சொந்த வீடு

சென்னை ரியல் எஸ்டேட்: வீழ்ச்சி அடையும் வீட்டு விற்பனை

செய்திப்பிரிவு

அனராக் ரியல் எஸ்டேட் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை இந்திய முக்கியமான ரியல் எஸ்டேட் மையங்களின் இரண்டாம் காலாண்டு குறித்து அலசி ஆராய்கிறது.

மும்பை, புனே, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தேசியத் தலைநகர்ப் பகுதிகள் ஆகிய எல்லாப் பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி அடைந்துள்ளது. இவற்றில் ஹைதராபாதில் கடந்த காலாண்டைக் காட்டிலும் வீட்டு விற்பனை 18 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பெங்களூருவில் 16 சதவீதம் அளவு வீட்டு விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் முறையே புனேயும் சென்னையும் இருக்கின்றன. புனேயில் 15 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் ஏற்பட்ட ரியல் எஸ்டேட் வீழ்ச்சியிலும் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை மட்டுமே தாக்குப் பிடித்து நின்றது. ஏற்றமும் இல்லாமல் இறக்குமும் இல்லாமல் ஒரே நிலையில் இருந்தது. இதைப் பல ஆய்வுகள் மேற்கோள் காட்டியுள்ளன. ஆனால், அந்தச் சென்னை வீட்டு விற்பனை இப்போது 13 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த அறிக்கை சொல்கிறது. சென்னையின் ஒட்டுமொத்த வீட்டு விற்பனையில் தென் சென்னைப் பகுதி 63 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாகச் சென்னையின் புதிய ரியல் எஸ்டேட் மையமான மேற்குச் சென்னை 23 சதவீதத்துடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.

புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவதில் தேசியத் தலைநகர்ப் பகுதி ரியல் எஸ்டேட்தான் முன்னிலையில் உள்ளது. முதலாம் காலாண்டைக் காட்டிலும் 69 சதவீதம் அளவில் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சென்னை, புதிய திட்டங்கள் தொடங்குவதில் முன்னிலையில் உள்ளது. 2018-ன் இறுதியில் ஜே.எல்.எல். ஆய்வு அறிக்கை சென்னையில் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது 51 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்ததாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.

சென்னையைப் பொறுத்த அளவில் ரியல் எஸ்டேட்டின் வளம் மிக்க பகுதியான தென்சென்னைப் பகுதியில் புதிய வீட்டுத் திட்டங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையின் ஒட்டுமொத்த வீட்டுக் குடியிருப்பில் 65 சதவீதம் இங்குதான் தொடங்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சென்னையின் புதிய ரியல் எஸ்டேட் மையமாக இருக்கும் மேற்குச் சென்னையில் 27 சதவீத வீட்டுக் குடியிருப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை சொல்கிறது.

அதுபோல் சென்னையில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கையும் 3 சதவீதம் அளவு அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கை சொல்கிறது. இந்திய அளவில் சென்னைதான் இதில் முன்னிலையில் இருக்கிறது.

முதலாம் காலாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் அளவு அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக பெங்களூருவில் முதலாம் காலாண்டைக் காட்டிலும் 22 சதவீதம் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது அதிகரித்துள்ளது. இந்திய அளவில் புனேயில்தான் புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவதில் பின்தங்கியுள்ளது. அங்கு புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது 39 சதவீதம் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மும்பையிலும் ஹைதராபாதிலும் 14 சதவீதம் அளவு புதிய வீட்டுத் திட்டங்கள் தொடங்குவது வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் தேக்க நிலை தொடர்ந்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததுபோல் ரியல் எஸ்டேட் தொழில் பெரும் பின்னடவைச் சந்திக்க நேரிடும்.

- விபின்

SCROLL FOR NEXT