சொந்த வீடு

பத்திரப்பதிவுச் சீர்திருத்தம் 02: தனிப்பட்டா வந்த கதை

செய்திப்பிரிவு

ஏழுமலை

1912-ம் ஆண்டு நில அளவைக்கான ஆவணமாக, சொத்துரிமைக்கான அனுபவ வழிச் சான்றாக நில அளவைப் பட்டாக்கள் ஏற்படுத்தப்பட்டன. அடுத்ததாகப் பதிவுத்துறையிலும் தொடர்ந்து நில அளவை ஆவணங்களின் பதிவுகளைக் கொண்டே பத்திரங்கள் தயாரிக்கப்பட்டன. பதிவுசெய்யப்படும் பத்திரங்களின் பட்டா மாறுதலுக்கான விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி வருவாய்த் துறை அலுவலகத்துக்குப் பத்திரப்பதிவு விவரங்கள் வழங்கப்பட்டன.

நில அளவை பட்டா வழங்கிய அனைத்துப் பதிவேடுகளிலும் பட்டா மாறுதல்கள் வருவாய்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. நில அளவை செய்து வழங்கப்பட்ட வருவாய்த் துறைப் பட்டாவுடன் பத்திரப்பதிவு செய்தவர்களின் பெயர் கூட்டாகப் பதிவுசெய்து கூட்டுப்பட்டாவாக வழங்கப்பட்டன. பட்டாதாரர் தனியாக விண்ணப்பித்து தனிப்பட்டா கோரும்போது நில அளவைத் துறையால் உட்பிரிவுசெய்யப்பட்டு வரைபடங்கள் வட்டாசியருக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின் வருவாய்த் துறையால் தனிப்பட்டா வழங்கப்படுகின்றன.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலத்தின் மீதான அடமானக் கடன், மின் இணைப்பு, வீட்டுக் கடன் ஆகிவற்றுக்கு விண்ணப்பதாரின் பதிவுத்துறை பத்திரமே ஆவணமாகத் தாக்கல் செய்யப்படு ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. நில அளவை, வருவாய்த் துறை ஆவணங்களில் கூட்டுப் பட்டாவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட வங்கி நிலத்தை நேரில் பார்வையிட்டுக் கடன் வழங்கிவந்தது.

ஆனால், சமீப காலங்களில் இந்தக் கடன் வழங்கும் வங்கித் துறை, கூட்டுப்பட்டாவை உட்பிரிவு செய்து தனிப்பட்டா என்கிற ஆவணம் கொடுத்தால்தான் கடன் வழங்க முடியும் என்கிறது. இதனால் மக்கள் நில அளவைத் துறைக்கும் வருவாய்த் துறைக்கும் அலைய வேண்டியுள்ளது. இதனால் வங்கிக் கடன் விண்ணப்பிக்கும் முறையும் கடினமாகியுள்ளது.

உட்பிரிவு செய்வதும் தனிப்பட்டா வழங்குவதும் ஒருநாளில் முடிகிற வேலை அல்ல. ஒரு நிலத்தை உட்பிரிவு செய்து தனிப்பட்டா வழங்குவதற்காக அளந்து வரைபடம் தயாரித்து, பரப்பளவு கணக்கீடுசெய்து எல்லாத் துறை அலுவலர்களும் ஒப்புதல் செய்ய வேண்டும். இந்த நடைமுறையில் பல சிரமங்கள் உள்ளன. 1908-ம் ஆண்டு தொடங்கி 1910, 1923, 1971 ஆண்டுகளில் பட்டா வழங்கப்பட்ட நிலங்கள் 1978-ம் ஆண்டு வரை முன்னர் குறிப்பிட்டவாறு பராமரிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் ஒரு பட்டாவில் சில பட்டாதாரர் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், பதிவுத் துறை உருவான பிறகு விற்பது, வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளால் பெருகியதால் ஒரு நிலத்துக்குப் பல பட்டாதாரர்கள் வருவாய்த் துறைப் பதிவுகளில் பதிவுசெய்யப்பட்டு, கூட்டுப் பட்டா நிலைக்கு மாற்றப்பட்டது. அந்த நாட்களில் பத்திரப்பதிவுகள் செய்வதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த எவரும், முத்திரைத்தாளில் கைப்பட எழுதி கையொப்பமிட்டு பத்திரப் பதிவுசெய்யும் நடைமுறை இருந்தது. 1970-ல் அரசு பதிவுபெற்ற பத்திர எழுத்தர் மட்டுமே பத்திரம் தயாரித்து பதிவுத் துறைக்குத் தாக்கல் செய்யும் முறை அறிமுகமானது.

கட்டுரையாளர்,
ஓய்வுபெற்ற நில அளவையர்.

SCROLL FOR NEXT