சொந்த வீடு

சின்ன அறையைப் பெரிதாக்கும் அலங்காரம்

கனி

சிறிய இடத்தை வடிவமைப்பதில் நிறைய சவால்கள் இருக்கின்றன. அதிலும், சின்ன வரவேற்பறையை வடிவமைப்பதற்குக் கூடுதல் வித்தைகளைக் கையாள வேண்டியிருக்கும். சிறிய அறைக்குப் பிரம்மாண்டமான தோற்றத்தை எப்படிக் கொடுக்கலாம்? என்ன மாதிரியான அறைக்கலன்களைத் தேர்ந்தெடுப்பது? எப்படிக் கூடுதல் இடத்தை உருவாக்குவது? சிறிய அறையை நிர்வகிப்பதற்கான ஆலோசனைகள்...

கண்ணாடியும் சுவரொட்டியும்

சிறிதாக இருக்கும் அறையில் ஜன்னல் இருந்தால் அதை வடிவமைப்பது எளிது. உங்கள் சிறிய அறையில் ஜன்னல் வெளிச்சத்தை அதிகமாகப் பிரதிபலிக்கும் சுவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சுவரை அழகான சுவரொட்டியால் அலங்கரியுங்கள். அதற்குப் பிறகு, சுவரில் கண்ணாடியைப் பொருத்துங்கள். ஜன்னலின் பிம்பம் கண்ணாடியில் பட்டு, அறையில் மற்றொரு ஜன்னல் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும். இது அறையைப் பெரிதாகக்காட்டும்.

பொருட்களை அடுக்கும் முறை

சிறிய அறையில் பொருட்களை அடுக்குவதற்கு இடம் குறைவாக இருக்கும். அதனால், அறையில் பொருட்களை அடுக்கும் வசதியுடன் இருக்கும் அறைக்கலன்களை வாங்கலாம். பொருட்களைத் தேவையான நேரத்தில் பயன்படுத்திவிட்டு, மற்ற நேரங்களில் அவற்றை அறைக்கலன்களுக்குள் வைத்துவிடலாம்.

உதாரணத்துக்கு, குளிர்காலத்தில் பயன்படும் கம்பளிகள் போன்றவை கோடைக் காலத்தில் தேவைப்படாது. அப்போது, அந்த அறைக்கலன்களுக்கு அவற்றை வைத்துக்கொள்ளலாம். அதேமாதிரி, காஃபி மேசை, டிவி மேசை என மேசைகளில் பொருட்களை வைக்கும் வசதியுடன் இருப்பதைப் பயன்படுத்தலாம். இதனால், பொருட்களை வைப்பதற்கான இடப்பற்றாக்குறை பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

சிறிய அறைக்கலன்கள்

உங்களுடைய சிறிய வரவேற்பறைக்கு ஏற்றது சிறிய அறைக்கலன்களே. அதனால் பெரிய சோஃபாக்கள், கை வைத்த நாற்காலிகளைத் தவிர்ப்பது நல்லது. சிறிய அறைக்கலன்கள் அறைக்கு விசாலமான தோற்றத்தைக் கொடுக்க உதவும்.

பெரிய கூரைகள்

உங்கள் சிறிய அறையில் பெரிய கூரை கள் இருந்தால் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அறையின் உயரமான சுவற்றை ஆர்ட் கேலரியாக மாற்றிவிடுங்கள். இதனால் சிறிய அறை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும்.

அறையின் மூலை

சிறிய அறையின் மூலையை முழுவதுமாகப் பயன்படுத்த முடியும். உங்கள் அறையின் மூலையில் ‘கார்னர் சோஃபா’வைப் பயன்படுத்தலாம். இந்த சோஃபா பெரிதாக இருந்தாலும், அறையின் மூலையில் பயன்படுத்துவதால் இடத்தை அடைத்துக்கொள்ளாது. அறைக்கு நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்க இந்த ‘கார்னர் சோஃபா’ உதவும். அத்துடன், விருந்தினர்கள் அதிகமாக வந்தாலும் சமாளித்துவிடலாம். அதே மாதிரி, சாயும் வசதியில்லாத சோஃபாக்களும் சிறிய வரவேற்பறைக்கு ஏற்றவை.

செடிகள் முக்கியம்

சுவரோட்டிகள், கண்ணாடிகள் போல செடிகளும் சிறிய அறைக்கு ஒருவிதமான ஆழமான தோற்றத்தைக் கொடுக்கும். இந்தச் செடிகளை நாற்காலிகள், சோஃபாக்களுக்கு அருகில் வைப்பதைவிட அறையின் மூலையில் பயன்படுத்தலாம்.

மடக்கும் நாற்காலிகள்

அறையில் எல்லா நாற்காலிகளையும் போட்டுவைக்க வேண்டும் என்ற அவசியமல்ல. விருந்தினர்கள் வந்தவுடன் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு மடக்கும் நாற்காலிகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த நாற்காலி களால் இடப்பற்றாக்குறை வராது.

கண்ணுக்குத் தெரியாத பொருட்கள்

சிறிய அறையில் கண்ணாடி, அக்ரிலிக் போன்றவற்றாலான பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தலாம். இந்தப் பொருட்கள் அறையில் அதிகமான பொருட்கள் இல்லாத தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி காஃபி மேசை இதற்குச் சிறந்த உதாரணம்.

SCROLL FOR NEXT