சீதாராமன்
அறைக்கலன்களில் பல காலம் மரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்தது. இப்போது அதற்கு மாற்றாகப் பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் சிறந்தது, அக்ரலிக். இது பாலிமரை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள். உள் தடுப்புச் சுவர்களாகவும் அறைக் கலன்களாகவும் இந்த அக்ரிலிக் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இது மட்டுமல்லாது பலவிதங்களில் இந்தப் பொருள் பயன்படுகிறது.
அக்ரிலிக், கண்ணாடியைப் போல பளபளப்பும் ஒளியைக் கடத்தும் இயல்பும் கொண்டது. அதே சமயம் ஃபைபரை விட வலிமையாது. இவற்றை மிக எளிதாக அறுக்க முடியும். அதனால் அக்ரிலிக் தடுப்புகள் வீட்டின் அளவுக்கு ஏற்றாற் போல் வெட்டிப் பயன்படுத்த ஏதுவானது. அக்ரிலிக் இப்போது மீன் தொட்டிகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கண்ணாடியைப் போல இருப்பதால் இவை உடைந்துவிடுமோ என அச்சப்படத் தேவையில்லை. இவை எளிதில் உடையாது. தடுப்புச் சுவர், அறைக்கலன்கள் மட்டுமல்லாது கதவு, ஜன்னலாகவும் அக்ரிலிக் பயன்படுத்தப்படுகிறது.
வீடுகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்றாலும் இப்போது அக்ரிலிக் பெரும்பாலும் அலுவலக உள் அலங்காரங்களுக்குத்தான் பயன்படுகிறது. சோஃபா, சாப்பாடு மேஜை, இருக்கைகள், அலமாரிகள், ஊஞ்சல் என இன்னும் பலவிதமான அக்ரிலிக் அறைக்கலன்கள் இப்போது சந்தைக்கு வந்துள்ளன.
என்னதான் இம்மாதிரியான புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும் மர அறைக்கலன்கள்தாம் நீடித்த உழைப்பைக் கொண்டவை என ஆணித்தரமாக நம்புவோம். ஆனால், மர அறைக்கலன்களுடன் ஒப்பிட்டால் அக்ரிலிக் அறைக்கலன்கள் கையாள்வதற்கு எளிது. பொருட் செலவும் அதிகம் ஆகாது. மேலும் இது மறுசுழற்சிக்கு ஏற்றது. அதனால், சுற்றுப்புறத்துக்கும் உகந்தது.
அக்ரிலிக் அறைக்கலன்கள் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்பட்டு வருவதால் அவை நேர்த்தியான வடிவமைப்புடன் இருக்கும். தயாரிப்பும் மேம்பட்டு இருக்கும். மேலும் இவை பராமரிப்புக்கும் எளிதானது. இந்தியாவிலேயே இப்போது அக்ரிலிக் அறைக்கலன்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் தேவை பெருகப் பெருக தயாரிப்பு நிறுவனங்களும் பெருகி விலையும் குறையும். மரங்கள் அறைக்கலன்களுக்காக வெட்டப்படுவதும் குறையும்.