முகேஷ்
பூமியின் வெப்பநிலை இன்றைக்கு பல்வேறு காரணங்களால் அதிகரித்துக்கொண்டே போகிறது. அந்தக் காரணங்களுள் ஒன்று கட்டுமானத் துறை. உலகின் வளர்ச்சி மிக்க ஒரு துறையாக இருக்கும் இதனால் அதிகமான வெப்பம் உமிழப்படுகிறது. கட்டுமானப் பொருட்களான செங்கல், சிமெண்ட், கம்பி உள்ளிட்டவை தயாரிக்க ஆகும் வெப்ப ஆற்றல் செலவால் மிக அதிகமான வெப்பம் வெளியாகிறது. இதைத் தடுக்கும் ஒரு தொழில் நுட்பம்தான் ‘ஜீரோ எனர்ஜி வீடு’.
ஜீரோ எனர்ஜி என்பதிலிருந்து ஆற்றலைக் குறைவாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் இது எனப் புரிந்துகொள்ள முடியும். கட்டுமானத்துக்கு இயந்திரம், மின்சாரம் போன்ற ஆற்றல்களைக் குறைந்த அளவில் பயன்படுத்திக் கட்டிடப் பணிகளை மேற்கொள்ளும் தொழில் நுட்பம்தான் இது. ஆற்றல்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ஆனால் இயற்கையைப் பயன்படுத்தி கூடியவரை செயற்கையான ஆற்றலைத் தவிர்க்க முடியும். அதற்கான தொழில்நுட்பம்தான் இது.
அமெரிக்காவில் இந்தத் தொழில்நுட்பத்தில் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மற்ற உலக நாடுகளில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நம்முடைய பாரம்பரிய கட்டுமானக் கலை ஒருவிதத்தில் ஜீரோ எனர்ஜி தொழில்நுட்பம்தான். மண்ணைக் குழைத்து வீடு கட்டும் வழக்கம் நமது சமூகத்தில் இருந்தது. மேலும் அந்தந்தப் பகுதியில் என்ன பொருள் கிடைக்கிறதோ அதையே கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தும் பழக்கமும் இருந்தது. இதனால் போக்குவரத்துச் செலவு மிச்சமாகும். பொருட்களை இடமாற்றுக்குவதற்கு உண்டான வாகன அலைச்சல் மிச்சம். மேலும் சிமெண்ட்டுக்குப் பதில் மண்ணும் கம்பிக்கும்ப் பதில் பனை மரமும் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. கிட்டதட்ட இதேபோன்ற தொழில்நுட்பம்தான் இதுவும்.
ஜீரோ எனர்ஜி வழிமுறையைப் பின்பற்றுவதால் தேவைப்படும் மூலப் பொருட்களின் அளவையும் கணிசமாகக் குறைக்கலாம். ஆற்றலுக்கான செலவுகள் என்று எடுத்துக் கொண்டால் ஆட்கூலி முதல் பெட்ரோலுக்கும் மின்சாரத்துக்கு ஆகும் செலவுகள் எல்லாமே கணக்கில் வந்துவிடும். கட்டுமானத்தின் தரமும் கூடுகின்றன. இயன்ற வரை இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, மின்சாரத்தை எதிர்பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பல எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதால், கிடைப்பதைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் கவனம் செலுத்தினால் வேறு பல வேலைகளையும் தேவைகளையும் குறைக்கலாம்.