வங்கிகள் அளிக்கும் கடன் நமக்குப் பல விதத்தில் உதவுகின்றன. வீடு வாங்க, வியாபாரம் தொடங்க, கல்யாணம் முடிக்க, கல்வி கற்க எனப் பல விஷயங்களுக்கு வங்கிகளின் கடனை நம்பி இருக்கிறோம். இதில் வீடு வாங்க கடன் வாங்குபவர்கள் கடனை அடைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டால் அந்த வீட்டை வங்கிகள் கையகப்படுத்தி ஏலத்தில் விடும். வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கிக் கட்ட முடியாவில்லை என்றாலும் இதுதான் நிலைமை.
ஏலம் விடுவதன் மூலம் தங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையை வங்கிகள் வசூலித்துக்கொள்கின்றன. வங்கிகள் கையகப்படுத்தி ஏலம் விடும் வீட்டை வாங்குவதில் பொதுவாக ஒருவிதமான சந்தேகம் உண்டு. அதில் ஏதெனும் வில்லங்கம் இருக்குமோ, என்னமோ என நினைப்பதுண்டு. இந்த மாதிரியான வீட்டை வாங்கலாமா?
வங்கிகள் வழியாக ஏலத்திற்கு வரும் வீட்டை வாங்குவதில் பல அனுகூலங்கள் உண்டு. ஏனெனில் இந்த மாதிரியாக ஏலத்திற்கு வரும் வீட்டைக் குறித்து வங்கியின் சட்ட வல்லுநர்கள் நன்கு விசாரித்திருப்பார்கள். பத்திரங்களை ஆய்வு செய்திருப்பார்கள். பத்திரங்களில் வில்லங்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் வீட்டை ஏலத்திற்குக் கொண்டு வருவார்கள். ஆக வங்கி ஏலம் விடும் வீட்டை வாங்குவதில் சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் இராது.
வீட்டைப் பொது ஏலத்திற்கு வங்கியிடமிருந்து எடுப்பதால் விலை நியாயமாக இருக்கும். வியாபார நோக்கம் மற்றும் லாப நோக்கம் ஆகியவற்றை வங்கிகள் பார்ப்பதில்லை. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் ஏலத்தில் வரும் வீட்டை வாங்குவதில் சில தீமைகளும் இருக்கின்றன.
ஏலத்தில் வாங்கிய வீட்டில் உரிமையாளர் இருந்தால், அவரைக் காலி செய்யச் சொல்ல முடியும். ஆனால் அந்த வீடு மாத வாடகைக்கோ, லீசுக்கோ விடப்பட்டிருந்தால், அதில் குடியிருப்பவர்கள் அந்த ஒப்பந்தத்தைக் காட்டி வீட்டை உடனே காலி செய்ய மறுக்கலாம். ஒருவேளை தீர்க்கமாக மறுத்து விட்டால், ஒப்பந்தம் காலாவதி ஆகும் வரை அவர்கள் குடியிருக்கலாம். வீட்டை வாங்கியவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் வரும்.
இந்த மாதிரியாக வங்கிகள் அழைப்பு விடுக்கும் ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் வீட்டை எடுத்தவுடன் முன்பணம் கட்டச் சொல்வார்கள். பிறகு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் எஞ்சிய பணத்தைக் கட்டிவிட வேண்டும். காலக் கெடுவுக்குள் பணம் செலுத்தாமல் போனாலோ, பணம் இல்லை என்று கைவிரித்தாலோ தானாகவே ஏலத்தில் எடுத்த வீடு ரத்தாகிவிடும். பிறகு மீண்டும் ஏலம் விடப்படும்.
ஏலத்தில் கலந்துகொள்ளும் தரகர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே பேசி வைத்து ஏலத் தொகையை கூட்டவோ, குறைக்கவோ செய்துவிடுவார்கள். ஏலத்தைத் தாறுமாறாக ஏற்றிவிட்டுக் கடைசியில் யார் தலையிலாவது கட்டிவிடவும் வாய்ப்புகள் அதிகம். யாராவது ஏல விலையைத் தாறுமாறாக உயர்த்தினால் உன்னிப்பாகக் கவனித்துச் செயல்பட வேண்டும்.