உலகின் புகழ்பெற்ற வண்ணங்களை நிர்வகிக்கும் பேன்டோன் (Pantone) நிறுவனம், 2020-ம் ஆண்டின் வண்ணமாகச் செம்மையான நீலத்தை (Classic Blue – PANTONE 19-4052) அறிவித்துள்ளது.
சமூகம், பயன்பாடு, பயணம் உள்ளிட்ட உலகின் பல்வேறு போக்குகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஒரு வண்ணத்தை இந்நிறுவனம் தேர்வுசெய்கிறது. 2000-ம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை அறிவித்துவருவதை வழக்கமாக வைத்துள்ளது. இந்த ஆண்டு உள் அலங்கார வடிவமைப்பில் செம்மையான நீலம் ஆதிக்கம் செலுத்தவிருக்கிறது.
நம்பிக்கை தரும் நீலம்
“காலமற்றது, நீடித்த சாயல், எளிமையில் நேர்த்தில் நிச்சயமற்ற ஒரு காலத்தில் உறுதியைப் பிரதிபலிப்பது போன்ற அம்சங்களால் இந்த ஆண்டின் வண்ணமாகச் செம்மையான நீலத்தைத் தேர்வு செய்துள்ளோம். வாழ்வதற்கு நம்பிக்கை தேவைப்படும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நமக்குத் தேவைப்படும் அந்த நிலைத்தன்மை, தன்னம்பிக்கையை இந்த வண்ணம் வழங்கும். ஆழமான அதிர்வுகளுடன் வலுவான அடித்தளத்தை இந்த வண்ணம் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார் பேன்டோன் நிறுவனத்தின் செயல் இயக்குநர் லெட்ரிஸ் ஐஸ்மேன்.
வீட்டில் இந்தச் செம்மையான நீல வண்ணத்தைப் பயன்படுத்த நினைப்பவர்கள், வரவேற்பறையில் சோஃபா, கைவைத்த நாற்காலி ஆகிய பெரிய அறைக்கலன்களை இந்த வண்ணத்தில் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த வண்ணம் செம்மை, நிலைத்தன்மை, அமைதியைக் குறிக்கிறது. வீட்டின் வடிவமைப்பு, அலங்காரத்தைப் பொறுத்தவரை, இந்த வண்ணம் பாதுகாப்பு, நிலைத்தன்மை வாய்ந்த அடித்தளம், படைப்பாற்றலுக்கான தன்னம்பிக்கையை அளிக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வரவேற்பறையில் முக்கியமான சுவருக்கு இந்த வண்ணத்தைப் பயன்படுத்துவதும் பொருத்தமாக இருக்கும். வீட்டுக்கு ஆடம்பரமான தோற்றத்தைக் கொடுப்பவர்களுக்கு இந்த வண்ணம் சிறந்தது.
ஆனால், படுக்கை அறைக்குப் பயன்படுத்துவதாக இருந்தால் முற்றிலும் இந்த வண்ணத்தைப் பயன்படுத்தாமல் ஏதாவதொரு பகுதிக்கு மட்டும் இந்தச் செம்மையான நீலத்தைப் பயன்படுத்தலாம்.
வரவேற்பறையின் தரைவிரிப்புக்கு இந்த நீல வண்ணத்தைப் பயன்படுத்துவது பொறுத்தமாக இருக்கும். சுவர் மட்டுமில்லாமல் இந்த வண்ணத்தைத் தரைவிரிப்பு, திரைச்சீலைகள், பொருட்கள் போன்ற பலவிதமான அமைப்புகளாகவும் பயன்படுத்தலாம்.
குறிப்பாக, தலையணைகள், குஷன்கள், பூஜாடி, சமையலறைப் பொருட்கள், புத்தக அலமாரி, படுக்கை விரிப்புகள் போன்றவற்றுக்கும் இந்த செம்மையான நீலத்தைப் பயன்படுத்தலாம்.
சமையலறை மேசை, அலமாரிகளுக்கு இந்த வண்ணத்தைப் பயன் படுத்துவது சிறப்பான தேர்வாக இருக்கும். இந்தச் செம்மையான நீல நிறத்தை கறுப்பு, வெள்ளை, உலோக வண்ணங்களுடன் இணைத்துப் பயன் படுத்துவதும் கூடுதல் சிறப்பாக அமையும்.