சொந்த வீடு

ஒளிரும் புதுமை கான்கிரீட்

செய்திப்பிரிவு

- விபின்

கரியமில வாயு வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு நான்காம் இடம். சிமெண்ட் தயாரிப்பு ஆலைகள்தாம் உலக அளவில் கரியமில வெளிவிடுவதில் இரண்டாம் இடம். இங்கு நடக்கும் சிமெண்ட் உற்பத்திதான் இந்தியாவின் கரியமில வாயு வெளிடுவதற்கான காரணம் எனலாம்.

கட்டுமானப் பணிக்காகப் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பி தயாரிப்பிலும் கரியமில வாயு உமிழப்படுகிறது. இது எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளைவிக்கின்றன. இந்தப் பின்னணியில் இதற்காக மாற்று கண்டுபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதற்கான முயற்சியில் கான்பூரைச் சேர்ந்த பொறியாள மாணவர் ராமன்ஷ் இறங்கியிருக்கிறார். அதன் விளைவுதான் ஒளிபுகும் கான்கிரீட் (transparent concrete).

கான்பூரில் சுற்றுச்சுழல் அறிவியலில் முதுகலை படிக்கும் அவர், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருளை உருவாக்கும் ஆராய்ச்சியில் இந்த ஒளிபுகும் கான்கிரீட்டைக் கண்டுபிடித்திருக்கிறார். ஒளிபுகும் கான்கிரீட் குறித்த ஆராய்ச்சிகள் கட்டுமானத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்துவருகின்றனா. ஆனால், போர்சிலின் சிமெண்டைப் பயன்படுத்தித்தான் அந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுத்தமான ஆற்று மணலையும் சிமெண்டையும் குழைத்து வழக்கமான கான்கிரீட்டில் ஜல்லிக்குப் பதிலாகக் கண்ணாடி இழைப் பொருட்களை இட்டு ஒளிபுகும் கான்கிரீட் தயாரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. “ஞெகிழிக் கண்ணாடி இழை, இரும்பு ஆலைக் கழிவு ஆகியவற்றுடன் சிமெண்டையும் மணலையும் சேர்த்தேன். இதனால் சிமெண்ட் பயன்பாடு வெகுவாகக் குறையும்” என்கிறார் ராமன்ஷ்.

பொதுவாக, மாற்று கான்கிரீட் என்பது ஜல்லிக்கு மாற்றுப் பொருள் கண்டுபிடிப்பது எனலாம். பேப்பர், ஞெகிழித் துகள் போன்றவற்றை ஜல்லிக்கு மாற்றாகப் பயன்படுத்தி கான்கிரீட்டில் சிமெண்ட்டின் பயன்பாட்டைக் குறைப்பார்கள். அதேபாணியில் இதில் ஜல்லிக்கு மாற்றாக ஞெகிழிக் கண்ணாடி இழையைப் பயன்படுத்தியிருக்கிறார் ராமன்ஷ்.

இந்த ஞெகிழிக் கண்ணாடி இழையின் பயன்பாட்டைப் பொறுத்து இந்த கான்கிரீட்டின் தரத்தைத் தீர்மானிக்க முடியும். அதிக அளவில் கண்ணாடி இழை சேர்க்கும்போது கான்கிரீட்டின் வலு குறைய வாய்ப்புள்ளது. அதனால் சரியான விகிதத்தில் இதைச் சேர்க்க வேண்டும். இந்த கான்கிரீட் கலவை சாதாரணமான கான்கிரீட் அளவுக்கான வலுவுள்ளதாகவே இருக்கும் என்கிறார் ராமன்ஷ்.

இந்த கான்கிரீட் கலவையில் உள்ள கண்ணாடி இழையின் மூலம் ஒளிபுகும். இதனால் இந்தக் கலவையைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டிடத்துக்கு உள்ளே வெளிச்சம் வரும். இதனால் மின் பயன்பாடு வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது. பசுமைக் கட்டுமானத் துறை இந்தக் கண்டுபிடிப்பு சிறப்புச் செய்யும்.

ராமன்ஷைத் தொடர்புகொள்ள: ramanshbajpai786@gmail.com

SCROLL FOR NEXT