சொந்த வீடு

ஸ்மார்ட் சிட்டி குழப்பங்கள் என்னென்ன?

கே.கே.மகேஷ்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கடந்த மாத இறுதியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் நகரங்களைத் தேர்வு செய்வதற்காக மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது.

பல்வேறு வசதிகள், மக்கள் தொகை அடிப்படையில் நகரங்களுக்கு இடையே போட்டி நடைபெறும். மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் தேர்வான நகரங்கள், அகில இந்திய அளவில் தேர்வான நகரங்களுடன் போட்டியிட வேண்டும். இறுதியில் தேர்வு பெறும் நகரங்களுக்கு ஆண்டுக்கு 100 கோடி வீதம் 5 ஆண்டுகள் வழங்கப்படும்.

தேர்வில் உள்ள சிக்கல்

சாலைகள், மின்சாரம், குடிநீர், கழிவுநீர்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவைக்கேற்ற பொதுப் போக்குவரத்து வசதி, நவீன பார்க்கிங் வசதிகள், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, பாதுகாப்பான இணையம், கல்வி, வீட்டு வசதி, மின் நிர்வாகம் போன்ற வசதிகளை அந்த நகரங்கள் படிப்படியாகப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து விளக்க பல்வேறு மாநகராட்சி அதிகாரிகள் டெல்லி அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பங்கேற்ற மதுரை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் இத்திட்டம் மதுரைக்கு எந்தெந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டபோது,

“ஸ்மார்ட் சிட்டி திட்டம் 100 மாநகராட்சிகளில் நிறைவேற்றப்பட உள்ளது என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான மாநகராட்சிகளைத் திட்டத்திற்குத் தேர்வு செய்வதற்கென்று மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழு மின்னணு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், சம்பந்தப்பட்ட மாநகராட்சியில் உள்ளனவா? என்பதைப் பார்த்துவிட்டுத் தான் தேர்வு செய்யும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாநகராட்சிகளுக்கு இது சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும்.

தமிழக மாநகராட்சிகளின் நிதி நெருக்கடி

இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 100 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கூட, அந்த நிதியை முழுமையாக மத்திய அரசு வழங்காது என்று தெரிவித்தனர். அதாவது சம்பந்தப்பட்ட மாநகரின் மக்கள் தொகை 10 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் 50 சதவீத நிதியை மத்திய அரசு தரும். 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை இருந்தால், 33 சதவீத நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். மீதி நிதியை மாநகராட்சி நிர்வாகமோ, மாநில அரசோதான் தர வேண்டும். இல்லையென்றால் தனியார் கார்ட்பரேட் நிறுவனங்களிடம் நிதி பெறலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான மாநகராட்சிகள் நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. குடிநீர் வாரியத்திற்கும், பொது நூலகத் துறைக்குமே பல நூறு கோடி பாக்கி வைத்துள்ள மாநகராட்சிகள், ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க வழியில்லாத மாநகராட்சிகள் எப்படி இவ்வளவு பெரிய தொகையை வழங்க முடியும் என்பதுதான் கேள்வி.

வளர்ச்சிக்கு உதவும் திட்டம்

அடுத்த விஷயம் என்னதான் மாநகராட்சி நிர்வாகம் நிதியை ஒதுக்கினாலும்கூட, 100 கோடியைச் செலவிடும் அதிகாரம் மத்திய அரசால் நியமிக்கப்படும் கண்காணிப்புக் குழுவிற்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் ஊறிப்போன விஷயமான சதவீதக் கணக்கு இங்கே அடிபட்டுப் போய்விடும் என்பதால், உள்ளாட்சி பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டுவார்களா என்பது சந்தேகமே” என்றார்.

கிரடாய் அமைப்பின் மதுரைச் செயலாளர் இளங்கோவன் கூறியபோது, “தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரான மதுரையில் இப்போதும்கூட அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. ஒரு நாள் மழை பெய்தால்கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு வடிகால் வசதி மோசமாக இருக்கிறது. அடிப்படை வசதிகளுக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முக்கியத்துவம் தரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது, இதுபோன்ற நிலையை மாற்ற உதவும்.

மதுரைக்குப் பெரிய நிறுவனங்கள் வரத் தயங்குவதற்குக் காரணம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட விஷயங்களில் இன்னும் செல்ல வேண்டிய பாதை தூரம் இருப்பது ஒரு காரணம். அந்தக் குறையையும் இந்தத் திட்டம் களையும் என்று எதிர்பார்க்கலாம். மதுரை விமான நிலையம் சர்வதேசத் தரத்தைப் பெற்றுள்ள சூழலில், ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்த நகரின் முகத்தை மாற்றியமைக்கும். இது திருச்சி உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் பொருந்தும்” என்றார்.

ரியல் எஸ்டேட் அதிபரான மீனாட்சி சுந்தரம் கூறியபோது, “ஸ்மார்ட் சிட்டி திட்டம் எங்கே, எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளது என்று கடந்த இரு மாதங்களாக ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் பிரதமரின் அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஜூன் 25-ம் தேதிய அவரது அறிவிப்பு கொஞ்சம் ஏமாற்றத்தைத் தந்தது. இன்னமும் திட்டம் குறித்து முழுமையான புரிதல் ஏற்படவில்லை. திட்டம் முழுமையான வடிவைப் பெற இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால், அடுத்த அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம்” என்றார்.

ஆனால் இவ்வளவு சவால்களையும் மீறி இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் நகர வளர்ச்சிக்கும், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பது உண்மை.

SCROLL FOR NEXT