கனி
ஒரு வீடு என்பது வாழ்வதற்கான இடமாக மட்டும் இருப்பது போதாது. அது தனிமை, மனநிம்மதி, ஓய்வு ஆகியவற்றை அளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அந்த வேலையைச் செய்ய வேண்டும், இந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் வீட்டுக்குள் நுழையும்படி இருக்கக்கூடாது. வீட்டை அமைதியும் நிம்மதியும் அளிக்கக்கூடிய சரணாலயமாக மாற்றுவதற்கான சில ஆலோசனைகள்…
வசந்தம், கோடை, மழை, குளிர் என எல்லாக் காலங்களும் உங்கள் வீட்டில் பிரதிபலிக்குமாறு வடிவமைப்பது சிறந்தது. இது இயற்கையை வீட்டுக்குள்ளிருந்தே அனுபவிக்கும் வாய்ப்பை அளிக்கும். குளிர்காலத்தில், கனமான திரைச் சீலைகளைப் பயன்படுத்தி, வீட்டுக்குள் இருக்கும் கதகதப்பைத் தக்க வைத்துக்கொள்ளலாம். கோடைக் காலத்தில், அதற்கு மாறாக மென்மையான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். அல்லது ஜன்னல்களைத் திறந்துவைத்துப் பறவைகளின் பாடல்களை ரசிக்கலாம்.
சரியான வெளிச்சம்
வீட்டிலிருக்கும் எல்லா அறைகளுக்கும் சரியான வெளிச்சம் அவசியம். ஓர் அறையின் வெளிச்சத்தைப் பொருத்தே அந்த அறையின் செயல்பாடு அமையும். அதனால், அதிகமாகப் பயன்படுத்தும் அறைகளான வரவேற்பறை, சமையலறை போன்றவற்றில் இயற்கையான வெளிச்சம் போதுமான அளவுக்கு இருக்கும்படி வடிவமைப்பது சிறந்தது. வித்தியாசமான, ரசனையான வெளிச்சம் வேண்டுமென்று நினைப்பவர்கள், வாசனை மெழுகுவர்த்திகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இசை
மனத்தை அமைதியாக வைத்திருக்க இசையைத் தவிர சிறந்த அருமருந்து இருக்க முடியாது. அதனால், வீட்டின் ஒரு மூலையை இசைக்காக ஒதுக்குவது சிறந்தது. இதில், ஒலிபெருக்கிகளைச் சரியான இடத்தில் அமைப்பது அவசியம்.
படுக்கை
காலையில் எழுந்தவுடன் படுக்கையைச் சீர்படுத்தி வைப்பது அவசியம். எப்போதும் காலையில் முதல் வேலையாகப் படுக்கையைச் சீர்படுத்துதல் ஒரு நாளை சுறுசுறுப்பாகத் தொடங்க உதவும்.
பூக்கள், செடிகள்
எப்போதும் வீட்டுக்குள் செடிகள் இருப்பது மனத்துக்கு அமைதியைக் கொடுக்கும். அதனால், வீட்டுச்செடிகளுடன், பால்கனியில் சில பூச்செடிகளையும் வளர்க்கலாம். இது சரணாலயத்துக்குள் உங்கள் வீடு இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.
நறுமணம்
அமைதியான மனத்துக்கும் நறுமணத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதனால், வீட்டுக்கான நறுமணத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாகச் தேர்ந்தெடுப்பது அவசியம். ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ற மாதிரி நறுமணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். கோடைக் காலத்துக்கு எலுமிச்சை, பூக்களின் நறுமணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவே குளிர்காலத்துக்குக் கஸ்தூரி போன்ற மணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
தனித்துவம்
உங்கள் வீட்டின் தனித்துவம் உங்கள் அறைக்கலன்களிலும் நீங்கள் தேர்ந்தெடுத்து மாட்டிவைக்கும் ஒளிப்படங்களில் இருந்துதான் வெளிப்படும். அதனால், உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் கலைப்பொருட்கள், ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுத்து வரவேற்பறையை வடிவமைப்பது சிறந்த அம்சமாக இருக்கும்.