ஜீ. முருகன்
இப்போதும் சிலர் ஆர்ச் என்றால் வீட்டுக்குள் சமயலறை நுழைவாயிலுக்கோ டைனிங் அறை நுழைவாயிலுக்கோ செய்யப்படும் அலங்கார வளைவு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவை பெரும்பாலும் கூரை கான்கிரிட் போடும் போதே கம்பிகளை தொங்கவிட்டு அதில் வலை அடித்து சிமெண்ட் கலவையை மெத்தி செய்யப்படுகிறது.
இதற்கு பொருட் செலவும் வேலை ஆட்களின் செலவும் கூடத்தான். நாம் சொல்வது கீழே ஆதார அமைப்பின் உதவியுடன் செங்கற்களையோ கருங்கற்களையோ சீரான அளவில் அடுக்கிக் கட்டப்படும் ஆர்ச். இப்பணி முடிந்து கலவை ஓரளவு உறுதிப்பட்டவுடன் இந்த ஆதார அமைப்பை நீக்கிவிடலாம். ஆர்ச் தனியாகத் தன் வேலையைச் செய்யத் தொடங்கிவிடும்.
அரை வட்டத்திலிருந்துத் தொடங்கி அதன் உயரத்தை ஓராளவு குறைத்தும் ஆர்ச்சையை வடிவமைக்கலாம். ஆனால் அதன் தாங்கு திறன் குறைந்துகொண்டே வரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்றடி அகலமுள்ள ஆர்ச்சுக்கு ஒன்றரை அடி உயரம் (ஆரத்தின் அளவு) அதிகபட்சமானது. அகலத்தைக் குறைக்காமல் உயரத்தை ஒரு அடி வரை குறைக்கலாம். அதற்கு மேல் குறைத்தால் அது பயனற்றுப் போகும்.
ஆர்ச் உருவாக்குவதற்கான ஆதார அமைப்பைப் பல வழிகளில் செய்யலாம். பலகையைக் கொண்டு ஒரு டம்மியைத் தயாரித்துவைத்து அதன் மேல் ஆர்ச் கட்டலாம். வெறும் செங்கற்களை அடுக்கி, அதன் மேல் வளைந்த கம்பிகளை வைத்தும் கட்டலாம். எங்கள் வீட்டில் கட்டப்பட்ட ஆர்ச்சுக்கு இரும்புப் பட்டைகளால் ஆன வடிவத்தைச் செய்து அதன் மேல்தான் கட்டினோம். இதைப் பிறகு நாமே பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். பெயிண்ட் அடித்து வைத்துவிட்டால் பல ஆண்டுகளுக்கு ஒன்றும் ஆகாது.
ஆர்ச்சில் இடம்பெறும் கற்களின் எண்ணிக்கை ஒற்றைப்படையில்தான் இருக்க வேண்டும். இரண்டு பக்கமிருந்தும் சீரான இடைவெளியில் கற்களை வைத்து கட்டிக்கொண்டு வந்து உச்சியில் ஒரே கல்லில் முடிய வேண்டும். அந்த ஒரு கல்லை பூட்டும் கல் (Key Brick) என்று சொல்வார்கள். அதைப் பொருத்திவிட்டால் ஆர்ச் மூடப்பட்டுவிடும். அதன் பிறகு அது பளுவைத் தாங்கத் தொடங்கிவிடும். அப்போதே ஆதார அமைப்பை எடுத்துவிட்டால்கூட ஒன்றும் ஆகிவிடாது.
கற்களுக்கிடையிலான கலவையின் அளவு சில மில்லிமீட்டரில் இருந்தால் போதும். இங்கே கற்களுக்குத்தான் வேலை, கலவைக்கு வேலை இல்லை. கற்களுக்கு இடையிலான இந்த இடைவெளியை முன்பே திட்டமிட்டுச் சீராக அடுக்குவது சிறந்தது. இதற்கு ஆதார அமைப்பைத் தரையில் கிடத்திக்கற்களை அடுக்கிப் பார்த்துவிட்டால் எத்தனை கல், எவ்வளவு கலவை தேவை என்பது தெரிந்துவிடும்.
பலகையாலோ இரும்புப் பட்டையாலோ செய்யப்பட்ட ஆதார அமைப்பை இரண்டு பக்கச் சுவர்களின் மீதும் வைக்கும்போது அதன் இரு முனைகளிலும் அரை அங்குலக் கனமுள்ள மரக் குச்சிகளைச் சக்கைகளாக வைப்பது அவசியம். கலவை உறுதிப்பட்டவுடன் இந்தக் குச்சிகளைத் தட்டி எடுத்துவிட்டால் ஆதார அமைப்பு, சற்றே கீழிறங்கித் தன் பிடிமானத்தை இழுந்து தனியே வந்துவிடும். ஆர்ச் அப்படியே கம்பீரமாக நிற்கும்.
எங்கள் வீட்டில் ஆர்ச் கட்டிய மறுநாள் காலை இந்த ஆதார அமைப்பை எடுக்கச் சொன்ன போது கொத்தனார்களே பயந்தார்கள். “வேணாம் சார்” என்றார்கள். “ஒண்ணும் ஆகாது எடுங்க” என்று தைரியம் சொன்ன பிறகுதான் எடுத்தார்கள். இந்த எளிய தொழில்நுட்பத்தைக்கூட புரிந்துகொள்ளாமல் போனதுதான் நம்முடைய பெரிய இழப்பு.
கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்.
‘மின்மினிகளின் கனவுக் காலம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com