சொந்த வீடு

380 வயது இளமை

செய்திப்பிரிவு

விபின்

சென்னை நிறுவப்பட்டு 380 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இவ்வளவு ஆண்டு மூப்புடைய இந்த நகரம் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்துள்ளது என்பதை சென்னையின் வரலாற்றைப் புரட்டும்போது புலனாகும். அதற்குச் சாட்சியங்கள் இந்த நகரத்தின் பழமைவாய்ந்த கட்டிடங்களே. எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதி மன்றக் கட்டிடம், ரிப்பன் மாளிகை, அதற்கு அருகில் உள்ள விக்டோரியா ஹால் எனப் பல கட்டிடங்கள் சென்னையின் இந்தப் பழமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

கி.பி. 1639-ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி சென்னைப்பட்டினத்தை வாங்கியதையே சென்னையின் பிறந்த நாளாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், சென்னை அப்போதுதான் பிறந்ததா என்ன? அதற்கும் முன் அங்கு ஊர் இருந்திருக்கும். மனிதர்கள் வாழ்ந்திருப்பார்கள். ‘இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ எனப் பாரதி தமிழுக்குச் சொன்னது சென்னைக்கும் பொருந்தக்கூடியது. சென்னையின் வரலாறு அவ்வளவு பழமையானது. இவ்வளவு பழமையான சென்னை இன்று புதிதாய்ப் பிறந்தவள் போன்ற தன்மையும் கொண்டது. சென்னைக்கு இந்தப் புதுமையைச் சேர்ப்பவையும் அதன் புதிய அலங்காரங்களான கட்டிடங்களே. அப்படியான புதிய கட்டிடங்களைப் பற்றிய ஒளிப்படத் தொகுப்பு இது:

அண்ணா நூற்றாண்டு நூலகம்

உலகின் பெரிய நூலகங்களில் ஒன்றான இது 3.75 லட்சம் சதுர அடியில் உருவாக்கப் பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட இந்த நூலகம் ஆசியாவின் முதல் பசுமை நூலகக் கட்டிடமாகும். இந்த நூலகத்தில் அரங்கம், வாசிப்பு அறை, உணவகம் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கொண்டது.
கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம்
இந்தப் பேருந்து நிலையம், 37 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய பேருந்து நிலையமாகும். 160 பேருந்து நிறுத்த மேடைகளைக் கொண்டது இந்தப் பேருந்து நிலையம். மெட்ரோ ரயில் நிலையம், நகரப் பேருந்து நிலையம் போன்ற வசதிகளையும் தன்னதகத்தெ கொண்டுள்ளது.

கத்திபாரா மேம்பாலம்

ஆசியாவின் மிகப் பெரிய மேம்பாலங்களில் ஒன்று இது. 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மேம்பாலம் 6 பிரிவுப் பாதைகளைக் கொண்டது. வண்ணத்துப்பூச்சி வடிவத்தைக் கொண்ட இந்த மேம்பாலம் அண்ணா சாலை, ஜி.எஸ்.டி. சாலை, ஜவாஹர்லால் நேரு சாலை, பட் சாலை ஆகிய சாலைகளை இணைக்கிறது. 40,000 சதுர மீட்டரில் இது அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ

ஆலந்தூர், சென்ட்ரல் ஆகிய இரண்டு முனைகளைக் கொண்டு சென்னை நகருக்குள் இரு பிரிவுகளாகப் பாய்ந்து செல்கிறது சென்னை மெட்ரோ. இதன் முதல் சேவை 2015-ல் தொடங்கப்பட்டது. விமான நிலையம், கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையம், புறநகர் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய முக்கிய மையங்களை இந்த மெட்ரோ வழித்தடம் இணைக்கிறது. நிலத்துக்கு அடியிலும் மேலுமாகச் செல்லும் மெட்ரோ சென்னையின் புதிய அடையாளங்களுள் ஒன்று.

டைடல் பூங்கா

சென்னையின் புதிய அடையாளங்களுள் தனித்துவம் கொண்டது இது. சென்னையின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய மென்பொருள் துறை வளர்ச்சியில் இந்தக் கட்டிடத்துக்கு முக்கியப் பங்குண்டு. மென்பொருள் நிறுவனங்களுக்காகக் கட்டப்பட்ட இந்தப் பூங்கா, 1,19,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் 2000-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

செம்மொழிப் பூங்கா

2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தப் பூங்கா, 20 ஏக்கர் பரப்பளவில் சென்னை நகரின் மையப் பகுதியில் அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் அமைந்துள்ளது. தாவரவியல் பூங்காவான இதில் 500-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. பூங்கா அமைக்கப்படுவதற்கு முன்பு அங்கிருந்த 80 மரங்களும் இந்தப் பூங்காவின் பகுதியாக இணைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT