிறிய துகள்களை வாக்குவம் கிளீனரால்கூட நீக்க முடிவதில்லை என்பதே உண்மை. சிலவகைக் கம்பளங்களை மறுசுழற்சி செய்ய முடிவதில்லை என்பதால் சுற்றுச் சூழலுக்கு நாம் மறைமுகமாகக் கேடு விளைவித்தவர்கள் ஆகக்கூடும்.
கம்பளத்தில் கட்பைல் (cutpile) என்றும் லூப்பைல் (looppile) என்றும் இரண்டு முக்கியப் பிரிவுகள் உண்டு. முதல்வகைக் கம்பளத்தின் நுனியில் உள்ள இழைகள் நன்கு வெட்டப்பட்டிருக்கும். இரண்டாம் வகையில் நுனியில் உள்ள இழைகள் வெட்டப்படுவதற்கு மாறாக முடிச்சுகள் போலக் கட்டப்பட்டிருக்கும். இவற்றில் முதல்வகைப் பிரிவுதான் படுக்கையறைக்கு ஏற்றது. ஏனென்றால் அவைதான் கால்களைத் தடுக்கி விடாது.
கம்பளம் என்பது இயற்கையான இழைகளால் ஆனதாகவும் இருக்கலாம். செயற்கை இழைகளால் உருவாக்கப்பட்டதாகவும் இருக்கலாம். இயற்கையான கம்பளி என்பது மிருதுவாக இருக்கும். விலை கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும். செயற்கைக் கம்பளங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி இருக்கும். மிகப்பெரிய அறை என்றால் அதற்கு செயற்கைக் கம்பளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செயற்கைக் கம்பளங்களில் நைலான் விலை உயர்ந்தது. பாலியஸ்டர் கம்பளங்கள் விலை குறைந்தவை.
எந்த வண்ணம் கொண்ட கம்பளங்களைப் பயன்படுத்தலாம்? மிகவும் வெண்மையான, வெளிர்நிறக் கம்பளங்கள் என்றால் அழுக்கு பளிச்சென்று தெரியும். அவற்றை முழுவதும் நீக்குவதும் கஷ்டம். நடுத்தரமான வண்ணங்கள் (பழுப்பு போன்றவை) தேர்ந்தெடுக்கப்படலாம். சுவரில் வெளிறிய வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தால் அழுத்தமான சிவப்பு, பச்சை வண்ணக் கம்பளங்கள்கூட பார்ப்பதற்குப் பொலிவாக இருக்கும்.