சொந்த வீடு

படுக்கையறைப் பக்கவாட்டு மேஜைகள்

செய்திப்பிரிவு

விபின் 

படுக்கையறைக்கு அழகு சேர்க்கும் அறைக்கலன்களில் ஒன்று பக்கவாட்டு மேஜை (Side Table). இது மேற்கத்திய அறைக்கலங்களில் ஒன்று. ஆனால் சீனாவில் இதே போல் படுக்கையறை மேஜைகளைப் பயன்படுத்தும் பண்பாடும் இருந்திருக்கிறது. தொடக்க காலத்தில் இந்தப் படுக்கையறை மேஜை நைட்ஸ் ஸ்டாண்ட் (NightsStand) என்ற பெயரில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த மேஜை பெரும்பாலும் விளக்குகள் வைப்பதற்கும் அலங்காரச் செடிகள் வைப்பதற்கும் பயன்பட்டுவந்தது.

ஆனால், இப்போது இந்த மேஜைகள் விளக்குகள், அலங்காரப் பொருட்கள் மட்டுமல்லாது ஒளிப்படங்கள், புத்தகங்கள் வைப்பதற்கும் பயன்படுகின்றன. இந்த மேஜை இழுப்பறையுடனும் (Drawers) வடிவமைக்கப்படுவதால் அதிலும் நமக்குத் தேவையான பொருட்களை வைத்துக்கொள்ள முடியும். இந்த மேஜையில் வடிவமைப்பு, பயன்பாடு ஆகிய அம்சங்களைப் பொறுத்துப் பல வகை உண்டு. இழுப்பறை படுக்கையறை மேஜை, அலமாரி படுக்கையறை மேஜை, நைட்ஸ்டாண்ட் மேஜை ஆகியவை அவற்றுள் முக்கியமானவை.

நைட்ஸ்டாண்ட் மேஜை

இந்த வகை பெரும்பாலும் இழுப்பறை, அலமாரி அற்றவையாக இருக்கும். இல்லையெனில் ஒரு இழுப்பறை மட்டும் கொண்டதாக இருக்கும்.  இந்த வகை பெரும்பாலும் படுக்கையறை அழகுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

இழுப்பறை படுக்கையறை மேஜை

இந்த வகை மேஜை இழுப்பறைகளுடன் கூடியது. உயரத்தைப் பொறுத்து மூன்று, நான்கு, அதனினும் கூடுதல் இழுப்பறைகள் இந்த மேஜையில் இருக்கும். டிவி ரிமோட், ஏசி ரிமோட் போன்றவற்றை இந்த இழுப்பறைகளுக்குள் வைத்துக்கொள்ள முடியும். இன்னும் இருக்கும் இழுப்பறைகளில் புத்தகம், நாட்குறிப்பு போன்ற பலவற்றையும் வைத்துக்கொள்ள முடியும்.

அலமாரி படுக்கையறை மேஜை

இந்த வகை மேஜை, ஒரு இழுப்பறை, ஒரு அலமாரி ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். இந்த இழுப்பறையில் டிவி ரிமோட், ஏசி ரிமோட் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம். அலமாரிப் பகுதியில் கூடுதல் அத்தியாவசியப் பொருட்களை வைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக மாற்றுவதற்கான படுக்கை விரிப்பை மடித்துவைத்துக்கொள்ள முடியும். தண்ணீர்க் குடுவை போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம்.

SCROLL FOR NEXT