ஏழுமலை
நில அளவைப் பிரிவு, தன் பணியைப் பத்திரப்பதிவுத் துறையின் கீழ் செய்யும்பட்சத்தில் நிலத்தை வாங்கும்போது விற்கும்போது நிலத்தை அளந்து சரிபார்த்துப் பதிவுசெய்யச் சற்றுக் கால தாமதம் ஏற்படும். ஆனால் தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் எல்லை அளவுகள் காட்டுவது (F-Line) உட்பிரிவு செய்வது (RTR), தனிப்பட்டா, சிட்டா போன்ற ஆவண ஏற்பாடுகளும் உழைப்பும் தேவைப்படாது.
நிலத்தை அதன் உரிமையாளர் பார்த்துக் கொண்டால் போதுமானது. பட்டா மாறுதல், தனிப்பட்டா, சிட்டா போன்ற வருவாய்த் துறை பணிகளை நிறுத்திவிடலாம். பட்டா என்பது அரசு, அரசு சார்ந்த புறம்போக்கு நிலங்களின் மீது ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமான ஆவணமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சொத்துப் பரிவர்த்தனை நடைபெறும் பதிவுத் துறையின் ஒரே ஆவணத்தோடு மக்களின் சிரமங்கள் தீர்ந்துவிட வேண்டும். பட்டா மாறுதல் என்ற பெயரில் வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்தும், உட்பிரிவு செய்து தனிப்பட்டா என்கிற பெயரில் நில அளவைக்கு விண்ணப்பித்தும் ஆகும் காலவிரயத்தையும் பொருள் இழப்பையும் இதன் மூலம் தவிர்க்கலாம்.
தனியார் நிலங்களுக்கு நான்கு எல்லைகளைக் காட்டும் நில அளவை வரைபடத்துடன் கூடிய பதிவுசெய்யப்பட்ட பத்திர ஆவணம் ஒன்றே போதுமானது. வீடு இல்லாத ஏழைகளுக்கு நில உரிமைச்சான்றாக வருவாய்த் துறை பட்டா ஆவணத்தை வழங்கலாம். இது மட்டுமே நிலம் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை பணியாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் நடைபெற்ற பட்டா பாஸ்புத்தகத் திட்டப் பதிவுகளில் காணப்பட்ட குறைகள் காரணமாக அந்தத் திட்டத்தை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. வருவாய்த் துறை வழங்கும் பட்டா பாஸ்புத்தகம் வழங்குவதை நிறுத்திவிட்டு அதற்குப் பதிலாகக் கணினியில் குறைகள் உள்ள பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களின் நகல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இது முரண் நிகழ்வு.
கட்டுரையாளர்,
ஓய்வுபெற்ற நில அளவையர்.