வீட்டுக் கடன் வாங்காமல் யாரும் சொந்த வீட்டைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இன்று வங்கிகளும் வீட்டுக் கடனைத் தாராளமாக வழங்குகின்றன. வீட்டுக் கடனை வாங்கியதோடு எல்லாமும் முடிந்துவிடுவதில்லை. மாதந்தோறும் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தினால்தான் வீடு சொந்தமாகும். வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்தும்போது பலரும் செய்யும் ஒரே காரியம் தவணைத் தொகை குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். இது சரியா?
இன்று வங்கிகள் தாராளமாக வீட்டுக் கடன் வழங்க முக்கியமான ஒரு காரணம், கடன் வாங்குபவர்கள் முறையாக அதைத் திருப்பிச் செலுத்துவதுதான். வாடகை வீடு என்றால் வீட்டு வாடகை, கூடுதலாகச் செலுத்தப்படும் மின் கட்டணம் என மாத வாடகை கூடுதாலகவே செலவாகிறது. இதன் காரணமாகச் சொந்த வீடு வாங்கப் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். கொடுக்கும் வாடகைப் பணத்தோடு கொஞ்சம் கூடுதல் பணத்தைப் போட்டு வீட்டுக் கடனுக்கான தவணைத் தொகையை (இ.எம்.ஐ.) செலுத்திவந்தால் வீடு என்ற சொத்தும் கிடைப்பதே இதற்குக் காரணம்.
இதன் காரணமாக வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. முன்பு இருந்ததைவிட இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி யும் குறைந்திருக்கிறது. முன்பெல்லாம் வீட்டுக் கடனைத் திரும்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு குறைவாகவே வழங்கப்பட்டது. ஆனால், இப்போது 20 30 ஆண்டுகள்கூட வீட்டுக் கடனைச் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், 20, 25 ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ.-யைச் செலுத்த அவகாசம் எடுத்துக் கொண்டால், பலரும் ‘இத்தனை வருடம் செலுத்த வேண்டுமா?’ என்று வாயைப் பிளப்பார்கள். கால அவகாசத்தை அதிகம் தேர்வு செய்யும்போது செலுத்தப்படும் மாதத் தவணைத் தொகை குறைகிறது. அதே சமயம் நாம் செலுத்தும் கடனுக்கான வட்டி தொகையும் அதிகரித்துவிடுகிறது.
சரி, கால அவகாசம் கூடினால் பயன் கிடைக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மையில் கால அவகாசம் கூடும் போது மொத்தமாக நாம் செலுத்தும் தொகை இரட்டிப்பாக அதிகரிக்கிறது.
உதாரணத்துக்கு ஒருவர் 25 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். கடனுக்கு 10 சதவீத வட்டி என்றும், செலுத்தும் காலக்கெடு 10 ஆண்டுகள் என்றும் வைத்துக்கொள்வோமே. அப்படியானால் மாதத் தவணை எவ்வளவு வரும் தெரியுமா? 33,037 ரூபாய் செலுத்த நேரிடும். இதுவே, 30 ஆண்டுகளாக இருந்தால், மாதத் தவணை 21,940 ரூபாய் செலுத்த நேரிடும். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்களேன். 11,000 ரூபாய் மட்டுமே. அதேசமயம், வீட்டுக் கடனை அதிக ஆண்டுகளில் செலுத்தும்போது வட்டிக்குச் செல்லும் தொகை மிகமிக அதிகமாக இருக்கும் என்பதை மறக்கக் கூடாது.
உதாரணத்துக்கு 25 லட்ச ரூபாய் கடனைப் பத்தாண்டுகளில் திரும்பச் செலுத்தினால், வட்டிக்கு மட்டும் நீங்கள் செலுத்தும் தொகை 14.64 லட்ச ரூபாய்தான். இதுவே 30 ஆண்டுகளில் வீட்டுக் கடனைச் செலுத்தினால் வட்டிக்கு மட்டும் செலுத்தும் தொகை 54 லட்சம் ரூபாய். அதாவது, நீங்கள் வாங்கிய கடனைவிட வட்டிக்கு மிக அதிகத் தொகை செல்கிறது என்பதை உணருகிறீர்களா? எனவே குறைவான இ.எம்.ஐ. என்ற வகையில் கால அவகாசத்தைத் தேர்வு செய்யாமல் எவ்வளவு வருவாய் வருகிறது, குடும்பச் செலவினங்களைப் பார்த்து அதற்கேற்பத் தவணைக் காலத்தைத் தேர்வு செய்வதே நல்லது. அதிக வருவாய் ஈட்டுவோர் அதிக கால அவகாசத்தைத் தேர்வு செய்வது நல்லதாக இருக்காது. வருவாய் குறைந்தவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால் அதிகக் கால அவகாசத்தைத் தேர்வு செய்வதில் தவறில்லை.
ஆனால், வீட்டுக் கடனை முன் கூட்டியே அடைப்பதற்கான வழி வகைகளும் நம் கையில் இருக்கின்றன. இப்போது பல நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. சம்பளம் உயரும்போது, தவணைத் தொகையை அதிகரித்துக் கட்டலாம். அப்படி இல்லாவிட்டால், சம்பள உயர்வின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை முதலீட்டுத் திட்டங்களில் செலுத்தலாம். அதன்மூலம் கிடைக்கும் கூடுதல் தொகையை அப்படியே வீட்டுக் கடனை அடைக்கவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் வீட்டுக் கடனுக்கான கடன் தொகையும் குறையும்; கால அவகாசமும் குறையும்.
இருந்தாலும் வீட்டுக் கடனுக்கான கால அவகாசம் 15 ஆண்டுகள் என்ற அளவில் வைத்துக்கொள்வது நல்லதேர்வாக இருக்கும் என்று வங்கியாளர்கள் கூறுகிறார்கள். இந்தக் கால அவகாசத்துக்கு முன்பே 10 அல்லது 11 ஆண்டுகளில் வீட்டுக் கடனை அடைத்தால் பல விதங்களிலும் நன்மை உண்டு. எனவே வீட்டுக் கடன் வாங்கும்போது எவ்வளவு ஆர்வம் காட்டுகிறோமோ, அதே ஆர்வத்தை விரைவாகத் திருப்பிச் செலுத்துவதிலும் காட்டினால் பல லட்சங்கள் மிச்சமாகும் என்பது நிதர்சனம்.