சொந்த வீடு

மர ஆணையம் உருவாக்க வேண்டும்

துர்கானந்த் பல்சாவர்

எல்லோரும் சூரிய ஒளி, காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறோம். ஆனால் பேசிக்கொண்டிருப்பது மட்டும் போதாது. இந்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது எவ்வளவு சாத்தியம், இவற்றைப் பயன்படுத்தி ஒரு மாற்று வாழ்வை எப்படி உருவாக்குவது? இதற்கு ஒரு தொலைநோக்குப் பார்வையும் விரிவான திட்டமும் வேண்டும். அதற்கான ஐந்து யோசனைகள்:

1. காற்று மாசுபடுவதைக் குறைத்தல்

போக்குவரத்தால் ஏற்படும் மாசால் சென்னைக் காற்று திணறிக்கொண்டிருக்கிறது. வாகனத்தால் உண்டாகும் இந்தக் காற்று மாசுக்கு எதிராகத் தொடர் பிரச்சாரம் செய்வது அவசியம். அதன் மூலம் காற்று மாசுபடுவதைத் தவிர்க்க முடியும். ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்துத் திட்டம் ஒன்று சாத்தியமானால் தனிப்பட்ட கார்களின் பயன்பாடு வெகுவாகக் குறையும்.

ஏனெனில் கார்கள் வெளியேற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடு மிக அதிகம். ஒரு கிலோ மீட்டருக்கு 0.13 கிலோ கார்பன்-டை-ஆக்ஸைடை ஒரு வாகனம் உண்டாக்குகிறது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து வாகனங்களால் காற்று மாசுபடுவது குறையும்.

2. கார்பன் வெளியீட்டைக் குறைத்தல்

கான்கிரீட் கட்டிடங்கள் அதிகமாக அதிகமாக மரங்கள் வெட்டப்படுவதும் அதிகமாகும். அதனால் நிலத்தின் வெப்பம் அதிகமாகும். நாம் குளிர்சாதன வசதியை நாடுவோம். அதனால் அதிக அளவு கார்பன் வெளியேறும். வீடுகள் நெருக்கடியாக ஒரே இடத்தில் கட்டப்படுவதுத் தவிர்க்கப்பட வேண்டியது.

3. சுற்றிலும் மரங்களை நட வேண்டும்

நகர வெப்பத்தையும் மாசுபாட்டையும் குறைக்க மரங்கள் அவசியம். வாழிடங்களைச் சுற்றிலும் மரங்களை வளர்த்தால் அவை காற்றில் உள்ள கார்பன்- டை-ஆக்ஸைடில் 15-லிருந்து 20 சதவீதத்தை உறிஞ்சுகின்றன. இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் இரு மடங்கு மரங்களை சென்னையில் உண்டாக்க வேண்டும்.

இதற்காக சென்னை மாநகராட்சி ‘மர ஆணையம்’ ஒன்றை அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தின் மூலம் மரம் வெட்டுதலைத் தடுக்க வேண்டும். கல்லூரி, பள்ளி மாணவர்கள் மூலமாக மரம் நடுதலையும் செயல்படுத்த வேண்டும். மரங்கள் குறைந்து வருவதால் காற்று மாசுபடுவது அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் குறையும். காலநிலையில் மாற்றம் வரும். வெப்பம் அதிகரிப்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகமாகும். அதனால் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.

4. நீர் மறுசுழற்சி அவசியம்

கட்டிடங்களின் அசுர வளர்ச்சியால் ஏரிகள், நீர்த் தேக்கங்கள் போன்ற நீர் ஆதாரங்கள் காணாமல் போய் அவை இருந்த இடங்களில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டுவிட்டன. இதனால் நீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்தச் சூழலில்தான் நீர் மறுசுழற்சி அவசியமாகிறது. பெரிய அளவிலான வீட்டுக் குடியிருப்புத் திட்டங்களில் நீர் மறுசுழற்சித் திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட பிரத்யேக நீரைப் பயன்படுத்த வேண்டும்.

5. நீடித்த திட்டம் உருவாக்க வேண்டும்

நகரச் சூழலைப் பல காரணிகள் இம்மாதிரியான மாற்றங்களை விளைவிக்கும். ஆற்றல் மிக்க ஒரு திட்டம் தேவை. அதன் மூலம் மாற்றத்திற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். உருவாக்கப்படும் திட்டம் சூழலியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்) சுருக்கமாகத் தமிழில்: ஜெய்

SCROLL FOR NEXT