சொந்த வீடு

வீடு வாங்கும்முன் வழக்கறிஞரை நாடுங்கள்

செய்திப்பிரிவு

ஜி.எஸ்.எஸ்.

நீங்கள் ஒரு வீட்டை வாங்கத் தீர்மானித்தால் அதற்கான விலையை விற்பவர் கூறுவார். ஒத்துக்கொண்டால் அந்த வீடு தொடர்பான ஆவணங்களைக் கொடுப்பார் சிலர் ஒரு சிறு தொகையையாவது அளித்தால்தான் அந்த ஆவணங்களின் பிரதிகளைக் கொடுப்பார்கள். இந்த ஆவணங்களை எல்லாம் படித்துப் பார்ப்பதே உங்களால் இயலாததாக இருக்கும். அவற்றைச் சட்டத்தின் பார்வையில் புரிந்துகொள்வது என்பது கிட்டத்தட்ட இயலாது என்றே கூறிவிடலாம். தவிர இதற்கான நேரம் என்பதும் உங்களுக்கு மிகக் குறைவாகவே இருக்கும்.

“சீக்கிரம் உங்கள் முடிவைச் சொல்லுங்கள்” என்று விற்பவர் உங்களை அவசரப்படுத்தலாம். அல்லது விரைவில் நம் முடிவைக் கூறாவிட்டால் வேறு யாருக்காவது இந்த வீடு விற்கப்பட்டு விடும் என்று உங்களுக்கே பதற்றம் உண்டாகலாம்.

நம்மில் பலரும் நமது சேமிப்பின் மிகப் பெரும் பகுதியை வீடு வாங்குவதில்தான் செலவழிக்கிறோம். இது தொடர்பான பரிவர்த்தனைகளில் பல ஆவணங்களில் கையெழுத்துப் போடுகிறோம். ஆனால் பெரும்பான்மையான ஆவணங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது நமக்கு முழுமையாகத் தெரியாது. எதையாவது தவறாகப் புரிந்துகொண்டால் அது மீள முடியாத சிக்கலில் கொண்டு விடலாம்.

இந்த நிலையில்தான் வழக்கறிஞரின் கருத்து (Legal opinion) ஒன்றைப் பெறுவது தேவைப்படுகிறது. வீட்டுக் கடனுக்காக வங்கியை அணுகினால்கூட தங்கள் வங்கி அங்கீகரித்த வழக்கறிஞர்கள் பட்டியலை நீட்டி அவர்களில் ஒருவரிடமிருந்து மேற்படிச் சான்றிதழைப் பெற்றுத்தர வேண்டும் என்பார்கள்.
இதற்காகத்தான் ஒரு வழக்கறிஞரிடமிருந்து ‘இந்த வீட்டை வாங்கலாம். இது வாங்கத் தகுந்ததுதான். இதை விற்க குறிப்பிடவருக்கு முழு உரிமை உண்டு’ என்று ஒரு சான்றிதழைப் பெறுவது அவசியமாகிறது.

இதில் பல நுட்பங்கள் உள்ளன. ஒரு வீடு கைமாறும்போது, அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால் அத்தனை பேரும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். குறிப்பிட்ட வீடு அடுத்தடுத்து பலரிடம் கைமாறும்போதும் ஒவ்வொரு முறையும் இந்த நிபந்தனை பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் விற்பவருக்கு அதை விற்பதற்கான உரிமை குறைபாடுள்ளதாகக் கருதப்படும் (Defective Title).
இதன் காரணமாக வருங்காலத்தில் உங்களுக்குச் சிக்கல் நேரலாம். அந்த
வீட்டையே பறிகொடுக்கும் நிலைக்குக்கூடப் போகலாம்.

வழக்கறிஞர் கீழே உள்ள கோணங்களில் ஆவணங்களைச் சரிபார்ப்பார். # இப்போது அந்த வீடு ஏதாவது அடமானத்தில் இருக்கிறதா?
# அந்த வீட்டைப் பொறுத்தவரை மைனர்களின் உரிமை என்று இருந்து அது மீறப்பட்டுள்ளதா?
# எந்தவிதத்திலாவது வீட்டுப் பரிவர்த்தனைகளில் வில்லங்கம் உண்டாகி இருக்கிறதா?
# நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் அதற்கு இருக்கிறதா, விதிமீறல் எதுவும் இல்லையா?
# பட்டா போன்ற உரிய ஆவணங்கள் அதற்கு உள்ளனவா?
# சொத்துவரி, தண்ணீர் வரி போன்றவை முறையாகச் செலுத்தப்பட்டுள்ளனவா?
# நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் அது வராமல் இருக்கிறதா?
# தடைசெய்யப்பட்ட பகுதியில் (கடற்கரை ஓரம், தொழிற்பகுதி, விவசாய நிலம் போன்றவை) அந்த வீடு எழுப்பப்படாமல் இருக்கிறதா?
# வீட்டின் உரிமையாளர் இறந்திருந்தால் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்றவை பெறப்பட்டுள்ளனவா?
# குத்தகை, யாரையாவது குடியிருக்க வைத்தல் போன்றவை இருந்து அவை வீடு விற்பதற்கான உரிமையைத் தடைசெய்கிறதா?

இவற்றையெல்லாம் சரிபார்த்து வழக்கறிஞர்,“எல்லாம் சரியாக இருக்கிறது. நீங்கள் வீட்டை வாங்கலாம்’’ என்று சான்றிதழ் அளிப்பார். அப்படி அளித்தபோதிலும் இதில் வேறொரு கோணத்திலும் முன்னெச்சரிக்கை தேவை.
விற்பவர் வசமுள்ள மூலப் பத்திரங்களும், உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள நகல்களும் ஒன்றோடொன்று ஒத்துப் போகிறதா என்பதை நீங்கள் சரிபார்ப்பது அவசியம். விற்பவர் மூல ஆவணங்களை அளிக்க மறுக்கலாம் என்பதால் அவரது இடத்துக்கே சென்று இதை சரிபார்க்க வேண்டும். கூடவே வழக்கறிஞரையோ அவர் ஜூனியரையோ அழைத்துச் செல்லுங்கள்.

SCROLL FOR NEXT