கனி
புத்தாண்டு மலரவிருக்கிறது. வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதற்கு இதைவிடச் சரியான நேரம் இருக்க முடியாது. வீட்டில் தேவையற்ற பொருட்களைக் களையாமல் சேர்த்துவைத்திருப்பதற்கும் மனநிலைக்கும் தொடர்பு இருக்கிறது.
வீட்டில் பயன்படுத்தாமல் மலைபோல் குவிந்திருக்கும் துணிகள் இருந்தால், அது ஒரு வகையில், உங்கள் மனத்தின் பிரதிபலிப்புதான். மனநலன், உடல்நலன் இரண்டுக்குமே வசிக்கும் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வீட்டை எப்போதும் ஒழுங்கமைத்து வைத்துக்கொள்வதற்கான சில ஆலோசனைகள்…
மனநிலை முக்கியம்
வீட்டைச் சுத்தப்படுத்தத் தொடங்கும் முன், உங்கள் மனத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை அகற்றுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள். உங்கள் மனத்தில் இருக்கும் எண்ணங்களை அமைதியாக அமர்ந்து உங்கள் நாட்குறிப்பேட்டில் எழுதலாம்.
இப்படி எழுதுவது உங்கள் மனத்தை ஒருமுகப்படுத்த உதவும். அன்றாடம் நாட்குறிப்பில் உங்கள் மனத்தில் இருக்கும் எண்ணங்களை எழுதுவது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவும். அத்துடன், ஒரு நாளில் பத்து நிமிடங்களைத் தியானத்துக்கு ஒதுக்குவதும் மனநிலையை மேம்படுத்துவதற்கான சிறந்த வழி.
எழுதலாம்
வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு முக்கியக் குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்வது சிறந்த வழி. உங்கள் வீட்டில் நீங்கள் சுத்தப்படுத்த நினைக்கும் அறைகளை (வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை) பற்றி எழுதிவைத்துக்கொள்ளுங்கள். எந்தெந்த அறையில் எவற்றையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும் என்பதை எழுதிவைத்துக்கொண்டால், ஒவ்வொரு பணியாக முடிப்பதற்கு உங்களுக்கு எளிமையாக இருக்கும். அத்துடன், வீட்டைச் சுத்தப்படுத்திய மனதிருப்தியும் கிடைக்கும்.
உள்ளே, வெளியே
வீட்டுக்குப் புதிதாக ஏதாவது ஒரு பொருள் வாங்குகிறீர்கள் என்றால், நீங்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஏதாவதொரு பொருளை வீட்டிலிருந்து அகற்றுவது அவசியம். வீட்டில் தேவையற்ற பொருட்கள் சேராமல் இருப்பதற்கு இந்த விதியைப் பின்பற்றுவது சிறந்தது. பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பொருள் நல்ல நிலைமையிலிருந்தால், அதைக் கூடுமானவரை தேவையிருப்பவர்களுக்குக் கொடுப்பதற்கு முயலுங்கள். அப்படியில்லாவிட்டால், மறுசுழற்சி செய்து அந்தப் பொருளை எப்படி வேறுவிதத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்துச் சிந்தியுங்கள்.
சேர்ந்து சுத்தப்படுத்தலாம்
மொத்தமாக ஒரே நாளில் நீங்கள் மட்டும் தனியாக வீட்டை ஒழுங்கமைக்கலாம் என்று திட்டமிட வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு நாள் ஒரு பணி என்று திட்டமிட்டால் எளிமையாக வீட்டை ஒழுங்கமைத்துவிடலாம். அத்துடன், வாரயிறுதி நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வீட்டைச் சுத்தப்படுத்தலாம். எடுத்தவுடன் பெரிய அறைகளைச் சுத்தப்படுத்தாமல் சிறிய அளவிலான குப்பைகளை அகற்றுவதற்கு முயற்சி செய்யலாம்.
மறுசுழற்சி
பழைய கண்ணாடி பாட்டில்கள், போர்வைகள், தலையணை உறைகள் போன்றவற்றை அப்படியே தூக்கிப்போடாமல் மறுசுழற்சி செய்து பயன்படுத்திக்கொள்வதற்கு முயலலாம். பழைய கண்ணாடி பாட்டில்களை குழந்தைகளின் சிறிய பொம்மைகளை வைத்துக்கொள்ளப் பயன்படுத்தலாம். பழைய போர்வைகளைச் சிறிய சதுரங்களாக வெட்டி, சமையலறையைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தலாம். ஒரு பக்கம் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும் காகிதங்களை ஒன்றாக இணைத்து குறிப்பேடு ஒன்றைத் தயாரித்துப் பயன்படுத்தலாம்.
ஒழுங்கமைத்தல்
வீட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒழுங்கமைப்பது அவசியம். எந்தெந்தப் பொருட்களை எங்கங்கே வைக்க வேண்டுமோ, அங்கங்கே எப்போதும் வைப்பதைப் பழக்கமாக்கிக்கொள்வது சிறந்தது. பெரும்பாலோரின் துணி அலமாரி அடுக்கப்படாமலே இருக்கும்.
பயன்படுத்தாமல் இருக்கும் துணிகளை அகற்றிவிட்டாலே, துணி அலமாரியை எளிமையாக ஒழுங்கமைத்துவிடலாம். வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் எந்தெந்த இடத்தில் வைக்கலாம் என்று தீர்மானித்துவிட்டாலே வீட்டைச் சுலபமாக ஒழுங்கமைத்துவிடலாம்.