ஜி.எஸ்.எஸ்.
பெரும்பாலான வீடுகளில் நுழைந்தவுடன் ஒரு வாயில் இருக்கும். இதை நடைவெளி என்பார்கள் ஆங்கிலத்தில் ஃபாயர் (foyer). கூடத்தையும் வாசலையும் இது இணைக்கும் பகுதியாக இருக்கும். விருந்தினர்கள் யாராவது வந்தால் அவர்கள் நுழையும்போது இந்த இடத்தில் நின்றுதான் நீங்கள் வரவேற்பீர்கள்.
கூடம், படுக்கை அறைகள் போன்றவற்றை அலங்கரிப்பதிலும், உரிய அறைக்கலன்களை அங்கு வைப்பதிலும் மிகவும் கவனம் செலுத்துகிறோம். ஆனால் ஃபாயர் பகுதியில் நம்மில் கணிசமானவர்கள் போதிய கவனம் செலுத்துகிறார்களா என்பது சந்தேகமே.
வீட்டுக்குள் நுழையும்போது கதவைத் திறந்தவுடன் கண்ணில் படும் பகுதி என்பதால் இங்கு அழகான ஓர் ஓவியத்தை வைத்தால் அது பார்வைக்கு ரம்மியமாக இருக்கும். அது தெய்வ உருவமாகவோ இயற்கைக் காட்சியாகவோ இருக்கலாம். உங்களுக்கு வெளிர் நிறம் பிடித்திருக்கலாம்.
அல்லது அழுத்தமான வண்ணம் பிடித்திருக்கலாம். ஆனால் ஃபாயர் பகுதியில் கண்ணில் படும் ஒவியம் அழுத்தமான வண்ணத்தில் இருப்பது நல்லது. வெளிர் நிறத்தில் சுவர் இருக்கும்போது இது மேலும் அவசியம். இங்கு சாவிகளை மாட்டுவதற்கான ஓர் இடம் இருக்க வேண்டும். வீட்டுக்குள் நுழையும்போது உங்களது கார் சாவி, ஸ்கூட்டர் சாவி, அலுவலகம் தொடர்பான சாவிகள் போன்றவற்றை இங்கேயே மாட்டி விடலாம்.
நீங்கள் கோட் அணிபவர் என்றால் வெளியிலிருந்து வந்தவுடன் அதைச் சிறிது நேரம் கழற்றி வைப்பதற்கு இந்தப் பகுதியைப் பயன்படுத்தலாம். நீங்கள் கோட் பயன்படுத்தவில்லை என்றால்கூட மழைக் காலத்தில் ரெயின்கோட் அணிய வாய்ப்பு உண்டு. மழையில் நனைந்துவிட்டு உள்ளே வரும்போது ஈரமான மழைக்கோட்டை மாட்டி வைத்துக் கொள்வதற்கான ஏற்பாடும் இங்கு இருக்க வேண்டும்.
ஃபாயரை ஷூக்கள் வைப்பதற்குப் பயன்படுத்துவதுண்டு. உங்கள் காலணிகளை வைப்பதற்கு மூடப்பட்ட ஒரு அலமாரி இந்தப் பகுதியில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றிலுள்ள அழுக்குகள் மற்றும் கிருமிகள் உள்ளே வராது. ஷூக்களை அணிந்து கொள்வதற்குச் சற்றே உயரமான ஒரு பகுதியும் வேண்டும். மேற்குறிப்பிட்ட அலமாரி உயரக் குறைவாக இருந்தால் அதன் மேற்பகுதியைக்கூட இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் தரைவிரிப்பு இருப்பது நல்லது. ஏனென்றால், வெளியிலிருந்து பாதங்கள் அல்லது காலணிகள் மூலம் வந்துசேரும் அழுக்கு அந்தப் பகுதியிலேயே வடிகட்டப்பட்டுவிடும். தவிர ஈரத்தையும் அவற்றால் உறிஞ்சிக் கொள்ள முடியும். ஆனால், இந்த விரிப்பைச் சீரான கால இடை வெளிகளில் சுத்தம் செய்ய மறந்து விடக் கூடாது. வீட்டுக் குழந்தைகளையும் இந்தப் பகுதியை ஒழுங்காகப் பயன்படுத்த வைக்க வேண்டும்.
மேற்படி பயன்களையும் ஃபாயர் மூலம் அடைய வேண்டும். அதே நேரம் அது பார்வைக்கு உறுத்தலாக இருக்கக் கூடாது. இங்கே சிறிய ஷோகேஸ்களோ விலை உயர்ந்த பொருள்களையோ காட்சிக்கு வைத்தால் அவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்பட வேண்டும். உங்கள் ஃபாயர் நீளமானதாக இருந்தாலும் இருபுறங்களிலும் படங்களை மாட்டலாம். அப்படி இல்லையென்றால் நுழைந்தவுடன் கண்ணில் படும்படியாக அந்தப் படம் இருக்க வேண்டும்.
எப்படி இருந்தாலும் உள்ளே செல்வதற்குப் போதிய வழி இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் நிரப்பியுள்ள பொருள்களின்மீது யாராவது இடித்துக் கொள்ளலாம் அல்லது தடுக்கி விழுந்து விடலாம்.