தொகுப்பு: ச.ச.சிவசங்கர்
கெயிட்டி திரையரங்கம்
சென்னையில் சினிமா திரையிடுவதற்கென உருவான முதல் திரையரங்கம் கெயிட்டி எனச் சொல்லப்படுகிறது. இதில் சில சர்ச்சைகள் இருந்தாலும் கெயிட்டியின் பழமை நூற்றாண்டுகளைக் கடந்தது. 1912-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திரையரங்கம் 2005 வரை வெற்றிகரமாக இயங்கிவந்தது. இப்போது அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
உட்லேண்ட்ஸ்- டிரைவ்இன்
இதுதான் தென்னிந்தியாவின் முதல் டிரைவ்-இன் உணவகம். 1962-ம் ஆண்டு தொடங்கபட்ட இந்த உணவகம் 2008-ல் மூடப்பட்டது. தமிழ்நாடு அரசு தவாரவியல் பூங்கா அமைக்க இந்த இடத்தைக் கையகப்படுத்தியது. இன்று இந்த இடத்தில்தான் செம்மொழிப் பூங்கா அமைந்துள்ளது.
ஸ்பென்சர் பிளாசா
ஆங்கிலேயர்களால் 1864-ம் கட்டபட்ட ஸ்பென்சர் பிளாசா இந்தியாவின் முதல் பல்கடைப் பேரங்கட. சார்லஸ் டுரண்ட், ஜே.டபுள்யூ. ஸ்பென்சர் ஆகிய இருவர் இணைந்து இந்தப் பேரங்காடியை நிறுவியுள்ளனர். 1983-ல் நடந்த தீ விபத்தில் பழமையான ஸ்பென்சர் முழுவதும் சேதமடைந்துவிட்டது. மீண்டும் ஸ்பென்சர் கட்டப்பட்டு 1991-ம் திறக்கப்பட்டது. இன்றும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக ஸ்பென்சர் இருக்கிறது.
கலைவாணர் அரங்கம்
இந்தக் கட்டிடம் 1952-ல் சட்டமன்ற அவைக்காகக் கட்டப்பட்டது. அப்போது சென்னையின் சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆக இருந்தது. ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவான பிறகு சென்னை மாகாணத்தின் பல பகுதிகள் அதில் இணைந்தன. அதனால் எண்ணிக்கை 205ஆகக் குறைந்தது. 1956-ல் மீண்டும் கோட்டையே சட்டமன்ற அவையாக ஆனது. அதன்பிறகு இது பாலர் அரங்கமாக ஆக்கப்பட்டது. 1974-ல் தமிழக அரசு இதை கலைவாணர் அரங்கமாகப் புதுப்பித்தது. பிறகு அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்டு 2016-ல் இப்போதுள்ள கலைவாணர் அரங்கம் திறக்கப்பட்டது
சென்னை தினக் கண்காட்சி
சென்னை தினத்தை முன்னிட்டு தக்ஷன்சித்ராவில் ஒளிப்படக் கண்காட்சி நடந்துவருகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ரயில் சேவை, நிலையங்கள் எப்படி இருந்தன என்பதைச் சொல்லும் ஒளிப்படங்கள் இவை; ஆஸ்திரேலிய ஒளிப்படக் கலைஞர் இயன் மானிங் அவரது 23 வயதில் எடுத்த ஒளிச் சித்திரங்கள்.
கடந்த 17-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கவுள்ள இந்தக் கண்காட்சியில் அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சென்னையைச் சிறப்பித்துவருகின்றனர். இன்று நடைபெறவுள்ள அமர்வில் சென்னையின் பழமையான ரயில் நிலையங்கள் குறித்து அறிஞர்கள் பேசுகிறார்கள். இந்தக் கண்காட்சியை சென்னை ஆஸ்திரேலியத் தூதரகத்துடன் இணைந்து தக்ஷன்சித்ரா ஒருங்கிணைத்துள்ளது.