சொந்த வீடு

என் வீடு என் அனுபவம்: உறவுகளால் உருவான இல்லம்

செய்திப்பிரிவு

பி.லலிதா

நான் பிறந்த ஊர் இப்போதைய நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர். என் பிறந்த வீட்டின் அமைப்பு, பெரிய கூடம், நான்கு பக்கமும் தாழ்வாரம், நடுவில் முற்றம், கூடத்தில் ஒரு அறை, வாசல் பக்கத்தில் ( ரேழியில்) ஓர் அறை, வாசலில் அகலமான வராண்டா (ஆளோடி என்போம்) எனப் பெரிய அமைந்திருந்தது. ஓட்டு வீடு என்றாலும் எல்லாவித வசதிகளும் இருந்தன. என் திருமணம் நடந்தது எங்கள் வீட்டில்தான். என் சகோதரிகள் திருமணம், உறவினர்கள், தெரிந்தவர்கள் வீட்டுத் திருமணங்களும் எங்கள் வீட்டில் நடந்திருக்கின்றன.

என் புகுந்த வீடு கும்பகோணம். அதுவும் மிகப் பெரியது. மூன்று கட்டுக்கள் கொண்ட மாடி வீடு. இரண்டு முற்றங்கள் கொண்டது. வீட்டுக்குள்ளேயே மூன்று குடும்பத்தினர் குடியிருந்தார்கள். என் கணவர் தமிழ்நாடு அரசுப் பணியில் இருந்ததால் அடிக்கடி பணிமாற்றம் வரும். அதனால் வெவ்வேறு ஊர்களில் பலதரப்பட்ட வாடகை வீடுகளில் குடியிருக்க நேர்ந்தது.

பிறந்து, வளர்ந்தது முதல் திருமணமாகி சில ஆண்டுகள் வரையிலும் சொந்த வீட்டில் தாராளமாகப் புழங்கிப் பழகியவள் நான். இதற்கிடையில் என் புகுந்த வீடு விற்கப்பட்டுப் பாகம் பிரிக்கப்பட்டது. அப்போது முதல், நமக்கென்று ஒரு வீடு வேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் தோன்றிக்கொண்டே இருந்தது. என் கணவரிடமும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பேன்.

என் மாமனார், என் கணவரிடம், “சொந்த வீடு வாங்குவதாக இருந்தால். திருச்சிதான் பெஸ்ட்" என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். வருடம் செல்லச் செல்ல குழந்தைகள் வளர்ந்து, குமரிகளாகிக் கொண்டு வந்தனர். “ஒண்டுக் குடித்தனத்தில் அவர்களுக்குத் திருமண ஏற்பாடு செய்வது சிரமம். அதனால் உடனே வீடு வாங்க வேண்டும், அல்லது கட்ட வேண்டும்” எனக் கணவரிடம் வலியுறுத்தத் தொடங்கினேன். என் கணவரோ “வெறுங்கையை வைத்துக்கொண்டு முழம் போட முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

நியாயமான கேள்விதான். அவரையும் குறை சொல்வதற்கில்லை. வாங்கும் சம்பளத்தில் சிக்கனமாகக் குடும்பம் நடத்தி, குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டு சிறுகச் சிறுக சீட்டு கட்டிக் கொஞ்சம் நகைகள் வாங்கி வைத்திருந்தோம். தவிர பணிமாறுதல் காரணமாகத் திருச்சியில் கொஞ்ச நாட்கள் இருந்த வேளையில் ஒரு வீட்டு மனை வாங்கிப் போட்டிருந்தோம். கும்பகோணம் வீட்டை விற்றுக் கிடைத்த பங்கில் கொஞ்சம் சேர்த்து, வாங்கிய இடம் அது.

இடத்தை வாங்கிய பிறகு அரசு ஊழியர்கள் வீடு கட்டக் கொடுக்கப்படும் கடனுதவிக்கு விண்ணப்பித்தார் என் கணவர். விண்ணப்பம் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே இருந்தது. ஐந்தாறு வருடங்கள் சென்று விட்டன. மூத்த மகள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் நேரம் வந்துவிட, என் சொந்த வீடு கோரிக்கையும் பலமானது. கடன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கடிதம் வந்தது.

மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கற்பனையிலேயே என் கனவு இல்லத்தை வடிவமைக்கத் தொடங்கினேன். ஆனால், மீதமிருக்கும் பணிச் சேவை ஆண்டுகள் கணக்கிடப்பட்டு மிகவும் குறைவான தொகைதான் ஒதுக்கப்பட்டது. அதனால் வீடு கட்டச் சேமிப்பில் உள்ள பணம், நகைகளை அடகு வைத்தால்கூடப் பற்றாக்குறை ஏற்படும்போல் இருந்தது.

எனவே, என் கணவர் வீடு கட்டும் எண்ணத்தைக் கைவிட முடிவெடுத்து, அலுவலத்தில் ‘வீட்டுக் கடன் வேண்டாம்' என எழுதிக் கொடுக்கப் போவதாகச் சொன்னதும், ‘காற்றுப் போன பலூன் போல ஆயிற்று' என் முகம். அம்புலி மாமா கதையில் வருவதுபோல, ‘தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தனாக’ என் கணவரிடம் “சந்தர்ப்பம் ஒரு முறைதான் கதவை தட்டும். அப்போது பயன்படுத்தத் தவறினால் பின்னர் வருத்தப்பட்டுப் பிரயோசனம் இல்லை” என்று எடுத்துக் கூறினேன். ஒருவாறு ஒப்புக் கொண்டார். ஆனால், பெண்ணுக்குத் திருமணம் செய்யத் தேவைப்படும் என்பதால் வீட்டில் உள்ள நகைகளை விற்கவோ அடகு வைக்கவோ மறுத்துவிட்டார்.

அப்போதுதான் எங்கள் இருவருக்கும் ஒரு யோசனை வந்தது. வெளியில் கடன் வாங்கினால் வட்டி அதிகம் ஆகும், அதனால் நம் உடன் பிறந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று நினைத்தோம். சும்மா சொல்லக் கூடாது! பணம் தேவை என்று நாங்கள் கேட்டதும் எந்தவித நிபந்தனையும் இன்றி உடனே முன்வந்து உதவினர் உறவினர்கள். என் கணவரின் மாமா, சகோதரியின் கணவர், என் தங்கையின் கணவர், அக்கா கணவர் எல்லோருடைய உதவியாலும் என் சொந்த வீட்டுக் கனவு நனவாயிற்று. என் மாமனாரின் விருப்பப்படியே திருச்சியில் சொந்த வீடு அமைந்தது. என் கணவருக்கும் திருப்தி. எங்கள் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் எனபதை நாங்கள் இருவரும் கலந்து பேசி வடித்தோம்.

எங்கள் நல்ல நேரம் அனுபவம் உள்ள ஒப்பந்ததாரர் கிடைத்தார். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீட்டைக் கட்டிக்கொடுத்தார். புது வீடு கட்டி, குடி வந்து ஓராண்டு முடிவதற்குள் என் மூத்த மகளின் திருமணம் நிச்சமாயிற்று. என் மகளின் திருமணமும் எங்கள் இருவருடைய சகோதர, சகோதரிகளின் பேருதவியால் நல்லபடியாக நடந்தது. என்னோடு ஒன்றிவிட்ட இந்த வீட்டைக் கட்டி, இப்போது இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த வீட்டுக்குள் இருக்கும் இந்த வேளையில், சரியான நேரத்தில் உதவி்ய எங்கள் உறவினர்களை அன்புடன் நினைத்துக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT