ஜீ.முருகன்
வீட்டு உரிமையாளர், கொத்தனார், பொறியாளர் ஆகிய மூவரே ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதில் பங்கு வகிப்பவர்கள். அதுவே கிராமியப் பகுதிகளில் பெரும்பாலும் உரிமையாளர், கொத்தனார் ஆகிய இருவர்தாம். பொறியாளருக்கு அங்கு வேலை இல்லை. வீட்டு வடிவமைப்பையும் கொத்தனாரே சேர்த்துப் பார்த்துக்கொள்வார். சிறு நகரங்களில்கூடக் கொத்தனார்தான் பொறியாளர்.
பேரூராட்சி, நகராட்சி அலுவகத்தின் அங்கீகாரம், வீட்டுக் கடனுக்கான ஆவணம் போன்ற காரணங்களுக்காக மட்டுமே பொறியாளர்களிடம் போகிறார்கள். பொறியாளர் வரைந்து கொடுக்கும் வீட்டின் வரைபடம்கூட சில இடங்களில் சம்பிரதாயத்துக்கு என்பதாகிவிடும். உரிமையாளரும் கொத்தனாரும் அதை அவர்கள் விருப்பப்படி மாற்றிவிடுவர்.
கிராமங்களிலோ சிறு நகரங்களிலோ உள்ள 90 சதவீதமான வீடுகளின் முகப்பில் ஒரு வராண்டா, இடது பக்கத்தில் படி, அதற்கான கூண்டு என்ற வடிவமைப்பை மட்டுமே பார்க்கலாம். இங்கே புதிய யோசனைகளோ அதற்கான பிரத்யேகமான தொழில்நுட்பமோ இருக்காது.
வீட்டுப் படியேறினால் வராண்டாவில் தொடங்கிக் கடைசி வரை ஒரே அளவிலான தரைதான். ஒரு வாளித் தண்ணீரை ஒரு இடத்தில் ஊற்றினால் அது வீடு முழுவதும் சென்று சேர்ந்துவிடும். முன்பெல்லாம் எல்லா வாசல்களுக்கும் கீழ்ப்படி இருக்கும். இப்போது தலை வாசலுக்கு மட்டும்தான் கீழ்ப்படி.
சமீபத்தில் ஒரு சம்பவம். நண்பர் ஒருவர் மூன்று மாடி வீடு ஒன்றின் கீழ்த்தளத்தில் குடியிருக்கிறார். அந்த வீட்டின் சாக்கடை அடைத்துக்கொண்டதால் மேல்தளங்களிலிருந்து வரும் எல்லாச் சாக்கடை நீரும் அவருடைய குளியளலறை, சிங்க் ஆகிய துளைகள் வழியாக இவர் வசிக்கும் வீட்டுக்குள் புகுந்துவிட்டது. இரண்டு படுக்கையறை, வரவேற்பறை, பூஜையறை என எல்லா இடங்களுக்கும் சாக்கடை நீர் பரவிவிட்டது. முன்யோசனை இருந்திருந்தால் குளியல் அறைத் தரையைக் குறைந்தது இரண்டு அங்குலமாவது தாழ்வாக அமைத்திருக்கலாம்.
அதேபோல் வராண்டாவின் தரை தாழ்வாகவும் வீட்டின் தரை உயரமாகவும் அமைக்கலாம். வரவேற்பறையையும் சமையலறைத் தரையையும் வெவ்வேறு உயரத்தில் அமைக்கலாம். இந்த வெவ்வேறு உயரத்திலான தள அமைப்பு கண்ணுக்குத் தெரியாத சுவர்களாக மாறி விஸ்தீரப் பரப்பைப் பிரித்துக் காண்பிக்கிறது.
முடிந்த அளவுக்குச் சுவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது செலவைக் குறைப் பதோடு வீட்டுக்குள் புழங்கும் இடத்தையும் அதிகப்படுத்துகிறது. வரவேற்பறையை ஒட்டியே சமையலறை, சாப்பாட்டு அறை ஆகியவற்றை அமைப்பது சிறந்தது.
இப்படி அமைக்க வேண்டுமானால் அடித்தளக் கட்டுமானத்தின் போதே பெல்ட் கான்கிரீட்டில் மாற்றம் செய்ய வேண்டும். இதற்குத்தான் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. பொறியாளர் தேவைப்படுகிறார்.
கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்
‘ஜீ.முருகன் கதைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு:
gmuruganjeeva@gmail.com