சொந்த வீடு

வீட்டுக் கடன் வரிச் சலுகை சரிதானா?

ரிஷி

வீடு வாங்க வங்கிகள் கடன் தருகின்றன. அந்தக் கடனை நம்பியே பலர் வீடுகளை வாங்குகின்றனர். எல்லோரும் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசு, வீட்டுக் கடனின் வட்டிக்கு வரிச் சலுகையை அறிவித்தது. ஒருவர் வீட்டை வாங்கி அதில் தானே குடியேறும்போது அந்த வீட்டுக் கடனுக்கான திரும்ப செலுத்தும் தொகையில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு வரிச் சலுகை கிடைக்கிறது.

அதாவது அவர்களது ஆண்டு வருமானத்துக்கான வரியைக் கணக்கிடும்போது வட்டியாகக் கட்டப்படும் இரண்டு லட்ச ரூபாயை அதிலிருந்து கழித்து எஞ்சிய தொகைக்கே வரியைக் கணக்கிடுகிறார்கள். இதனால் வரிச் சலுகை பெறுபவர்கள் அதிகபட்சமாக ஆண்டுக்குச் சுமார் 61,800 ரூபாய் சேமிக்க முடிகிறது என்கிறார்கள். இது நல்ல விஷயம்தானே. எல்லோருக்கும் வீடு கிடைக்க வேண்டும் அதில் வரிவிலக்கு என்பதும் சரிதானே? சரிதான் நல்ல விஷயம்தான். ஆனால் ஒரு வீடு வாங்குவதோடு அவர்கள் நிறுத்திவிட்டால் பரவாயில்லை. ஆனால் அப்படி நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

அதிக அளவில் மாதச் சம்பளம் பெறும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் போன்றவர்கள் ரியல் எஸ்டேட் துறையில் ஊக வணிகத்தில் ஈடுபடவும் இது வாய்ப்பளிக்கிறது, அது எப்படிச் சாத்தியம்? வருமான வரிச் சட்டத்தின்படி கடனில் வாங்கும் வீட்டுக்கான வட்டியில் வரி விலக்கு அளிக்கிறது. ஆனால் இந்தச் சட்டத்தில் எத்தனை வீடுகள் வாங்க வேண்டும் என்ற உச்சவரம்பு எதுவும் இல்லை. கடனில் வாங்கும் வீடுகளில் ஒன்றில் குடியேறினால்கூடப் போதும்; வரிச் சலுகை உண்டு.

இரண்டாவது வீடு போன்றவற்றில் இந்தச் சலுகையால் ஆதாயம் அதிகம். கட்டப்படும் முழு வட்டித் தொகையுமே வருமான வரி விலக்கு பெற்றுவிடும். வீட்டுக்கான வாடகையை வரிக்கு உட்பட்ட வருமானமாகக் காட்டும்வரை இந்த வரிச் சலுகையை அனுபவிக்கலாம். வீட்டின் வாடகையாகக் காட்டும் தொகை மிகவும் குறைவு என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

வீட்டுக் கடனைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் செலுத்தும் தொகையில் அதிகப் படியான தொகை வட்டியாகவே கழிக்கப்படும், அசல் மிகக் குறைந்த அளவிலேயே அடைபடும். ஆகவே இரண்டு மூன்று வீட்டுக் கடன்களைப் பெறும்போது வருமான வரியில் பெருமளவிலான தொகை கழிக்கப்பட்டுவிடும்.

வருமான வரிச் சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையை அதிக அளவு சம்பளம் பெறுபவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்படிப் பயன்படுத்துபவர்கள் வருமான வரிக்குட்பட்ட தொகையைக் குறைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள். எனவே வீட்டு விலையைப் பற்றிய கவலை அவர்களுக்கு அதிகமாக இருக்காது. வீடுகளின் விலை குறைந்த நிலையிலும் கூட அவர்கள் வாங்கிய வீட்டை விற்க மாட்டார்கள்.

ஆகவே இந்த வரிச் சலுகையால் சொந்தமாக ஒருவருக்கு வீடு கிடைக்கும் என்பது நல்ல விஷயம். ஆனால் வீட்டை வாங்குவதை ஒரு முதலீடாகவும் பயன்படுத்துபவர்களுக்கு வரிச் சலுகை என்பது ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் இத்தகைய முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளிப்பதால் அரசின் வருமானமும் பாதிக்கப்படும், ரியல் எஸ்டேட் துறையிலும் ஊக வணிகம் அதிகரிக்கும். இது ஆரோக்கியமானதல்ல என்று எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

வாசகர்கள் கவனத்திற்கு...

இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். வீட்டைப் பராமரிப்பது, தோட்டம் அமைப்பது ஆகியவை தொடர்பான உங்கள் அனுபவங்களை எங்களுக்கு எழுதுங்கள்.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

கடிதத் தொடர்புக்கு:

சொந்த வீடு, தி இந்து,கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை- 600 002.

SCROLL FOR NEXT