சொந்த வீடு

வீடுகளுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாகப் பூட்டிக்கிடக்கும் வீடுகள், காலி மனைகளில் மாநகராட்சிக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. நோய் உண்டாக்கும் சூழலைத் தடுக்கும் பொருட்டு இந்த ஆய்வு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பூட்டிகிடக்கும் வீடுகள், காலி மனைகளைப் பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு வளரும் இடங்களைக் கண்டறிந்து இதுவரை ரூ.38.96 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் 3,400 வீடுகள்

குடிசை மாற்று வாரியம் மூலம் ஈரோடு அருகே நல்லகவுண்டன்பாளையத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3,400 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வீடு அற்றவர்களுக்கு வீட்டு வசதி செய்து தரும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், மாநில அரசின் வீடு கட்டும் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் மூலம் இது செயல்ப்படுத்தப்பட்டுவருகிறது.

சிலிண்டர் வெடித்து விபத்து

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகமதாபாதில் சிலிண்டர் வெடித்து இரண்டு மாடிக் கட்டிடம் தகர்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அமேசானின் அலுவலம்

அமேசானின் பிரம்மாண்ட அலுவலகம் ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ளது. ஊழியர்கள் 15000 பேர் வேலைசெய்யக் கூடிய அளவில் 9.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஈபிள் டவர் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியதைவிட 2.5 மடங்கு இரும்பு இந்தக் கட்டிடத்தைக் கட்டப் பயன்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே அமேசான் உருவாக்கியிருக்கும் சொந்த அலுவலகம் இதுதான்.

பள்ளிக் கட்டிடம் இடிந்தது

கென்யத் தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பள்ளிக் குழந்தைகள் 64 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கு முன்பு நைரோபியில் அனுமதியின்றிக் கட்டப்பட்டு, இடியும் நிலையிலிருந்த 40,000 கட்டிடங்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

வீடுகள் சேதம்

ஹகிபிஸ் புயல் தாக்குதலால் ஜப்பானில் கனமழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனாலும், ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT