கனி
தீபங்கள் இல்லாமல் தீபாவளிக் கொண்டாட்டம் ஒருபோதும் முழுமையடையாது. ஒவ்வோர் ஆண்டு, தீபாவளிப் பண்டிகையின் போதும் வீட்டை எப்படி விளக்குகளால் அலங்கரிக்கலாம் என்பதே பலரின் யோசனையாக இருக்கும். சிலருக்கு அகல் விளக்குகள் ஏற்றினால்தாம் மனத்திருப்தி கிடைக்கும். சிலருக்குப் புதுமையான, நவீன விளக்கு அலங்காரம்தான் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். தீபாவளி விளக்கு அலங்காரத்துக்குச் சில ஆலோசனைகள்…
பந்து திரைச்சீலை விளக்குகள்
இந்தப் பந்து திரைச் சீலை விளக்குகள் (Wishball curtain lights) வெளிப்புற விளக்கு அலங்காரத்துக்கு ஏற்றவை. தோட்டம், பால்கனி போன்ற இடங்களில் இவற்றைத் தொங்கவிடலாம். 8.2 அடி நீளம்கொண்ட எல்இடி விளக்குகளில் வரிசை இது. ஆன்லைன் இணைய தளங்களிலும், அலங்கார விளக்குக் கடைகளிலும் கிடைக்கும். ஆன்லைன் விலை: ரூ. 1,999.
உலோக நீர்த்துளி விளக்குகள்
இந்த உலோக அலங்கார பல்புகளை (Metal Mesh Water Drop Lights) வீட்டின் எந்த மூலையில் வேண்டுமானாலும் தொங்கவிடலாம். மூலைகள் மட்டுமல்லாமல் மேசைகளை அலங்கரிக்கவும் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்தச் சரம் 11 அடி நீளத்தில் 16 எல்இடி விளக்குகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விலை: ரூ. 399.
உலோக இலை விளக்குகள்
தங்க நிற உலோக இலை விளக்குகள் வீட்டின் வரவேற்பறைச் சுவர்கள், மேசைகளை அலங்கரிக்க ஏற்றவை. பூக்கள் அலங்காரம் செய்திருக்கும் இடங்களில் இந்த இலைத் தோரண விளக்குகளைத் தொங்கவிடுவது பொருத்தமாக இருக்கும். நான்கு மீட்டர் நீளம்கொண்ட ஒரு சரத்தில் 20 எல்இடி விளக்குகள் இருக்கின்றன. ஆன்லைன் விலை: ரூ. 499.
பூ வரிசை விளக்குகள்
இந்தப் பூ வரிசை விளக்குகளைப் பூஞ்சாடிகளின் மேல் தொங்க விடுவது பொருத்தமாக இருக்கும். வீட்டின் மூலைகளை, தோட்டத்தை அலங்கரிக்கவும் பயன்படுத்தலாம். தோரணமாகச் சுவரில் தொங்கவிடுவது அழகாக இருக்கும். 85 அங்குலம் நீளம்கொண்டது. ஒரு பூச்சரத்தின் ஆன்லைன் விலை: ரூ. 299.
கிரிஸ்டல் விளக்குகள்
எளிமை, நவீனம் என இரண்டையும் விரும்புபவர்களுக்கு இந்தக் கிரிஸ்டல் விளக்குகள் ஏற்றவையாக இருக்கும். கலைப் பொருட்களை இந்த விளக்குகளை வைத்து அலங்கரிக்கலாம். இரண்டு மீட்டர் நீளத்தில் 20 எல்இடி விளக்குகளுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விலை: ரூ. 349.
தொங்கும் விளக்குகள்
வீட்டில் விளக்குகளை எங்கே வைப்பது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்தத் தொங்கும் உலோக விளக்குகளைத் (Tealight Candle Holders) தேர்வுசெய்யலாம். இந்த இரண்டு தொங்கும் விளக்குகளின் ஆன்லைன் விலை: ரூ. 417.