சொந்த வீடு

தவணையில் ஒரு கண்வைக்க வேண்டும்

செய்திப்பிரிவு

அனில்

வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு வரை அதற்காகப் பல முறை வங்கிக்கு அலைவோம். அது குறித்துத் தேடி ஆலோசனைகள் கேட்போம். வீட்டுக் கடன் கிடைத்துவிட்டால் அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நமக்கென்ன என இருப்போம்.வீட்டுக் கடன் வாங்கிவிட்டதுடன் நம் வேலை முடிகிறதா என்ன?
ஈ.சி.எஸ். (Electronic Clearance Service - ECS) மூலம் தவணைத் தொகையை வங்கியே எடுத்துக் கொள்வதால் இதற்காக வங்கிக்கு அலைய வேண்டிய வேலையும் இருக்காது.

அதனால் இதற்கு மேல் வீட்டுக் கடனுக்கும் நமக்கும் வேறு தொடர் இல்லை என இருந்து விடுவோம். ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டைக் குறைக்கும் போதெல்லாம் பெரும்பாலான வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கின்றன. இப்படிக் குறைப்பதன் மூலம் தவணைக் காலமும் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், பெரும்பாலானவர்கள் இதைக் கவனிப்பது இல்லை.

தவணைத் தொகை சில நூறுகள் குறையும்போதோ அல்லது அதிகரிக்கும்போது அதை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. சில ஆண்டுகள் கழித்து எவ்வளவு தொகை கழிந்திருக்கிறது என்று பார்க்கும்போதுதான் பலருக்கும் பல உண்மைகள் தெரிய வரும். வீட்டு கடனைக் கட்டி முடிக்கும்வரை தவணை செலுத்தும் விஷயங்களில் கண்காணிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.

முதலில் வாங்கிய கடனில் நிலுவை தொகை எவ்வளவு, செலுத்தும் மாதத் தவணைத் தொகை எவ்வளவு, இதில் வட்டியும் அசலும் தனித்தனியாக எவ்வளவு, போன்ற வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது எவ்வளவு போன்ற கேள்விகள் கடன் வாங்கியவர் மனத்தில் எப்போதும் எழுந்துகொண்டே இருக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அதாவது, வட்டி விகிதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் அல்லது அதே நிலையிலேயே நீடிக்கலாம். இதை வைத்துதான் செலுத்தும் தவணைத் தொகையும் தெரியவரும். ரெப்போ வட்டி விகிதம் குறையும்போது சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துவிட மாட்டார்கள்.

அதேநேரம் வட்டி விகிதம் உயர்ந்தால் உடனே உயர்த்திவிடுவார்கள். ஈ.சி.எஸ். மூலம் தவணைத் தொகையைச் செலுத்துவதால் சில நூறு தொகை தவணையில் மாறும்போது அது நமக்குத் தெரியாமலேயே போய்விடும். இன்னும் பல வங்கிகள் வட்டி விகிதம் உயர்ந்தால் இ.எம்.ஐ. தொகையை உயர்த்த மாட்டார்கள். இ.எம்.ஐ. செலுத்தும் காலத்தை நீட்டித்துவிடுவார்கள். வாடிக்கையாளரிடம் எந்த விருப்பத்தையும் கேட்காமலேயே அவர்கள் விருப்பத்துக்கேற்ப செய்துவிடுவார்கள்.

வட்டி விகிதம் உயர்ந்து 10 வருடங்களில் தவணைக் காலம் 15 வருடங்களாக ஆன கதையெல்லாம் உண்டு. எனவே, வட்டி விகிதம் குறைந்தாலோ அதிகரித்தாலோ அது வங்கியில் எப்படி எடுத்தக்கொள்ளப்படுகிறது என்பதை வங்கிக்குச் சென்று விசாரித்து தெரிந்துகொள்வது அவசியம். இ.எம்.ஐ. தொகை குறைகிறதா அல்லது அதிகரிக்கிறதா, இ.எம்.ஐ. காலம் குறைந்திருக்கிறதா அல்லது அதிகரித்திருக்கிறதா என்பதையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

ஒரு சில ஆண்டுகள் முன்புவரை வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதங்களைக் குறைத்தன. இப்போதோ ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதங்களை அதிகரித்துக்கொண்டே உள்ளன. எனவே, இப்போது இருந்தே நீங்கள் செலுத்தும் தவணைத் தொகையில் கொஞ்சம் கவனம் காட்டுங்கள்.

SCROLL FOR NEXT