ஒவ்வோர் அறைக்கும் வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதற்குமுன், வண்ணங்களின் ஆற்றலையும் அதிர்வுகளையும் தெரிந்துகொள்வது சிறந்தது. உதாரணத்துக்கு, கரும்பச்சை நிலைத்தன்மையையும், வான்நீலம் சுதந்திரத்தையும் வெளிப்படுத்துபவை. இப்படி, வீட்டின் ஒவ்வோர் அறைக்கும் வண்ணங்களால் சிகிச்சை அளிப்பதில் பல நன்மைகள் அடங்கியிருக்கின்றன.
படுக்கையறை
பலரும் படுக்கையறைக்கு ஆர்வத்தை வெளிப்படுத்தும் வண்ணம் என்பதால் சிவப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், சிவப்பு நெருப்பைக் குறிக்கும் வண்ணம் என்பதால் தூக்கமின்மையை ஏற்படுத்தும். அதனால், படுக்கையறைக்கு எப்போதும் பூமியைக் குறிக்கும் மென் நிறமான பிரவுன், நீலம், இளஞ்சிவப்பு போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
குழந்தைகள் அறை
குழந்தைகளின் படுக்கையறை கற்பனை, ஆற்றலைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அதனால், எலுமிச்சை பச்சை, இளம் மஞ்சள் போன்றவை குழந்தைகளின் ஆற்றலை வெளிக்கொண்டுவருவதற்கு ஏற்ற வண்ணங்கள். குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் இவை உதவும்.
வரவேற்பறை
வரவேற்பறை, குடும்பத்தினர், நண்பர்களுடன் பொழுதுபோக்குவதற்கான இடம். இந்த இடத்துக்கு வெள்ளையுடன், நீலம், பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களை இணைத்துப் பயன்படுத்தலாம். வரவேற்பறையை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த வண்ணங்கள் உதவும்.
பூஜை அறை
பூஜை அறைக்கு இளம்பச்சை, நீலம், மஞ்சள், ஊதா, வெள்ளை போன்ற வண்ணங்களை மென்மையான சாயலில் பயன்படுத்தலாம்.
சமையல் அறை
சமையல் அறை, நெருப்பு இருக்கும் இடம் என்பதால் சிவப்புப் பொருத்தமாக இருக்கும். அத்துடன், சிவப்புப் பசியைத் தூண்டும் வண்ணம். ஆனால், வெறும் சிவப்பு மட்டுமல்லாமல் வெள்ளை, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
குளியலறை
குளியலறைக்கு வெள்ளை, மஞ்சள், இளம்பச்சை, இளஞ்சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
கூரை
வீட்டின் கூரைக்கு எப்போதும் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.
வண்ணங்கள் அறிவோம்
# மென்மையான வண்ணங்கள் இடத்தைப் பெரிதாக்கிக் காட்டும். அடர் வண்ணங்கள் இடத்தைச் சிறிதாக்கிக் காட்டும்.
# சிவப்பு நிறத்தை அதிகமாகப் பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது. அதற்கு மாற்றாக ஆரஞ்சு வண்ணத்தைப் பயன்படுத்தலாம்.
# மனதை ஆற்றுப்படுத்த விரும்புபவர்கள் பச்சை நிறத்தைப் பயன்படுத்தலாம்.
# கற்பனை வளத்தை அதிகரிக்கும் வலிமை ஊதா நிறத்துக்கு உண்டு.
# பேஸ்டல் வண்ணங்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- கனி