சொந்த வீடு

சமையல் மேடைக்கான கிரானைட்

செய்திப்பிரிவு

வீட்டுக் கட்டுமானத்தில் இன்றியமையாத பொருள்களில் ஒன்றாக கிரானைட்டும் ஆகிவிட்டது. முக்கியமாகச் சமையலறை மேடை அமைக்க இப்போது அதிகமாக கிரானைட்தான் பயன்படுத்தப்படுகிறது.

கிரானைட் பலரால் விரும்பப்படுவதற்கு அதன் அழகு ஒரு முக்கியக் காரணம். சுத்தப்படுத்துவதும் மிக எளிது. ஆனால், கட்டிட வல்லுநர்கள் கிரானைட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு வேறொரு முக்கியக் காரணமும் உண்டு.

சூடுபடுத்தப்பட்ட பாத்திரங்களை அப்படியே இறக்கிச் சமையலறையின் மேற்பரப்பில் வைக்க நேரிடும். அப்போது அந்த வெப்பம் அந்தத் தளத்தில் இறங்கும். கிரானைட்டாக இருந்தால் இதை எளிதில் தாக்குப் பிடிக்கும். கிரானைட் என்பது பாறையிலிருந்து உருவாக்கப்படுவதுதான். கிரானைட்டின் உறுதி அசாத்தியமானது. கனிமங்களின் உறுதியை அளக்க ஓர் அளவை உண்டு. இதை மோஸ் அளவை (Mohs scale) என்பார்கள். இதில் 6 என்ற உறுதித் தன்மையைக் கொண்டிருக்கிறது கிரானைட் (உலகின் மிக உறுதியான பொருள் என்று கருதப்படும் வைரத்தின் உறுதித்தன்மை 10).

கிரானைட்டின் உருகுநிலை சுமார் 1240 டிகிரி செல்ஷியஸ். நமது சமையலறைப் பாத்திரத்தின் அதிகபட்ச வெப்பநிலை 230 டிகிரி செல்ஷியஸ். எனவே, சூடான பொருளை கிரானைட் தளத்தின் மீது வைத்தால் அது பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் அதற்கு அதிகமாக உண்டு. (என்றாலும், நீண்ட காலம் தொடர்ந்து மிக வெப்பமான பொருட்களை கிரானைட் மீது வைத்தால் அதன் மேற்புறம் நிறத்தை லேசாக இழக்கத் தொடங்கும். ஆனால், விரிசல் ஏற்படாது).

இரண்டு காரணங்களுக்காகச் சூடான சமையலறைப் பாத்திரங்களை கிரானைட் தளத்தின் மீது வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒன்று நாம் ஏற்கெனவே கூறியதுபோல கிரானைட் கல்லின் வண்ணம் கொஞ்சம் மங்கலாகும். இன்னொன்று கிரானைட்டின் மற்றொரு இயல்புத்தன்மை தொடர்பானது. கிரானைட் வெப்பத்தைக் கொஞ்சம் வேகமாக இழுத்துக்கொள்ளும். அதாவது வெப்பமான உணவுப் பொருள் அடங்கிய பாத்திரத்தை கிரானைட் தளத்தின் மீது நேரடியாக வைத்தால் அது விரைவிலேயே தன் வெப்பத்தை இழுந்துவிட வாய்ப்பு உண்டு. எனவே, உணவுப்பொருள்கள் தங்கள் வெப்பத்தை இழக்காமல் இருக்க வேண்டுமானால், கிரானைட்டின் மீது வேறு ஏதாவது பொருளை வைத்து அவற்றின் மீது உணவுப்பொருள்களை வைப்பது நல்லது.

சிலர் மொட்டை மாடியில் அல்லது வீட்டுக்கு வெளியே உள்ள பகுதியில் கிரானைட்டில் சிறு சிறு மேடைகள் அமைப்பார்கள். சிறிய அளவுக் கொண்டாட்டங்களின்போது அங்கே உணவுப் பொருள்களை வைத்துப் பரிமாறலாம் என்பது அவர்களது எண்ணமாக இருக்கும். ஆனால், திறந்தவெளியில் இருக்கும் இந்த கிரானைட் தளங்கள் கடும் வெயில் கடும் குளிரிருக்கு நேரடியாக ஆட்படுகின்றன. இதன் காரணமாக கிரானைட் கற்களுக்கு பாதிப்பு உண்டாகலாம்.

எனினும், இப்போதெல்லாம் அடர்த்தியான கிரானைட் கற்களும் சந்தைக்கு வந்துவிட்டன. இவை வெளிப்புறத்திலுள்ள கடும் வெப்ப நிலைகளையும் தாக்குப்பிடிக்கின்றன. எனவே, இத்தகைய கிரானைட் கற்களை வெளிப்புறங்களில் பயன்படுத்தலாம்.

எந்த வண்ணம் கொண்ட கிரானைட் கற்களைப் பயன் படுத்தலாம் என்பதிலும் குழப்பங்கள் நேரலாம். பெரும்பாலும் நாலைந்து வண்ணங்கள் கொண்ட கிரானைட் கற்கள்தாம் வாங்கப்படுகின்றன. வெள்ளை வண்ண கிரானைட் கற்கள் பார்ப்பதற்கு அழகாகத் தோற்றமளிப்பதில்லை. ‘ஏதோ சமையல் மேடைமீது பேப்பரை ஒட்டியதுபோல் இருக்கிறது’என்று கருதுபவர்கள் உண்டு. ஆனால், சமையலறை சிறியதாக இருந்தால் வெள்ளை கிரானைட் பயன் படுத்தும்போது அது அறையைச் சற்றுப் பெரிதாகக் காட்டும்.

முழு வெள்ளையை சமையலறை மேடைகளுக்கு விரும்பாதவர்கள் வெண்மையுடன் பழுப்பு அல்லது கறுப்பு கலந்த வண்ணம் (இதை ஆங்கிலத்தில் beige என்கிறார்கள்) கொண்ட கிரானைட் கற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சமையலறையில் எந்தவிதமான வெளிச்சம் இருந்தாலும் அதற்கு இது ஏற்றதாக இருக்கிறது. தவிர சமையலறையிலுள்ள அலமாரிகளின் நிறம் எத்தகையதாக இருந்தாலும் அதோடு இந்த வண்ண கிரானைட் கற்கள் ஒத்துப்போகின்றன.

பழுப்பு வண்ண கிரானைட் கற்களும் பார்வைக்கு அழகுதான். என்றாலும், அவை பல்வேறு வண்ணங்கள் கொண்ட சமையலறை அலமாரி வண்ணத்துடன் அவ்வளவாகப் பொருந்தாது. என்றாலும், இந்த எதிரெதிர்த் தன்மையேகூட ஓர் அழகு என்று நினைப்பவர்களும் இருப்பதால் பழுப்பு வண்ண கிரானைட் கற்களும் கணிசமாக விற்பனையாகின்றன.

கறுப்பு வண்ண கிரானைட் அதன் அழகின் காரணமாகவே அதிகம் வாங்கப்படுகிறது. தூசி படிந்தால் பளிச்சென்று தெரியும் என்றாலும் துடைத்து விட்டால் அந்த இடம் படு சுத்தமாகிவிடும் என்பதும் இதன் தேவை அதிகமாக இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம்.

- ஜி.எஸ்.எஸ்.

SCROLL FOR NEXT