சொந்த வீடு

மங்காப் புகழ்கொண்ட மரக் கதவுகள்

செய்திப்பிரிவு

எல்.ரேணுகா தேவி

பாரம்பரிய பாணியில் வீடு கட்ட நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது மரப் பொருட்களையே. கதவு, ஜன்னல், மேஜை, இருக்கை, ஊஞ்சல் என மரத்தால் செய்யப்பட்ட பொருட்களே பாரம்பரிய வீட்டுக்கான அழகை வெளிப்படுத்தும். சந்தையில் புதிதாக வாங்கும் மரச் சாமான்களின் விலை என்னவோ அதிகம்தான். அதனால்தான் சென்னை பெரம்பூரில் உள்ள ஜமாலியாவில் பழைய மரக் கதவுகள், ஜன்னல், நிலைப்படி, இருக்கை, மேஜை எனப் பல பழைய பொருட்களைப் புதியதுபோல் மறுவேலை செய்து விற்பனை செய்கிறார்கள்.

கதவுநிலை

ஜமாலியா சாலையின் தொடக்கம் முதல் முடிவு வரை இருபக்கங்களிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட பழைய மரச் சாமான்களை விற்பனை செய்யும் ஏராளமான கடைகள் உள்ளன. “தமிழ்நாட்டில் எங்கேயாவது ஒரு பெரிய கட்டிடத்தை உடைக்கப்போகிறார்கள் என்றால் ஜமாலியாவில் உள்ள மர வியாபாரிகளுக்குத்தான் முதலில் தகவல் கொடுப்பார்கள். நாங்கள் அந்த இடத்துக்குச் சென்று கட்டிடத்தில் உள்ள மரப் பொருட்களின் தரத்துக்கு ஏற்றவகையில் விலைகொடுத்து வாங்குவோம்.

சென்னை மத்தியச் சிறைச்சாலையை உடைத்தபோது நாங்கள்தான் சென்றோம். அங்கு ஒன்றரைடன் எடையில் நீளமான மரத் துண்டு கிடைத்தது. என்னுடைய வாழ்க்கையில் அவ்வளவு கனமான மரத்தை நான் பார்த்தது கிடையாது. இதுபோன்ற பிரத்யேகமாகப் பழைய மரப் பொருட்கள் ஜமாலியாவுக்குத்தான் வரும். அதேபோல் ஒரு பெரிய கட்டிடத்தை உடைத்தால் என்றால் அங்கிருந்து மட்டும் 500 மர ஜன்னல்கள் கிடைக்கும். இந்த மரப் பொருட்கள் பொலிவைத்தான் இழந்திருக்குமே தவிர, அவற்றின் தரத்தில் எந்தப் பாதிப்பும் இருக்காது.

அவற்றில் பாதிப்பு ஏதாவது இருந்தால் மறுவேலை செய்து விற்பனை செய்வோம். ஒரு பழைய மரக் கதவைப் புதிய கதவுபோல் செய்துகொடுப்போம்” என்கிறார் இத்தொழிலில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ள முகமது.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரத்துக்கு ஏற்ப ரூ.3,000 முதல் ரூ.30,000 வரை விலை வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பொருட்கள் பெரும்பாலும் புதுச்சேரி, காரைக்குடி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்குதான் அதிக அளவு அனுப்பப்படுகிறது. வேலைப்பாடு உள்ள பழைய காலத்து ஜன்னல்கள், கதவுகள், நிலைகள் ஆகியவற்றுக்கு இப்போது கிராக்கி கூடியிருக்கிறது. மேலும், கட்டுமானப் பொருட்கள் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வும் இப்போது கூடியிருக்கிறது. இந்தக் காரணங்களால் இந்தத் தொழிலுக்கு இப்போது மவுசு கூடியுள்ளது.

நம்பிக்கையுடன் வாங்கலாம்

இங்கு இருப்பதிலேயே பழமையான கடை என்றால் நாகூர் மீரான் என்பவரின் ஷேக் சையது அலி பாத்திமா விற்பனையகம்தான். இந்தக் கடை 1973-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட முதல் நான்கு கடைகளில் ஒன்று. “என்னுடைய பன்னிரண்டு வயதிலிருந்தே இந்தத் தொழிலில் இருக்கிறேன்.

இப்போது எனக்கு வயது 64. அந்தக் காலத்தில் வெறும் நான்கு கடைகளே இருந்தன. இப்போது ஏராளமான கடைகள் உள்ளன. பழைய மரப் பொருட்களை நாங்கள் விற்பனை செய்தாலும் அதனுடைய தரம் வைரம் போன்றது. ஆனால் பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி போன்ற பொருட்களால் செய்யப்பட்ட கதவுகள், ஜன்னல்கள் வந்த பிறகு மரச் சாமான்களின் விற்பனை குறைந்துள்ளதை மறுக்க முடியாது.

ஆனால், இப்போதும் பாரம்பரிய முறையில் வீடு கட்ட நினைப்பவர்கள் மரப் பொருட்களையே விரும்பி வாங்குவர்கள். எங்களிடம் தேக்கு, பர்மா தேக்கு, பிள்ளை மருதம், கோங்கு எனப் பலவகை மரப் பொருட்கள் உள்ளன. வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பொருட்களை வாங்கலாம். ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து மரப் பொருட்களையும் இங்குள்ள வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள்” என்கிறார் அவர்.

பல தரப்பட்ட மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள். அதனால் மறுவேலைச் செய்யப்படும் கதவுகள், ஜன்னல்கள் ஆகியவை இயந்திரங்கள் மூலமாகச் செய்யப்படாமல் தச்சுத் தொழில் வல்லுநர்களைக் கொண்டு நுணுக்கமான முறையில் மறுவேலை செய்யப்படுகிறது. இங்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் வடிவமைக்கப்பட்ட கதவுகளும் புதிய வடிவமைப்புகளைக் கொண்ட கதவுகளும் தரத்துக்கு ஏற்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றன.

மரத்தால் செய்யப்பட்ட ஒரு கதவை வாங்குவதற்குச் செலவிடும் தொகையில் ஞெகிழி அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட கதவு, ஜன்னல், இருக்கை எனப் பல பொருட்களை வாங்கிவிட முடியும் எனப் பலர் சொல்லலாம். ஆனால் நாம் பார்த்துப் பார்த்துக் கட்டும் வீட்டுக்கான தனித்த அழகை அவை கொடுக்காது. பழைய பொருட்களாக இருந்தாலும் வீட்டுக்கான பாரம்பரியத் தோற்றத்தை மரப் பொருட்களாலேயே வெளிப்படுத்த முடியும். குறைந்த செலவிலேயே இந்தப் பழைய கதவுகளை வாங்குவதன் மூலம் உங்கள் வீட்டுக்கு அழகு சேர்க்கலாம்.

SCROLL FOR NEXT